சூரியனுக்கு சாப விமோசனம் கொடுத்த வியாசர்பாடி ரவீஸ்வரர் ஆலயம்


வட சென்னை பகுதியிலுள்ள வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. முலவர் ரவீஸ்வரர் மரகதாம்பாளுடன் அருள, உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தராக அருள்கிறார். தல விருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்தில் காமீக ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவன் சந்நதிக்கு மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எந்த ஆதாரமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது. 

இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சந்நதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பிறகுதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சந்நதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார்.

ஞாயிற்றுக்கி ழமை, உத்தராயண, தட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கின்றன. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சூரியபகவானின் மனைவியான சம்ஞ்யா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்று விட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சம்ஞ்யாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். 

இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சம்ஞ்யாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சம்ஞ்யா தேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற கோப அவசரத்தில் சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை. தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார். 

அவருக்குக் காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்த ருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், ‘ரவீஸ்வரர்’ (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.முற்காலத்தில் இங்கு சிவன் சந்நதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார். 

அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தல த்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதன் பி ன்பு, இங்கு அம்பிகைக்கு சந்நதி எழுப்பப்பட்டது. இவ்விழாவின் பத்தாம் நாளில் மகிஷன் வதம் வைபவம் நடக்கும். 

அப்போது அம்பாள் சந்நதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக் கட்டிவிட்டு,  அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர். இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும். சிவன் சந்நதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி  கட்டியும் வேண்டிக்கொள்கிறார்கள்.



Leave a Comment