சிவபெருமான்  திரிபுரத்தை சிரித்தே அழித்த நாள்.... 


சிவபெருமான் இத்தினத்தில் தான் மும்மலங்களாகிய திரிபுரத்தை சிரித்தே அழித்தார். அதை விரிவாகப் பார்க்கலாம். ஒருகால கட்டத்தில் தாரகாக்ஷன், வித்யுன்மாலி, கமலாக்ஷன் என்ற பெயர்களுடைய மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் பிரம்ம தேவனைக் குறித்து தவம் இருந்து, சிரஞ்சீவித் தன்மை வேண்டினர். ஆனால் பிரம்மனோ அது சர்வேஸ்வரனாகிய சிவபிரானுக்கு மட்டுமே உரித்தது எனக் கூறி, வேறு ஏதாவது கேட்கச் சொன்னார்.

அதன்படி மூவரும் விண், மண், நடு ஆகிய மூன்று இடங்களிலும் சஞ்சாரம் செய்யக் கூடிய, பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களினால் ஆன அழிவில்லாக் கோட்டைகளைக் கேட்டனர். “தை மாதத்தின் பூச நட்சத்திரத்தின் போது, முப்புரங்களும் ஒரே இடத்திற்கு, ஒரு கணத்தில் ஒரு சிறிய பகுதி நேரத்திற்கு வரும்போது சிவனால் மட்டும் அழிக்கக் கூடியதான கோட்டைகளை வேண்டுமானால் தருகிறேன்’  எனக் கூறி, பிரம்மனும் வரம் கொடுத்தார். மயன் மூலமாக நகரம் நிர்மாணிக்கப்பட்டது. அவற்றுடன் சகலவிதமான போகங்களும் செல்வங்களும் அளித்து, அசுரர்களுக்கு மிகுந்த வீரமும் தைரியமும் கிடைக்க பிரம்மா அருளினார். யாவையும் நிர்மாணித்த மயன் அசுரர்களுக்கு நல்ல புத்திமதிகளையும் செய்தார்.

“தேவர்களுக்குத் தேவனான சிவனை சிவலிங்க ரூபமாக வழிபட்டு, இறைவனின் அன்பைப் பெறுதல் வேண்டும். வழிபட்டவர்களுக்கு நன்மையும், எதிரிகளுக்கு அழிவையும் தருபவன் சிவன் ஆவான்,” எனக் கூறி பூஜைக்குரிய சிவலிங்கங்களையும் அசுரர்களுக்குக் கொடுத்தார். அசுரர்களும் நியம நிஷ்டைகளுடன் சிவ பூஜை செய்து அவர்களுக்கு வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு தேவர்களையும், தேவிகளையும் அவர்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு, முழு உலகங்களுக்கும் அந்தப் பறக்கும் கோட்டைகளை இறக்கி, அமர்ந்து, அங்கிருந்தவர்களை நொறுக்கி அழித்து, கொடுமை செய்தனர். இதனால் வருத்தமுற்ற விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள் முதலியோர் யாவரும் மேரு மலையில் கூடி, யாகம் செய்வதற்கு முடிவெடுத்தனர்.

யாகத்தினின்றும் வெளிவந்த பூதங்கள் யாவும், அசுரர்களை அழிக்க முடியாது அழிந்து போயின. தங்களை அழிக்க பூதங்களை ஏவியதால் கோபமடைந்த அசுரர்கள், தேவர்கள் யாவரையும் மேலும் மேலும் துன்புறுத்தினர். அதனால் தேவர்கள் பயந்து இங்குமங்கும் அலைந்து ஓடி ஒளியும் நிலைமைக்கு ஆளாயினர். மீண்டும் திரிபுராதியர்கள் நியம நிஷ்டையுடன் செய்த சிவபூஜையினால்தான் வலுவாக இருந்த அவர்களை தோற்கடிக்க முடியவில்லை என எண்ணிய விஷ்ணுவும், பிரம்மாவும், அவர்களை சிவபூஜை செய்யாதிருக்க ஏதாவது தந்திரம் செய்ய எண்ணி, விஷ்ணு புத்தராகவும், பிரம்மன் சீடனாகவும் அவதரித்து, அசுரர்களுக்கு அநாசார போதனைகளைச் செய்து, அவர்களைத் தீவிர சிவ உபாசனைகளினின்றும் வழுவிடச் செய்தனர்.

