40 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி தந்த அத்தி வரதர்.... ஜூலை 1 முதல் பக்தர்கள் தரிசிக்கலாம்....


கோவிந்தா.... கோவிந்தா.... பக்தி கோஷம் முழங்க 40 ஆண்டுகளுக்கு பின்னர்  அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டது. 

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் நீருக்குள் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ம் ஆண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது.

 
தற்போது 40 ஆண்டு களுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்த விழா வருகிற 1-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 17-ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அத்திவரதர் விழாவுக்காக அத்திவரதர் சிலையை திருக்குளத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக குளத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. பின்னர் சேறு, சகதிகளை அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடந்து வந்தன.

இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலையை அர்ச்சகர்கள் வெளியே எடுத்து வந்தனர். பின்னர் சிலையை வசந்த மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அத்தி வரதருக்கு சிறப்பு பூஜைகள், சடங்குகள் நடந்து வருகின்றன.

அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு தற்போது அனுமதி கிடையாது. வருகிற 1-ந்தேதி காலை முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலிக்கிறார்.
 



Leave a Comment