திருமலாபுரம் பசுபதேஸ்வரர் ஆலயம்


திருமலாபுரம் பசுபதேஸ்வரர் ஆலயம்
ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘ஆனந்த வனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது.
தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், ‘சிரட்டைக் கின்னரி’ (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், பசுபதேஸ்வரர் ஆலயம் மட்டுமே.
நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சங்கு, சக்கர தாரியாய் நான்கு திருக்கரங்களுடன் இங்கு வீற்றிருக்கிறார். அருகே அமர்ந்த நிலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பல்லவர் காலத்தை ஒட்டிய கோவில் என்பதால், பல்லவர் குகைக்கோவில்களில் காணப்பெறாத, சிறப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் இங்குள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு உட்பகுதி பாறைச்சுவற்றில், நின்ற நிலையில் பிரம்மா மூன்று சிரசு, நான்கு கரங்களுடன் காணப் படுகிறார்.
நுழைவு வாசலில் உள்ள கனமான தூண்கள், விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரங்கப் பொதிகைகள் (தோரணம் போன்ற அமைப்பு) நுழைவு வாசலுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. முன்மண்டப விதானத்தில் பழங்கால ஓவியங்களின் (அன்னம், தாமரை மலர், வேட்டுவேர், சிம்மாசனம்) வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.
முன்மண்டபத்திலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பாறையில் வடிக்கப்பட்ட ஒற்றைக் கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாகக் காட்சி தருகிறார். குடவரைக் கோவில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையான அபிஷேக, ஆராதனை சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.
காலத்தால் பழையதும், கீர்த்தியால் செழுமை பெற்றதும், மனித உயிர்களை மெய் மறக்கச் செய்து, வேண்டுவன தந்து உலகம் உய்யக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார், பசுபதேஸ்வரர் இவருக்கான நித்யபூஜை சிறப்புடன் நிகழ்வுற, வல்லவ தேவன் என்ற பாண்டிய மன்னன் மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களை தானமாக வழங்கியுள்ளான். இத்தகவல் குகைக்கோவில் இடது தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் 2 கல்வெட்டுகள் உள்ளன.
சுயம்புலிங்கம்போல் குடவரையில் உள்ள சிவலிங்கத்துக்கும் அதீத ஆற்றல் உண்டு என்பதால், பிரதோஷ வழிபாட்டில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமிதோறும் நடைபெறும் கிரிவலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி தினங்களில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர். 
பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்கள், சாபங்கள் நீங்கி, சகல யோகங்களும் ஏற்படுவதால், இப்பகுதி மக்கள் ஈசனை ‘சர்வேஸ்வரன்’ எனவும் அழைக்கின்றனர். திருமணம், வாரிசு ஆகிய பிரார்த்தனைக்காகவும், சிறந்த கல்வி, உயர்பதவி பெறவும் வேண்டிப் பயன்பெறுகின்றனர். மழை பொழியவும், மன பயம் அகலவும் இங்கு வேண்டியதும் கைமேல் பலன் கிட்டுகிறது என்பது ஐதீகம்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
துன்பங்களைப் போக்கி, இன்பங்களைத் தந்து, நிறைவில் முக்தியைத் தரவல்ல சர்வேஸ்வரனாம் பசுபதேஸ்வரரை, வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வாருங்கள்!
சங்கரன்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேர்ந்தமரம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்குத் திசையில் 3 கி.மீ. தூரத்தில் பசுபதேஸ்வரர் குடவரைக் கோவில் அமைந்துள்ளது. கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் இவ்வாலயம் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக 60 கி.மீ. பயணித்தும் இக்கோவிலுக்கு வரலாம்.



Leave a Comment