தைப் பூசம் ஏன் கொண்டாடப் படுகிறது?


தை மாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி தினம் ஒரு சிறந்த நாளாகும். இத்தினத்தில் பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன. இந்நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர். சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே. தில்லை வாழ் அந்தணர்கட்கு, இருக்க இடமும், மேரு மலை போன்ற எழுநிலை மாளிகைகளையும், தேர் வரிசைகள், திருக்கோயில் கோபுரங்கள், கனகசபை முதலிய யாவும் செய்வித்து அந்தணர்கள் மூலம் திருவிழாக்களையும் நடத்தி வைத்தான் இரணியவர்மன் என்னும் மன்னன்.

“தாது மாமலர் முடியாலே’ என்று தொடங்கும் திருப்புகழில்,

வீறுசேர் வரையரசாய் மேவிய

மேரு மால்வரை என நீள் கோபுர

மேலை வாயிலின் மயில் மீதேறிய பெருமாளே… மேற்கண்ட செய்தி தெரிகிறது. ஒருசமயம் பிரம்மனை முருகன் சந்திக்க நேர்ந்த பொழுது, பிரம்மன் முருகன் சிறுவன்தானே என வணங்காது நிற்க, முருகனும் அவரை யார் என்று கேட்க, நான்முகனும் தான் வேதத்திற்கு அதிபதி என்று சொன்னார். முருகன் உடனே பிரம்மனை வேதம் கூறும்படி பணித்தார். பிரம்மனும் “ஓம் என ஆரம்பித்தார். முருகவேள் உடனே ஓம் என்பதின் பொருளைக் கேட்க நான்முகனும் விழிக்க, அவர் குடுமியில் குட்டு விழுந்தது. அதுமட்டுமன்று தொடக்கமே சரியில்லாதபோது பிரம்மதேவன் எங்ஙனம் உலகத்தைப் படைப்பான் என எண்ணி அவரை கந்த வேள் சிறையில் அடைத்தார். இதைக் கண்ணுற்ற சிவபிரானும் இங்ஙனம் கேட்டார்.

“ஓமென உறைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ

போமெனில் அதனையின்னே புகலென இறைவன் சொற்றான்”

முற்றொருங் குணரும் ஆதி முதல்வ கேள் உலகமெல்லாம்.

பெற்றிடும் அவட்கு நீ முன் பிறருணராத வாற்றல்

சொற்றதோர் இனைய மூலத் தொல் பொருள் யாருங்கேட்ப

இற்றென இயம்பலாமோ மறையினால் இசைப்பதல்லால்

என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னத்

தன்றிருச்செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும்

ஒன்றொறு பதத்தின் உண்மை உரைத்தனன்…(கந்த புராணம்)


தந்தையார் முருகனிடம் “ உனக்கு அப்பொருள் கூற வருமோ? எனக் கேட்ட போது, தம்மாற் கூற முடியும் என்றும், ஒருமுறை தந்தையான சிவபிரான் ரகசியமாகத் தாய் உமையவளுக்கு உபதேசித்த பொழுது, தாம் தாயின் கூந்தலில் ஒரு வண்டாக இருந்து அந்த ரகசிய உபதேசத்தை உணர்ந்ததாகக் கூறினார் வடிவேலன். இதை அறிந்த பார்வதியும் குழந்தையாயினும் ரகசியத்தைக் கேட்டதனால் சாபத்திற்கு உள்ளாவான் எனக் கூறியதன் பேரில், முருகனும் சாபம் தீரத் தவம் இருந்தார். அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே. 



Leave a Comment