சுபிட்சம் தரும் சூரியனை வணங்குவோம்!


ஆயிரம் கரங்கள் நீட்டுபவன்... நம்மை கரங்கள் கொண்டு அணைக்கின்றவன்... என்று கதிரவனை, சூரியனை, சூரிய பகவானை வணங்கித் துதிக்கிறோம். ஆன்ம ரீதியாகவும் சரீர ரீதியாகவும் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு நிறையவே பலன்கள் உண்டு. இதனால்தான் ‘ஞாயிறு போற்றுதும்’ என புகழாரம் சூட்டிக் கொண்டாடியிருக்கிறார் இளங்கோவடிகள்.

சூரிய பகவானைக் கொண்டாடி வணங்குகிற அற்புதமான நாள்... ரத சப்தமி!

காசிப முனிவரின் மனைவி அதிதி. இந்தத் தம்பதிக்கு விஸ்வான் முதலான 12 சூரியர்கள் பிறந்தார்கள் என்று விவரிக்கிறது புராணம். அதிதியின் மைந்தர்களான அவர்களுக்கு ஆதித்தர்கள் என்றும் பெயர் உண்டு.

மேஷம் துவங்கி மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் செல்பவர் சூரிய பகவான். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்ததான ராசிக்கு செல்வதையே மாதப் பிறப்பு என்கிறோம். அதேபோல், சூரிய பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அதைக் கொண்டே அந்த மாதத்தின் பெயர்களும் அமைந்தன என்பது தெரியும்தானே! .

சூரிய பகவான் ரதத்தில்தான் பயணிப்பார். அந்த ரதத்தில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். ஏழு குதிரைகள் கொண்ட அந்த ரதத்தில் சூரியனார் அமர்ந்திருக்க, அந்த ரதத்தை அருணன் என்பவர் சாரதியாக இருந்து ஓட்டி வருவார்! இந்த அருணன் யார் தெரியுமா? கருடாழ்வாரின் அண்ணன்தான் அருணன்.

தேர்ச்சக்கரத்தின் மேல் பாகமும் கீழ்ப்பாகமும் உத்திராயனம் மற்றும் தட்சிணாயன காலங்களைக் குறிக்கின்றன. அருணன் தேரினைச் செலுத்த, அந்தத் தேரில் அமர்ந்து கொண்டு, உதயம், மதியம், அஸ்தமனம், அர்த்தராத்திரி என நேரங்களை உண்டாக்குகிறார் சூரிய பகவான்!

அதனால்தான் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம் என்று விவரிக்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்!

சூரியனைக் கொண்டாடுகிற விரதங்களில் ரத சப்தமி என்றும் சூரிய ஜயந்தி என்றும் போற்றப்படுகிற இந்த விரதம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ‘சப்த’ என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை அல்லது பௌர்ணமியை அடுத்து உள்ள ஏழாம் நாள்... சப்தமி எனப்படுகிறது.



Leave a Comment