பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சாரங்கபாணிசுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டம்...


பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சாரங்கபாணிசுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாரங்கபாணி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் என புராணங்கள் கூறுகின்றன. அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் சாரங்கபாணி சுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள் பாலிக்கிறார்.

தாயார் கோமளவள்ளி இது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. எனவே இங்கு சொர்க்கவாசல் என்ற ஒன்று தனியாக இல்லை. பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்து 3வது தலமாக சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணி திருக்கோயில் என போற்றப்படுகிறது.

இக்கோயிலின் ராஜகோபுரம் 171 அடி உயரம் கொண்டது. இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா சுமார் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. சித்திரை திருவிழாவில் நாள்தோறும் இந்திர விமானம், வெள்ளி சூர்யபிரபை, வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி அனுமந்த வாகனம், வெள்ளி யானை வாகனம், புன்னை மர வாகனம், தங்க குதிரை வாகனம் என பல்வேறு வானங்களில் திருவீதி உலா நடைபெற்றது.

தற்போது விழாவின் ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் 500 டன் எடையுடன், 30 அடி விட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 170 அடி உயரம், அலங்கார மேற்பரப்பு மட்டும் 47 அடியையும் கொண்டது. சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.



Leave a Comment