கனவுகளை நினைவாக்கும் காளிங்க நர்த்தன பெருமாள்


தஞ்சாவூர் மாவட்டம் ஊத்துக்காடில் உள்ள காளிங்க நர்த்தன பெருமாள் கோயிலில் வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த, குழல் ஊதும் கண்ணன் வீற்றிருக்கும் ஊத்துக்காடு எனும் சிறிய ஊரில் அமைந்துள்ளது காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில். இந்த ஊத்துக்காடு இயற்கை அன்னையின் அருள் பெற்று அளவற்ற செழிப்புடன், பசுமை வண்ணத்தால் கண்களையும், மனதையும் குளிரச் செய்யும்படி அமைந்துள்ள சிற்றூருக்கு அருகில் ஆவூர் என்னும் ஊரில் சிவன் திருக்கோயில் ஒன்று உள்ளது.

இத்தல இறைவனான ஸ்ரீ கைலாசநாதரின் திருவடியை சேவை செய்யும் பொருட்டு, தேவலோக பசுவாகிய ஸ்ரீ காமதேனு தன் குழந்தைகளான நந்தினி, பட்டி என்னும் இரு கன்றுப் பசுக்களையும் இத்தலத்திலேயே விட்டுச் சென்றது.

இவ்வாறாக நந்தினி, பட்டி என்கிற இவ்விரு பசுக்களும் அபிஷேகப் பிரியரான கைலாசநாதரின் அபிஷேக ஆராதனைகளுக்கு பால் கொடுத்துக் கொண்டும், பூஜைக்குரிய பூக்களை நந்தவனத்தில் இருந்து பறித்து இறைவனுக்குப் படைத்துக் கொண்டும் தங்களது கைங்கர்யங்களைச் செய்து வந்தன. இது போல பசுக்களினால் தெய்வ ஆராதனை செய்யப்பட்ட காரணத்தினால் இத்தல ஈஸ்வரனுக்கு பசுபதீஸ்வரர் என்ற காரணப் பெயரும் உண்டானது.

இயற்கை எழில் மிகுந்த ஊத்துக்காடு, மலர்கள் நிறைந்த சோலைவனமாகத் திகழந்ததால் ஆவூர் தெய்வத்திற்கு இந்த ஊத்துக்காட்டில் இருந்துதான் நந்தினி, பட்டி பசுக்கள் பூக்களை பறித்துச் செல்வதை தங்களது வழக்கமாகக் கொண்டிருந்தன.

இதுபோல தினமும் இப்பசுக்கள் மலர்களைக் கொய்த வண்ணம் இருக்க, ஸ்ரீ நாரத முனிவரோ இப்பசுக்களுக்கு தெய்வீகக் கதைகளைச் சொன்ன வண்ணம் உள்ளார். இது தினப்படி நடக்கும் ஒரு செயலாகிப் போனது இப்பசுக்களுக்கு.

இப்படியே புராணக் கதைகளை ஸ்ரீ நாரத முனிவர் சொல்லிக் கொண்டிருக்கையில், ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்ற பாம்பினை, அதனுடன் சண்டையிட்டுப் போராடி, அப்பாம்பின் ஆணவத்தை அடக்கி, அதன் தலை மீதேறி பேரழகு நர்த்தனம் ஆடி, அந்த பாம்பிற்கு அருள் பாலித்த கிருஷ்ணனின் கதையைச் சொல்லி முடித்தார் ஸ்ரீ நாரத முனிவர். மேலும், இந்த பெரும் லீலையை கண்ணன் மேற்கொள்ளும்போது பெருமான் ஐந்து வயது குழந்தைதான் என்ற விவரத்தையும் சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்ட நந்தினி, பட்டி பசுக்கள் கேவி கேவி கண்ணீர்விட்டு அழத் தொடங்கி விட்டன. ஏன் இந்த அழுகை எனக் கேட்ட நாரத முனியிடம், அத்தகைய பெருத்த, பருத்த, பயமூட்டும் காளிங்கனிடம் எவ்வளவு கஷ்டப்பட்டு பகவான் போராடியிருப்பார்? அவ்வாறு போரிடும்போது கண்ணனது உடலெங்கும் காயங்கள் பட்டிருக்குமே. நீல வண்ண மேனி வலித்திருக்குமே எனப் பலவாறாக புலம்பித் தீர்த்து அழுது கொண்டே இருந்தன அந்த கன்று பசுக்கள்.

இது போன்ற மனதை நெகிழச் செய்யும் காட்சியினை தேவ லோகத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீ காமதேனுப் பசு, தன் பிள்ளைகள் கதறி அழுவதைக் காண முடியாமல், ஸ்ரீ கிருஷ்ண பகவானை தரிசனம் செய்து, தன் குழந்தைகளின் நிலையினை எடுத்துச் சொல்லி இப்படி ஒரு நிலைக்குத் தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டது.

அவ்வாறே ஸ்ரீ காமதேனு பசுவின் வேண்டுகோளுக்கு இணங்க பூமாதேவி வாசம் செய்யும் பூலோகத்திற்கு வந்து இவ்விரு பசுக்களையும் அரவணைத்து ஆறுதல் சொன்னார்.

கண்ணன் ஆறுதல் படலத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் சென்று, இந்த ஊத்துக்காட்டில் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த புஷ்ப வனத்திற்கு அருகாமையிலேயே ஒரு ஊற்றினை உருவாக்க, தண்ணீர் பெருக்கெடுத்து அங்கொரு குளம் உண்டாகி ஊத்துக்காடு எனும் பெயர் பெற்றது. அக்குளத்திலேயே காளிங்க நர்த்தனத்தை மீண்டும் இப்பசுக்களுக்காக ஒரு முறை கிருஷ்ணர் செய்து காண்பித்தார். தான் காளிங்க நர்த்தன லீலையை புரியும்போது எவ்விதத்திலும் கஷ்டப் படவில்லை, துன்பப் படவில்லை என்பதை அப்பசுக்களுக்கு அவர் உணர்த்தினார்.

இந்த காளிங்க நர்த்தன லீலையைக் கண்ணுற்ற இவ்விரு பசுக்களும் மூர்ச்சையாகி, மயங்கி விழுந்தன. பின்னர் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருளினால் மயக்கம் தெளிந்து, பெரும்மூச்சும் வந்ததால் மூச்சுக்காடு என்றும் இத்தலம் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment