சனி பிரதோஷ வழிபாட்டால் ஏற்படும் பலன்கள்...


சிவனுக்குரிய வழிபாடுகளில்  மிகவும் முக்கியமானது சிவராத்திரியும், பிரதோஷமும். பாற்கடலை கடைந்த போது தோன்றிய  ஆலகால விஷத்தை சிவன் உண்டு, தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்த வேளையே  பிரதோஷ வேளை.ஆகவேதான் பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது.

சனி பிரதோஷம் அன்று ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு இன்னும் கூடுதல் சிறப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று ,நாள் முழுக்க விரதம் இருந்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பிரதோஷ வேளையான  மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலத்தில் , சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால். சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

பிரதோஷத்தின் போது ,முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்பது ஈசனின் அருளை பெற உதவும்.

பிரதோஷ தினத்தை வழிபடுவதால் சுப மங்களம், நல் எண்ணம், நல் அருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். நல்ல புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகளின் எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும்.

 



Leave a Comment