நோய் தீர்க்கும் திருவெற்றியூர் பாகம்பிரியாள்!


புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டு தீர்க்காயுள் பெற்று வாருங்கள். ஆவணி மாத ஓணத்திருநாளுக்கும் இந்தக் கோயில் வரலாற்றுக்கும் சம்பந்தம் உள்ளது.

தல வரலாறு:
மகாபலி சக்கரவர்த்தி வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கியவன். குடிமக்கள் அவனைத் தங்கள் துன்பங்களை நீக்கவல்லவன் என்று பாராட்டினர். மூவுலகையும் அவன் வென்றான். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களை மதிக்காமல் ஆணவம் கொண்டான். இதனை அறிந்த நாரதர், சிவபெருமானிடம் முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான், ‘‘முற்பிறவியில் என்னுடைய சந்நிதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலி உருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல," என்றார்.

இதையடுத்து திருமாலிடம் தனது கோரிக்கையை வைத்தார் நாரதர். இதனை ஏற்ற திருமால், வாமன உருவம் கொண்டு மகாபலி மன்னனிடம் யாசிக்க சென்றார். அவனிடம் மூன்றடி மண் கேட்டார். ஆகாயத்திற்கும், பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு, உலகை இரண்டடியால் அளந்து, மூன்றாம் அடி கேட்டபோது வந்தவர் யார் என புரிந்த மன்னன் பணிவுடன் தன் தலையை காண்பித்தான். மகாபலி பிறவிப் பயனை முடித்து அதல பாதாளத்தில் மறைந்தான்.

தர்மதேவதை:
இதனை அறிந்த தர்மதேவதை தன் ஒரு மகனை இழந்த துன்பத்தால் துடித்தாள். சிவபெருமானிடம் முறையிட்டாள். மகாபலியின் தலையில் அளந்த மாதவன் காலில் புற்று ஏற்படுமாறு சபித்தார் சிவபெருமான். செருக்குற்றவனை அழித்த தனக்கு, புற்றால் வேதனை ஏற்பட்டது குறித்து சிவபெருமானிடம் புலம்பினார் மகாவிஷ்ணு.

இது கேட்ட சிவபெருமான் திருமாலிடம், ‘‘18 தீர்த்தங்களில் நீராடி, சிவ ஆலயங்களை வணங்கி, ஆடும் யானையும் தரிசித்த இடத்திலுள்ள ஆதி ரத்தினேஸ்வரரை தரிசித்து, தெற்கிலுள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராட வேண்டும். அங்குள்ள லிங்கத்தை தழுவி வழிபட்டால் புற்று நீங்கும்," என்று கூறி மறைந்தார்.

இவ்வூரே திருவெற்றியூர் ஆனது.திருவெற்றியூர் வந்த மகாவிஷ்ணு சிவனை வழிபாடு செய்தார். புற்று மாயமாய் மறைந்துவிட்டது. எனவே இங்குள்ள சிவபெருமானுக்கு ‘பழம் புற்றுநாதர்’ என்றும், அம்பாளுக்கு ‘பாகம்பிரியாள்’ என்றும் பெயர் வழங்கலாயிற்று.

சிறப்பம்சம்:
குணப்படுத்த முடியாத புற்றுநோய்க்கு மருந்து தரும் நாயகியாக விளங்குகிறாள் பாகம் பிரியாள். இவளது சந்நிதியில் தரும் தீர்த்தத்தை அருந்தினால், புற்றுநோய் தீரும் என்பது நம்பிக்கை. மரணபயத்துடன் இங்கு வருவோர், புத்துணர்வு பெற்று நம்பிக்கையுடன் செல்கின்றனர். இங்குள்ள தலவிருட்சமான அரசமரத்தை சுற்றி வந்தால் மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. இவ்வூர் மக்கள் தங்கள் தாய்வழி சொத்தை அம்பாளுக்குரியதாக கருதி, மகள்களுக்கு எழுதி வைக்கின்றனர். இவ்வூர் அருகிலுள்ள திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் புகழ்மிக்கது.
திறக்கும் நேரம் : காலை 6 -–- 11, மாலை 4 – - இரவு 8.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 140 கி.மீ., தூரம் ராமநாதபுரம். அங்கிருந்து 60 கி.மீ., தூரம் திருவாடானை. இங்கிருந்து டவுன் பஸ்களில் 7 கி.மீ., சென்றால் திருவெற்றியூர்.



Leave a Comment