பனிக்கட்டி லிங்கமாக மாறும் அதிசயம்


 

 

சிவபெருமான் பார்வதிக்கு வேதத்தின் உட்கருத்தை விளக்க பார்வதியுடன் இமய மலையின் ஒரு குகை நோக்கிப் புறப்பட்டார். தம்மைப் பின் தொடராது இருக்க , விநாயகர், நந்திபகவான், சந்திரன், நாகராஜன், கங்காதேவி ஆகியோரை போகும் வழியில் உள்ள மாமலேச்சுரம், பகல்காம் சந்தன் வாரி, சேஷ்நாக், பஞ்சதரணி போன்ற ஒவ்வொரு முக்கியமான இடத்திலும் முறையே நிறுத்தி கவனிக்க ஆணையிட்டார். அம்பாள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வேத ரகசியத்தைக் கண்மூடி சொல்லத் தொடங்கினார் பரமன், சொல்லச் சொல்ல பார்வதி தேவி உம்... உம்  என்ற சப்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் பார்வதி தூங்கி விட பரமசிவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க, உம்  என்ற சப்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது!

ரகசியம் முழுவதும் சொல்லி முடித்த பின், ஈசன் கண் திறந்து பார்க்க பார்வதி, தூங்குவதும், உம்  என்ற சப்தம் வருவதையும் கண்டார். சிவன் கண் திறந்தவுடன்,அதுவரை குகையில் இருந்து வேதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கிளி பயந்து பறந்து வெளியே சென்று விட்டது. அந்தக் கிளியைப் பிடிக்க பரமசிவன் தொடரும் வேளையில் சிவ கணங்கள் இருவர் அங்கு மறைந்திருப்பதைக் கண்டார். இந்த ரகசியத்தை அவர்கள் மற்றவர்களுக்கு உரைத்து விடாமல் இருக்க, அந்த இரு சிவகணங்களையும் புறாக்களாக மாற்றினார். இன்றும் அந்த இரு புறாக்கள் மட்டும் குகையில் இருப்பதைக் காணலாம். அதற்குப் பின் சிவபெருமான், கிளியைத் தேடிப் புறப்பட்டார்.

குகையில் இருந்து பறந்து சென்ற கிளிக் குஞ்சு, பரமசிவனுக்கு பயந்து ,ஒளியாக மாறி, தான் பறந்து வந்த வழியில் இருந்து வசிஷ்ட முனிவரின் குடிலை அடைந்து, அருந்ததியின் கருவில் புகுந்து அடைக்கலமானது.

சில மாதங்களுக்குப் பிறகு, வசிஷ்டர் மனைவியின்  வயிறு கர்ப்பிணிப் பெண் போல் பெரிதாகி , வயிற்று வலியால் துன்பப்பட்டாள். வசிஷ்டர் தன் மனைவியுடன்  பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் முறையிட அவர்கள் இது பரமனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்து கொண்டு பரமசிவனிடம் முறையிடுமாறு ஆலோசனை கூறினார்கள். வசிஷ்டர், தன் மனைவி அருந்ததியுடன் பரமசிவனைச் சந்தித்தார். பரமன், அருந்ததியின் வலிக்குக் காரணத்தைப் புரிந்து கொண்டு, அருந்ததியின் வயிற்றுக்கருகே சென்று , கிளியே, வெளியே வா  என்று அழைத்தார். கிளி வெளியே வர மறுக்க, மீண்டும், பரமசிவன், கிளியே நீ வெளியே வந்தால் பெரிதும் போற்றப்படுவாய்  என்று அருளினார்.

சிவபெருமானின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ,கிளி முகத்துடனும், மனித உடலமைப்புடனும் பிறந்த அந்தக் குழந்தைதான் சுகப் பிரம்ம மகரிஷி. 

 

                                                                    

சுகப்பிரம்மர் ஈசனிடம் ,பரம்பொருளே, தாங்கள் தேவ ரகசியத்தை உபதேசித்த அந்தக் குகையிலேயே பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, அதற்கு சம்மதித்த சிவபெருமானும் , சிரவண மாதத்தில் வரும் இரு பவுர்ணமிகளுக்கு இடையில் ஒரு மாதம் அமர்நாத் பனிக் குகையில்  விஷ்வரூபியாய் பனி லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். 

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத். ஜூன்-ஆகஸ்ட் மாதத்தில் இந்த யாத்திரை நடைபெறுகிறது.

மலையில் இருந்து விழும் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம் தானே என்று தோன்றினாலும், லிங்க வடிவில் ஆண்டுதோறும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவது தான், இன்றளவும் அதிசயமாக உள்ளது.அதுமட்டுமின்றி அமர்நாத்தில் எந்த விலங்குகளையும், பறவைகளையும் காண முடியாத நிலையில்  அந்த குகையில் வசிக்கும் ஒரு ஜோடி புறாக்களை பார்க்கும் போது இன்னும் ஆச்சரியமாக உள்ளது. தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு இறைவனும், இறைவியுமே அப்படி காட்சித் தருகிறார்கள் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

 

ஓம் நம சிவாய ...



Leave a Comment