திருமண வரம்..குழந்தை பாக்கியம் அருளும் ஆடிப்பூரம்!


ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூரம் பல்வேறு சிறப்புகளை உடையது. அம்பாளின் அனுக்கிரகம் மிகுந்த நாள்களில் ஆடிப்பூரம் மிகவும் முக்கியமானது. ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் வரும் பூர நட்சத்திரம் மிகவும் சிறப்பானது. காரணம் பூர நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். எனவே, சுக்கிரனுக்கு உகந்த தினமான வெள்ளிக்கிழமையில் வரும் ஆடிப்பூரம் மிகவும் தவறவிடக் கூடாதது.

ஆடிப்பூர விரதம்
ஆடிப்பூரத்தன்று காலையிலேயே எழுந்து நீராடி தூய உடை அணிந்து விரதம் இருந்து அம்பாளுக்கு உகந்த பால்பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். கொரோனா தொற்று காரணத்தால் ஆலயம் செல்ல முடியாததால் வீட்டிலேயே அம்பாள் படத்துக்கு மலர்கள் சாத்தி வழிபடலாம். அம்பாளுக்கு பாராயணம் செய்து நெய் விளக்கேற்றி வழிபடலாம். இந்த தினத்தில் புதிய வளையல்களை எடுத்துப் பூஜை அறையில் வைத்துப் பின் யாரேனும் சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் வழங்குவதன் மூலம் வீட்டில் இருக்கும் வறுமைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

 ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்
ஆடிபூரம் மஹாலக்ஷ்மி அம்சமான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினம். ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் வழிபாடு செய்வது மிகவும் அவசியம். குறிப்பாகத் திருமண வரம் வேண்டுபவர்கள் கட்டாயம் அன்னை அருளிய திருப்பாவைப் பாடல்களை ஆடிப்பூர நாளின் காலையில் எழுந்து பாராயணம் செய்ய வேண்டியது அவசியம். ஆடிப்பூர தினம் என்றில்லை, நாளுமே திருப்பாவைப் பாடல்களைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஆடி மாதம் முழுவதும் அம்மனை விதவிதமாக அலங்காரம் செய்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடிப்பூரத் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு சிறப்பானது. தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. திருமணத் தடையுள்ள கன்னிப்பெண்களும், குழந்தை செல்வம் கேட்டு அம்பாளின் அருளைப் பெறுவதற்கு பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுவர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா முளைக்கட்டு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கும் வளைகாப்பு விழா விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பெண்கள் விரதமிருந்து அம்மனுக்கு வளையல் சாற்றி அதை திரும்ப அணிந்து கொண்டால் அவர்களை பிடித்திருக்கும் தோஷமெல்லாம் நிவர்த்தியாகி அவர்கள் வாழ்வில் மங்களம் பெருகும்.



Leave a Comment