தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா


சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் மார்கழிப் பெருந்திருவிழா இக்கோயிலில் 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா டிசம்பர் 24 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு கோயில் கொடிப்பட்டம் சுசீந்திரத்தின் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கோயில் கொடிமரத்தில் தெற்கு மண்மடம் ரகு நம்பூதிரி கொடியேற்றினார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, தக்கலை பரைக்கோடு பிரத்யுக்சா நாயரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், ஆஸ்ரமம் காசித்திருமடம் டி. தம்பையா ஓதுவார் நிகழ்த்திய திருவெம்பாவை பாராயணம், திருமுறை பெட்டக ஊர்வலம், தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூன்றாம் திருநாளில் இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கோட்டாறு அருள்மிகு வலம்புரிவிநாயகர், மருங்கூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி பார்வதி, பரமேசுவரருடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
9 ஆம் திருநாளான ஜன. 1ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், அன்று இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு சப்தாவர்ணக் காட்சியும், 10 ஆம் திருநாளான ஜன. 2 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு அருள்மிகு நடராஜமூர்த்தி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு திருஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.



Leave a Comment