தமிழ் புத்தாண்டு சித்திரை கனி காணுதல்...


சித்திரை முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இது உத்தராயண காலத்தில் சூரியனின் பயணத்தில் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் காலமாகும். இதனையே தமிழ் வருடத்தின் பிறப்பாக கொண்டாடுகிறோம்.
 
தமிழில் இத்தினத்தில் சித்திரை கனி காணுதல் என்றும் மலையாளத்தில் விஷூ கனி காணுதல் என்கிற சடங்கானது கேரளா மற்றும் தமிழகத்தில் அனைவரது வீட்டிலும் நடைபெறுகிறது. சித்திரை முதல் நாள் கனிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். காரணம் என்னவென்றால் மா, பலா, வாழை என்கின்ற முக்கனிகளும் இக்காலத்தில் கிடைக்கும்.

பங்குனி கடைசி நாள் இரவே பூஜை அறையில் மாகோலமிட்டு பின் ஒரு பெரிய தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் வைப்பர், தேங்காய் வைப்பர், பின்பு வெற்றிலை, பாக்கு, வாசனை மலர்களை கொண்டும், கொன்றை மலரினாலும் அலங்கரிப்பர்.

பணம் மற்றும் காசுகளை நிரப்பி வைப்பர், ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை அந்த தட்டில் வைப்பர், அதன் பிறகு உப்பு, சர்க்கரை, அரிசி, பருப்பு முதலானவற்றை தனித்தனி பாத்திரத்தில் நிரப்பி வைப்பர். அதற்கு பின் உறங்க சென்று விட்டு காலையில் எழுந்தவுடன் முதலில் சென்று பூஜை அறையில் உள்ள மங்கள பொருட்களில் கண் விழிக்க வேண்டும்.

இப்படி செய்வதால் வீட்டில் மங்களம் பொங்கும், லட்சுமி கடாக்க்ஷம் நிறையும் என்றும், வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறையும் என்பது நம்பிக்கை ஆகும். இதுவே சித்திரை கனி மற்றும் விஷூகனி காணுதல் எனப்படுகிறது.



Leave a Comment