குலதெய்வ வழிபாட்டில் பிரதானமானது எது?


குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போக கூடாது. குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்க கூடாது - இதெல்லாம் கிராமத்தில் பேசப்படும் பழமொழிகள். இவை குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. குல தெய்வங்கள் என்பவை வெறும் வாய்வழிக் கதைகளின் நாயகர்கள் அல்ல; அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ, நமக்கு நினைவுறுத்த, பெரியவர்கள் குல தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். குல தெய்வங்களாக சிறு தெய்வங்களே பெருமளவில் விளங்குகின்றன.

இந்த தெய்வங்களை வழிபட மரபுகள் உள்ளன. பெருங்கோயில்கள் போன்று நினைத்த நாளில் சென்று வழிபட வாய்ப்புகள் குறைவு. காரணம் பல குல தெய்வ கோயில்களில் நித்திய பூஜை இருப்பதில்லை, கோயில்களும் மலை, ஆறு, குளம், கண்மாய், காடு போன்ற இடங்களில்தான் இருக்கும். அதற்கு சரியான போக்குவரத்து இருக்காது. இந்த குல தெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின் போதும், இன்னொன்று பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்ளச் சொல்லிகொடுத்திருக்கிறார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். அன்று பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.

ஆக, இப்போது பெண்ணுருவில் இருக்கும் நீர் என் பார்வதிதேவியின்றி, வேறில்லை என்று கூறினார். பின்பு ஹரிஹர சக்திகள் சங்கமமாகியது. விளைவாக மஹா சாஸ்தா அவதரித்தார். அந்த நாளே பங்குனி உத்திரம் என்று கூறப்படுகிறது. சாஸ்தா எனும் நாமத்துக்கு ஏற்ப அனைத்துலகங்களையும் காத்து ரட்சிக்கும் பொறுப்பை ஈசன் அளித்தார். ஸ்திதி - சம்ஹார மூர்த்திகளின் ஒருங்கிணைந்த சக்தியாக, உலகங்களை ஆட்சி புரியும்படி புவனேஸ்வரனாக பட்டம் சூட்டினார். இதன் பின்னர் ஐயன் சிவ சக்தியரை வலம் வந்து வணங்கி, பூலோகம் செல்ல புறப்பட்டார். காஞ்சிபுரம் வந்த சாஸ்தா, ஈசனை லிங்கமாக்கி பூஜித்தார்.

சாஸ்தா சிவன், சக்தி, விஷ்ணு, மஹாலட்சுமி, பிரம்மன், கலைவாணி என முச்சக்திகளையும் உள்ளடக்கிய மாபெரும் சக்தி, அனைத்து பூத சேனைகளும், சிவன், விஷ்ணுவின் ஏவலர்கள், இயக்கியர்கள்(மாடன்கள், மாடத்தியர்கள்) இவர்கள் எல்லோரும் சாஸ்தாவின் அன்பு கட்டளை ஏற்றே செயல்படுபவர்கள். சாந்த சொரூபத்திலிருக்கும் சாஸ்தா, ஆங்கார ரூபத்தில் அய்யனார் ஆகிறார். சாஸ்தாவிற்கு எழுப்படும் ஆலயங்கள் அவருடன் குறைந்தது 21 சைன்யங்கள் நிலைபெற்றிருப்பர். சாஸ்தா தனித்து இருப்பதில்லை. அவ்வாறு இருந்தால் காவலுக்கு, பூதத்தார் மற்றும் கருப்பன், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் ஆகிய நாமங்களில் எவரேனும் ஒருவர் இருப்பர்.

சாஸ்தா வழிபாடுக்கு முந்தைய நாள் வீடு, வாசலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தம்பதியர் முந்தைய நாள் இரவு தாம்பத்யம் வைத்திருக்கக் கூடாது. அவருக்கு தேவையான பூஜைப்பொருள்களை வீட்டில் வாங்கி வைத்து மறுநாள் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டும். குலசாமிகளும், அவரோடு சாஸ்தாவும் குடும்பமாக இருந்து நமக்கு அருள்வார். கோயிலுக்கு செல்லும்போது உடன் பிறந்தவர்கள், பெற்றோரோடு செல்லவேண்டும். திருமணம் செய்து கொடுத்த பெண் பிள்ளைகள் கணவர் வீட்டு சாஸ்தா கோயிலுக்குத்தான் பாத்தியப்பட்டவர்களாவர்கள்.

ஆண் பிள்ளைகள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும், தாய், தந்தையினரோடுதான் செல்ல வேண்டும். மாமியார், மருமகள் உறவு சரியில்லை என்பதற்காக பெற்றோரை விட்டு விட்டு மனைவி, குழந்தைகளோடு தாய், தந்தை மற்றும் பங்காளிகளை விட்டு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் அதை தெய்வம் ஏற்காது. எந்த பலனும் கிடைக்காது. இதுதான் குல தெய்வ வழிபாட்டில் முக்கியமான ஒன்று. தேங்காய், பழம் கொண்ட அர்ச்சனைகளை மட்டும் குலதெய்வம் விரும்புவது இல்லை.

காலையில் அந்தணரைக்கொண்டு கணபதி ஹோமம், அடுத்து மூலவர் முதல் பரிவார தெய்வங்களுக்கு நீர், எண்ணெய், மஞ்சள், இளநீர், பால் உள்ளிட்ட அனைத்து அபிஷேகமும் செய்து (மண் சிலைகளாக இருந்தால் வேண்டாம்) அதன் பின்பு மூலவர் சாஸ்தா மற்றும் பூதத்தார், சிவணினைந்த பெருமாள், தம்பிரான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சைவமும், மாடன், அம்மன் ஆகியோருக்கு அசைவமும் படைத்து, பல வகை மலர்மாலைகள் அலங்கரித்து, சாம்பிராணி வாசம் மிகுதியாக பூஜை நடைபெற வேண்டும். இவற்றையெல்லாம் விட கண்டிப்பாக கோயிலில் அடுப்பு கூட்டி சமையல் செய்து, அங்கே பந்தி பரிமாறி உணவு அருந்த வேண்டும். அதுவே குலதெய்வ வழிபாட்டில் பிரதானமானதாகும்.
 



Leave a Comment