பக்தர்களின் பிறவிப் பிணியை தீர்க்க வந்த கலியுக கடவுள்


 

குழந்தையின் துயரம்  கண்டு துடிப்பது தாயின்  இயல்பு.  தாயினும் சிறந்ததல்லவா சாயிநாதனின் கருணை உள்ளம்!

தன் குழந்தைகள் ஊழ்வினைப் பொருட்டு  உடல் வேதனையால் துடிக்கும் பொழுது , அதைக் கண்டு தவிக்கும்  கருணாமூர்த்தி, தன்னை சரணடைந்தவர்களின்  வேதனையை தான் ஏற்றுக்கொண்டு அவர்களை  அந்த வேதனையின்  பிடியில் இருந்து நீக்கும்  தயாபரர் .

அடியவர்களுக்காக  தானே முன்வந்து அவர்களின்  வேதனையைத்  தாங்கும் கருணையும், தவ வலிமையும் கொண்டவர்  பாபா . தன் மீது அளவில்லா பக்தி கொண்ட ஒரு கொல்லனின் மனைவிக்கு உதவ பாபா செய்த கருணையை இந்த பதிவில் பார்க்கலாம் .

 

 நெருப்பில் கையை விட்ட பாபா

 

பாபா மசூதியில் எப்போதும் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருப்பார். அந்த நெருப்பை பக்தர்  , துனி என்று சொல்வர். துவாரகாமயியில்   பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்த நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது. அன்றும் பிரகாசமாக கொழுந்து விட்டுக்கொண்டிருந்த நெருப்பில் பாபா குளிர் காய்ந்து கொண்டிருந்தார் . எரிந்துகொண்டிருந்த துனி நெருப்பில் விறகுகளை ஒவ்வொன்றாக போட்டு தீயை வளர்த்துக் கொண்டிருந்தார். எல்லாம் சரியாக தான் போய்க் கொண்டிருந்தது .

 

 மசூதியின் ஒரு பக்கத்தில் தங்கள் வேலைகளை  பார்த்துக்கொண்டு இருந்த மாதவ், மற்றும் மாதவ்ராவ் தேஷ்பாண்டே ஆகியோரும்  தொலைவில் இருந்தபடியே தங்கள் பணிகளைச் செய்துக் கொண்டு , பாபாவையும் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

யாரும் எதிர்பாராத விதமாக, பாபா  திடீரென விறகை எடுத்துத் துனியில் வைப்பதற்கு பதிலாகத் தம் கரத்தையே துனியின் உள்ளே வைத்தார். பார்த்துக் கொண்டிருந்த மாதவ் மற்றும் மாதவ்ராவ் தேஷ் பாண்டே இருவரும்  பாபாவின் செயலைப் பார்த்துப் பதறினார்கள். அவர் அருகே ஓடோடிச் சென்றார்கள். அதற்குள்  பக்தர்களுக்கு நல்லாசி வழங்கும் பாபாவின் திருக்கரம் முழுவதுமாகக் கருகிவிட்டது .

நெருப்பில் இருந்த அவரது கரத்தை வெளியே இழுத்து பாபாவைத் தரையில் படுக்க வைத்தார்கள். பாபா அப்போது உணர்வோடு இருக்கவில்லை. மெல்ல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தபோது அவர் உணர்வு நிலையை அடைந்து கண்களை திருந்து பார்த்தார் .  பாபா! ஏன் இப்படி செய்து விட்டீர்கள் .  உங்கள் கையையே  ஏன் துனிநெருப்பில் நுழைத்தீர்கள்? என்று அங்கு கூடிய பக்தர்கள் கண் கலங்கினார்கள் .

எல்லோரையும் புன்முறுவலோடு  பார்த்த பாபா, “நெருப்பின் உள்ளே கையை விடாமல் வேறு நான் என்ன செய்திருக்க முடியும்? அந்தக் கொல்லனின் மனைவி என்  தீவிர பக்தை அல்லவா? அவள் குழந்தையல்லவா நெருப்பில் விழுந்துவிட்டது? கணவனுக்கு உதவியாக நெருப்பு நன்கு வளரும் வகையில் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தாள் அவள்.  அந்த நேரத்திலும் கண்மூடி என்னையே நினைத்துக் கொண்டு ,  தன் குழந்தை நெருப்பை நோக்கி நகர்வதையோ, அதில் விழுவதையோ அவள் கவனிக்கவே இல்லை.  என் மேல் கொண்ட பக்தியால் தானே தன் குழந்தையை கவனிக்க மறந்தாள்? அப்போது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு ஆகிறதல்லவா? நெருப்பில் கையைவிட்டுக் குழந்தையைச் சடாரென எடுத்துவிட்டேன். நல்லவேளை, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதன் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது. என் கரம் கொஞ்சம் கருகிவிட்டது. அதனால்  என்ன பாதகமில்லை!” என்றார்  .

