திருமாங்கல்யம் தந்த திருமங்கலத்தில் மீனாட்சி திருக்கல்யாணம்...


மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவத்திற்கு திருமாங்கல்யம் செய்து தந்த திருமங்கலத்தில் மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

600 ஆண்டுகளுக்கு மேல் பழம்பெருமை வாய்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி - சொக்கநாதர் ஆலயத்தில் இன்று மீனாட்சி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மதுரையில் நடைபெறும் மீனாட்சி அம்மன் கல்யாண வைபோகத்திற்கு திருமங்கலத்தில் இருந்துதான்  திருமாங்கல்யம் செய்து கொடுக்கப்பட்டதாக வரலாறு உள்ளது அதனால்யே இந்த ஊருக்கு திருமாங்கல்யபுரம் என்ற பெயர் வந்ததாகவும் இது நாளடைவில் திருமங்கலம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கல்யாண வைபோகத்திற்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்த ஊர் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் அதே வேளையில் இத்திருக்கோவிலிலும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சொக்கநாதர் - பிரியாவிடை மீனாட்சி அம்மன்,பவளக் கனிவாய் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சொக்கநாதர் மீனாட்சிக்கு பட்டாடை உடுத்தி  கோவில் சிவாச்சாரியார்கள் சொக்கநாதர் - மீனாட்சியாக மாலை மாற்றும் வைபவமும் அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க சொக்கநாதர் - மீனாட்சிக்கு திருமாங்கல்யம் சூட்டினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.சொக்கநாதர் - மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தையொட்டி சுமங்கலி பெண்கள் புதிதாக திருமாங்கல்ய கயிறை மாற்றிக் கொண்டனர்.

இந்த திருமண வைபவத்தை காண திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி, கோவில் சிவாச்சாரியார் சங்கரநாராயண பட்டர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



Leave a Comment