மதுரை சித்திரை திருவிழாவில் அம்மனின் திக்விஜயம்


மதுரை சித்திரை திருவிழாவில் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை அம்மன் மூவரும் இந்திர விமானத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர். அப்போது மீனாட்சி அம்மன் திக்விஜயம் நடைபெறும். மீனாட்சி அம்மன் மலையத்துவசன்காஞ்சமாலைக்கு அக்னியில் இருந்து தோன்றிய மகள்.
பிறக்கும்போதே, மூன்று மார்பகங்களோடு பிறக்கிறாள். அதைக் கண்டு பெற்றோர் கவலையுறும் போது அசரீரி, ‘தனக்கு ஏற்ற துணையை அவள் பார்க்கும்போது சரியாகி விடும்’ எனக் கூறுகிறது. மீனாட்சி அம்மன் மூன்று மார்பகங்களோடு இருக்கும் சிலையை இன்றும் புது மண்டபத்தில் காணலாம்.
மலையத்துவசன் காலத்திற்கு பிறகு, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் முடிந்து, மதுரையின் அரசியான பின்னர், ஈரேழ் உலகத்தையும் ஆட்சி செய்ய நினைக்கிறாள். எட்டு திக்குக்கும் அதிபதிகளான அஷ்டதிக் பாலர்களை வென்று, தனக்கு அடிபணியச் செய்கிறாள்.
இந்நிகழ்ச்சி வடக்குமாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில் இருக்கும் லாலா ஸ்ரீரெங்க சத்திர மண்டபத்தில் நடைபெறும். அந்நிகழ்ச்சியின் போது, இரண்டு பட்டர் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு அம்பாள், சுவாமி வேஷம் போட்டு, நிகழ்ச்சியை நடத்துவார்கள்.
அதன்படி, கிழக்கில் (கீழமாசி வீதி) இந்திரனையும், அக்னி மூலையில் (தெற்குமாசி வீதிகளில் சந்திப்பில் விளக்குத்தூண் அருகில்) அக்னியையும், தெற்கில் (தெற்குமாசி வீதியில்) எமனையும், நிருதிதிசையில் (தெற்குமாசிமேலமாசிவீதி சந்திப்பு) நிருதியையும், மேற்கில் (மேலமாசி வீதி) வருணனையும், வாயு திசையில் (வடக்கு மாசி வீதி) வாயுவையும், வடக்கில் (வடக்கு மாசி வீதி) குபேரனையும், ஈசானி திசையில் (வடக்குமாசி வீதி, கிழக்கு மாசி வீதி சந்திப்பு) ஈசனையும் வெற்றி கொள்கிறாள். பின்னர் நந்திதேவரையும் வெல்கிறாள்.
ஈசான்ய மூலையில் சுவாமியை (சிவனை) காண்கிறாள். சுவாமியை கண்டவுடன், மீனாட்சியின் மூன்றாவது ஸ்தனம் மறைந்து விடுகிறது. அவள் சுவாமியை பார்த்து, வெட்கப்படுகிறாள். இந்நிகழ்ச்சியில் ஈசனுடன் அவள் மாலை மாற்றிக்கொள்வாள்.



Leave a Comment