சந்திர கிரகணம் - திருப்பதி கோயில்கள் நடை அடைப்பு


ஜூலை 27-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்வதால், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்படுகின்றன.

இரவு 11.54 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 3.49 மணிவரை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது, அரிய சந்திர கிரகணம் எனக் கூறப்படுகிறது. வழக்கமாக, கிரகண காலங்களில் கிரகணம் தொடங்குவதற்கு 6 மணிநேரத்துக்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படும்.

அதேபோல் வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான கதவுகள் மூடப்படுகின்றன. பின்னர் மறுநாள் 28-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு கோவிலின் கதவுகள் திறந்து தண்ணீரால் சுத்தப்படுத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து புண்யாவசனம் செய்தபின் சுப்ரபாத சேவை நடைபெறும். அன்று காலை 7 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் ஆகியவை 27-ந்தேதி மாலை 3 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து கோவில் வளாகம் அனைத்தும் சுத்தம் செய்த பின் காலை 8 மணிக்குமேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

சந்திரகிரியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் 27-ந்தேதி மாலை 3 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவில் 27-ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 6.30 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான சீனிவாசமங்காபுரம், அப்பலாயகுண்டா கோவில்கள் நடை சாத்தப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



Leave a Comment