ஆனால், திரிபுராதி சகோதரர்கள் மட்டும் இந்தப் புரட்டுக்கு மயங்காது, சிவ பூஜை செய்வதில் தீவிரமாக இருந்தனர். இதைக் கண்டு திடுக்குற்ற நாராயணனும், மற்ற தேவர்களும் மானசரோவர் ஏரிக்குச் சென்று, கழுத்தளவு நீரில் நின்று, ஸ்ரீ ருத்ர மந்திரத்தை ஜெபித்தனர். அதைக் கண்ணுற்ற சிவபிரான் அவர்கள் எதிரில் தோன்றி, “விரஜா ஹோமம் செய்து பெற்ற திருநீறை அணிந்து, பாசு பத விரதத்தை மேற்கொண்டால், நினைத்தது நிறைவேறும்” எனக் கூறி அருளினார். அப்பொழுது குழந்தை முருகன் தன் தந்தை மடிமீது ஆனந்தத் தாண்டவம் ஆடினார். சிவபிரான் கூறியபடியே அவர்கள் பாசு பத விரதத்தை மேற்கொண்டனர். யுத்தத்துக்கு வேண்டிய ஆயுதங்களையும், தேர், வில், மற்ற அஸ்திரங்கள் போன்றவைகளையும் நந்தி தேவர் மூலமாக சிவபிரான் தேவர்களுக்கு அனுப்பி வைத்தார். பின் தேவர்களும் யுத்தத்திற்கு ஆயத்தமாயினர்.

மேரு மலையை வில்லாக்கி, ஆதி சேஷனை நாணாக்கி, மகாவிஷ்ணுவை அம்பு முனையாக்கி, வாயுவை அம்பின் தண்டாக்கி, அக்னி தேவனை அம்பின் பின் முனையாக்கி, விந்திய மலையை தேரின் அச்சாக்கி, கேசரி கிரியை அச்சின் குப்பியாக்கி, பூமியை தேரின் ஆசனமாக்கி, ஆகாயத்தை தேரின் உட்புறமாக்கி, சூரிய சந்திரர்களைத் தேரின் சக்கரங்களாக்கி, நான்கு வேதங்களையும் தேரின் முன் குதிரைகளாக்கி, யுத்தத்திற்குத் தயாராயினர். தேவர்களும், அவர்களின் தலைவர்களும் சேனைகளாயினர். நந்தி தேவர் இவ்விவரங்களை சிவபிரானுக்குக் கூற, அவரும் தன் கையில் வில்லையும், அம்பையும் ஏந்தி, தேரின் மீது ஏறினார். ஆனால் ஏறிய உடனேயே தேரின் அச்சு முறிந்து, தேர் பூமியில் அழுந்தியது.

தேர் மேலும் அழுந்தாதிருக்க திருமால் காளை வடிவம் பூண்டு தேரைத் தாங்கிக் கொண்டார். இதையே அருணகிரிநாதர் தம் திருப்புகழில், “முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா” என வினாயகரை வணங்காததால் வந்த வினையைச் சுட்டிக் காட்டியுள்ளார். விநாயகரை வணங்காத தன் தவறை உணர்ந்து, சிவபிரான் கணேசனை வணங்கி பூஜை செய்த பின், தேரில் அமர, இருபுறமும் வினாயகரும், முருகனும் தங்கள் வாகனங்களுடன் பவனி வர, தேரும் புறப்பட்டது.

ஆசாரத்தைக் கைவிட்ட அசுரர்களின் செல்வங்கள் யாவும் மறைந்து போயின. குறிப்பிட்ட நேரம் வந்த போது, முப்புரங்கள் யாவும் ஒரே இடத்தில் ஒன்று கூடின. கையில் அம்பின் முனையைப் பிடித்தவாறு சிவபிரான், தன் முக்கண்ணால் முப்புரங்களையும் பார்த்துச் சிரித்து விழிக்க, அவை உடனே சாம்பலாயின. அசுரர்கள் முன்பு சிவபிரானை வழிபட்டதால், அவர்கள் மடியாமல், சிவபிரானின் கருணையினால் சிவ கணங்களாக மாறினர். ஒன்றும் நேராத திரிபுர சகோதரர்களும் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி, சிவபெருமானை தஞ்சம் புகுந்ததால், அவர்கள் சிவபிரானின் துவார பாலகர்களாயினர். திரிபுர சம்ஹாரம் நடைபெற்றது தைப்பூச நன்னாளில்தான். 
 



Leave a Comment