வினைகள் யாவுமே நல்வினையாக மாற பங்குனி உத்திர குலதெய்வ வழிபாடு


மற்ற தெய்வத்திற்கும், குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள். குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள். ‘குல தெய்வ சந்நதியில் குறை சொல்லி அழுதபடி, கண்ணீர் சிந்திப்பார். மறு கணமே அதற்கு தீர்வு கிடைக்கும்,’ என்பார்கள். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி அன்று வழிபடுவது மிகுந்த பலனைத்தரும்; நம் குலம் சிறப்பதோடு குடும்பமும் மேன்மை பெறும். 

குல தெய்வங்கள் மனம் மகிழந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

குல தெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்தது. அண்ணன், தம்பி, குடும்பத்தினர் எல்லாரும், ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமன்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். 

கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குல தெய்வ கோயில் இருக்கும். எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். நகர்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம்.

அத்தகையவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது. உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு பவுர்ணமி தோறும் இதை செய்து வந்தால் பவுர்ணமி போல் உங்கள் வாழ்க்கையும் பிரகாசிக்கும். நீங்கள் ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்வது நல்லது.

குலதெய்வப் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மணிப்பர்சிலும் வைத்துக்கொள்ளலாம். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன் குல தெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். ஒருவருக்கு குலதெய்வம் இசக்கியம்மன் என்று வைத்துக் கொள்வோம் அது ஊருக்குள்ளேயே இருக்கும். அவர் அங்கு செல்ல முடியவில்லை என்பதற்கு இசக்கியம்மனும் சக்தியின் அவதாரம் தான் என எண்ணி, அருகிலிருக்கும் காளிகாம்பாள் கோயிலில் சென்று தனது நேர்த்திக் கடனை செலுத்தினால் அது குலதெய்வத்தை போய் சேராது.

 குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது. அல்லது வரும் வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்படிப்பட்ட மகானை வைத்து வழிபட்டாலும் அந்த வீட்டில் விமோசனம் கிடைப்பதில்லை என்பார்கள். பாரம்பரிய வழக்கத்தை மீறாமல், மாற்றாமல் வணங்கவேண்டியது முக்கியம். குல தெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் காலபைரவர் சந்நதியில் வியாழக்கிழமை அன்று குருஓரையின் போது அர்ச்சனை செய்து தனக்கு குல தெய்வத்தை காட்டும்படி வேண்டலாம். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு அகத்திக்கீரையை உணவாகக் கொடுக்கலாம்.



Leave a Comment