அம்பை அருள்மிகு கிருஷ்ணசாமி கோயில்


நெல்லை மாவட்ட திருக்கோயில்கள்

அம்பை அருள்மிகு கிருஷ்ணசாமி கோயில்

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இக்கோயிலின் கட்டடக்கலை அமைப்பை நோக்கும்போது  இது பிற்காலத்தியது எனத் தெரிகின்றது. 

இக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் இடம் பெறவில்லை. எனினும் கோயிலுக்கு சொந்தமான நன்செய் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றின் வருவாயில் கோயில் நிர்வாகம் நடைபெறுகிறது. எனவே இக்கோயிலுக்கு நிலக்கொடைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனோ அவை கல்வெட்டுகளாக இடம் பெறவில்லை.

 இக்கோயில் மூலவர் எப்போதும் துணைவியரான ருக்மிணி, சத்தியபாமையுடன் இருப்பதால் நித்யகல்யாணப் பெருமாள் என்று வழங்கப்படுகிறார். இங்கு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இங்கு வேணுகோபாலரே தனது நாச்சியார்களுடன் தீர்த்தவாரி காண்கிறார்.
இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. மூலவர் நின்ற நிலையில் உள்ளார். அதனையடுத்து உள்ள மண்டபத்தில் உருளைத்தூண்கள் இருவரிசையில் உள்ளன. நடுவில் உற்சவமூர்த்தி திருவுருவம் அமைந்துள்ளது. அதனையடுத்து முகப்பில் துவாரபாலகர் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறை விமானம் ஏக தளமுடையதாக உள்ளது. 

திராவிடப்பாணியில் அதாவது சிகரம் (தலை) எட்டுப்பட்டை உடையதாக உள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தினையடுத்து சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன.

 கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. சிற்பங்கள் இடம் பெறவில்லை. கூரைப்பகுதியில் கொடுங்கையில் கூடுமுகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வாகன மண்டபம் அமைந்துள்ளது. அவற்றில் கருடன், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

நெல்லையிலிருந்து வந்துசெல்ல நல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன.



Leave a Comment