பழனி மாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம்.!


முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனி முருகன் கோவிலின் அருகில் உபகோவிலாக மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் மாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படும். அப்போது ரதவீதிகளில் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தைப்பூசத்திருவிழாவுக்கு பயன்படுத்தும் தேரையே மாசி மாத திருவிழாவுக்கும் கோவில் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாரியம்மன் கோவிலுக்கு என்று புதிதாக தேர் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து ரூ.18 லட்சத்தில் தேர் வடிவமைக்கும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. இழுப்பை, வாகை மரங்களை பயன்படுத்தி தேரை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர் வடிவமைப்பு பணி நிறைவடைந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்ட போது, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தேர் 36 அடி உயரம் கொண்டது ஆகும். தேர் வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. முன்னதாக புதிய தேருக்கான சிறப்பு பூஜை, தேர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டு. பின்னர் நாளை மறுநாள் காலை 10.20 மணிக்கு மேல் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.



Leave a Comment