குழந்தைகளை காக்கும் மடப்புரம் மாரியம்மன்!


நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோவிலுக்கு கிழக்கே உள்ள மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது. மடப்புரம் மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் மாரியம்மன். காக்கும் தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே ஆல், வேம்பு மரங்களும் அதன் கீழ் விநாயகர், நாகர் சிலைகளும் காணப் படுகின்றன. ஆலய முகப்பின் மேல்புறம் மகிஷாசுரமர்த்தினியின் திருமேனி சுதை வடிவில் உள்ளது. ஆலயத்தின் உள்ளே கருவறை எதிரில் சூலமும் அடுத்து கழுமரமும் இருக்கிறது. அடுத்து பித்தளை உலோக சூலமும், மின்னடையான் என அழைக்கப்படும் பலிபீடமும் உள்ளது. அருகே தல விருட்சமான வேப்பமரம் உள்ளது.

மேலும் அடிக்கடி நோயால் அவதியுறும் குழந்தைகளை அம்மனுக்கே தத்து கொடுத்துவிடுகின்றனர். குழந்தையை பெற்றவர்கள் குழந்தையுடன் அம்மன் சன்னிதிக்கு வருகின்றனர். அர்ச்சகர் ஒரு மரக்காலில் தவிட்டை நிரப்பி, குழந்தையின் பெற்றோர்களிடம் கொடுக்க, அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தங்களது குழந்தையை, அம்பாளுக்கு தத்துக் கொடுக்கின்றனர். அன்று இரவு அந்தக் குழந்தை பெற்றோர்களுடன் தங்குவது கிடையாது. வேறிடத்தில் தங்க வைக்கப்படும். இப்படி தத்துக் கொடுக்கப்படும் குழந்தை சில நாட்களில் பரி பூரண குணமடைவது அதிசயமான உண்மை.

இங்கு அருள்பாலிக்கும் ஓம்சக்தி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்த அன்னையின் பின்புறம் உள்ள வேப்பமரம் இயல்பாகவே தோன்றி, அன்னையின் சக்தியை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. தன்னை நாடும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் அறிந்து அருள்பாலித்து அவர்களை குறையின்றி வாழ வைக்கும் மடப்புரம் மாரியம்மனை காண திரளான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.



Leave a Comment