 

 பாபாவின் செயலுக்கு காரணத்தை தெரிந்து கொண்ட அடியவர்கள் உள்ளம் உருகியது . இங்கிருக்கும் பாபாவிற்கு  எங்கோ இருக்கும் தன் பக்தையின் குழந்தையை பற்றி எப்படித் தெரிந்தது ? இது தான்  பாபாவின் எங்கும் நிறை பேரறிவு . “என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.” என்றவர் நம் சாயி . மாதவராஜ் தேஷ்பாண்டேயிடமிருந்து இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பாபாவின் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்கர், “  என் தெய்வமே! ஏன் இப்படி உன்கரத்தையே நீ சுட்டுக் கொண்டாய் ? “ என்று  அவர் உள்மனம் அழுது  அரற்றியது.

பரமானந்த் என்ற மும்பையைச் சேர்ந்த மருத்துவரை  பாபாவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக உடனே அழைத்து வந்தார் சாந்தோர்கர். நெருப்புச் சுட்ட கையின் மேல் தடவுவதற்கான களிம்பு, கையைச் சுற்றிக் கட்டுவதற்கான துணி போன்ற மருத்துவ உபகரணங்களோடு மருத்துவர் பரமானந்த், சீரடி  வந்து சேர்ந்தார். பாபாவின் தீய்ந்த கரத்திற்கு மருந்திட வேண்டி கையைக் காட்டுமாறு பாபாவிடம் பக்தியோடு விண்ணப்பித்தார்.  ஆனால், பாபாவிடமிருந்து ஒரு சிரிப்புத்தான் பதிலாக வந்தது.

அவர் மருத்துவரிடம் கையைக் காட்டவில்லை. பக்தர்களின் பிறவிப் பிணியையே தீர்க்க வந்த கலியுக கடவுளான  பாபாவுக்குத் தன் உடல் ஏற்பட்டுள்ள  பிணி ஒரு பொருட்டாகப் படவில்லை .  “அன்பர்களே! மனித உடல் நிலையில்லாதது. ஆன்மா மட்டுமே நிலையானது. முழு உடலும் ஒருநாள் அழியத்தானே போகிறது! ஒரு கரம் நெருப்பில் கொஞ்சம் காயம் அடைந்தால், அதனால் என்ன இப்போது? நான் வேதனைப் பட்டாலும் அதில் தவறில்லையே.. ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும்போது, இந்தச் சாதாரண உடல் வேதனை பெரிதா என்ன? நிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள். கடவுளே நம் அனைவருக்குமான மருத்துவர். நம் உடலில் வரும் நோய்கள் ஒன்றுமே இல்லை. உள்ளத்தில் வரும் காமம் , கோபம் போன்ற நோய்களை கடவுள் மேல் கொண்ட பக்தியால் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்!” பாபாவின்  இந்த  அருள்மொழிகளைக் கேட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள்.

 

 குஷ்டரோகி  பாகோஜி ஷிண்டேக்கு கருணை காட்டிய  பாபா

 

 குஷ்டரோகியான  பாகோஜி ஷிண்டே பாபாவின் அடியவர்களில் ஒருவர். தன்னுடைய  முன்வினை  காரணமாக குஷ்டரோகத்தினால் அவதியுற்றார் . ஆயினும்  பாபாவின் சந்நிதியில்  அவருடைய தரிசனத்தால் தன் வேதனைகளை மறந்து வாழ்ந்து வந்தார். பாபாவை அடிக்கடி தரிசிக்கவும், பாபாவின் அருள் மொழிகளைக் கேட்கவும், அவர் பாக்கியம் பெற்றிருந்தார்.  ஒரு முறை அவர் தன்னால் இயன்ற பணிவிடைகளைச் செய்யும் பொருட்டு பாபாவின் திருக்கரத்தை அணுகினார்.

வெந்திருந்த பாபாவின் கையில் நெய் பூசி நன்றாகத் துடைத்துவிட்டார். பாபா  எந்தவித  மறுப்பும் சொல்லாமல் மலர்ந்த முகத்துடன் அவர் செய்யும் பணிவிடைகளை ஏற்றுக் கொண்டார். ஒரு வாழை இலையை அந்தக் கரத்தின் மீது வைத்துக் கட்டி  அவருக்குத் தெரிந்த எளிய சிகிச்சை முறையை செய்தார் பாகோஜி .  மருத்துவர் பரமானந்திடம் கையைக் காட்ட மறுத்த  சாயி ,  தம் தீவிர அன்பரான ஷிண்டேயின் எளிய சிகிச்சையை ஏற்றுக் கொண்டது , பாபா தன் அடியவர்கள் மீது கொண்ட பேரன்பின் அடையாளம்.

பக்தர்களின் உள்ளங்களில் நிறைந்து நின்று வழிகாட்டும் சாயி நாதனின் வரலாற்றை நாமும் தொடர்வோம்…



Leave a Comment