பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும்.. மாசாணி அம்மன்!


சக்தியினால் தான் இந்த உலகம் இயங்குகிறது. உலகம் முழுவதும் இயங்க அடிப்படைச் சக்தியாக விளங்கும் பரம்பொருளை தாயாக எண்ணி வழிபடும் மரபு பாரத நாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.கொற்றவை வழிபாடு, கண்ணகி வழிபாடு, மாரியம்மன் வழிபாடு என்பதெல்லாம் தமிழர் கண்ட சக்தி வழிபாட்டு நெறிகளாகும்.

பொதுவாக சக்தி பீடங்கள் 65 என்பர். இதனைத் தவிர்த்து ஆங்காங்கே காவல் தெய்வமாக, வன தேவதையாக, மக்கள் வழிபடும் தெய்வமாக அன்னை சக்தியின் ஆலயங்கள் தமிழகத்தில் பல உள்ளன. இத்தகைய தெய்வங்களுள் ஒன்றே மாசாணியம்மன்.இந்த சிறப்புமிக்க அம்மனின் திருத்தலம் பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கில் 15 கி.மீ தொலைவில் ஆனைமலையில் சேத்துமடை சாலையில் நுழைவு வாயில் கொண்டு, உப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் ஜாதிமத பேதமின்றி எல்லா மதத்தவரும் வணங்கி செல்லும் அம்மனாக வீற்றிருக்கிறாள் மாசாணி அம்மன்.பொதுவாக எல்லா கோயில்களிலும் அம்பிகையின் தோற்றம் நின்ற கோலத்தில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். ஆனால் மாசாணியின் தோற்றம் மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில் உள்ளாள். இது வேறு எங்கும் காண கிடைக்காத காட்சியாகும்.

மகாசக்தியான மாசாணியம்மன் நீதி தேவதையாக விளங்குவதால் இங்கு நீதிக்கல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிகல்லின் மகிமை என்னவென்றால் பில்லி, சூனியம், மந்திரம், ஏவல் போன்ற பெரும் பகையால் பாதிக்கப்பட்டவர்களும், பொருள்கள் திருட்டுப் போனவர்களும், மிளகாய் அரைத்து கல்லில் பூசி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வேண்டினால் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது ஐதீகம். இந்த மிளகாய் அரைத்து நீதி வேண்டியபின் தொண்ணூறாவது நாளில் அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு நடத்திட வேண்டும். மேலும் பெண்களின் தீராத வயிற்றுவலி, மாதாந்திர துன்பங்கள் நீங்க உதிர மாலை வாங்கி அம்மனுக்கு சாத்தினால் நோய்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



Leave a Comment