சமய ஒற்றுமைக்கு சாட்சி சொல்லும் சங்கரலிங்கர் கோயில்


நெல்லை மாவட்டத் திருக்கோயில்கள்-3

சங்கரன் கோவில் என கோவிலின் பெயரிலேயே அழைக்கப்படும் இந்த ஊர், நெல்லை மாவட்டத்தின் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.. இது ஐம்பூதத் தலங்களில் ஒன்றாகும். அந்த வகையில்  இது மண் தலமாகும். இக்கோவிலின் கிழக்கு வாசலில் 125 அடி உயரமுள்ள 9 நிலை கொண்ட இராஜகோபுரம் அமைந்துள்ளது..

கோவிலின் தென்பகுதியில் அர்த்த மண்டபம் , அந்தராள மண்டபம் , மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம் என வரிசையாக உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் ஒரு புற்றில் வள்மீகநாதர் என்னும் நாகாபரண புற்றுலிங்கம் உள்ளது. இதுவே இக்கோவில் உருவாக காரணமான புற்று ஆகும்.

வடபக்கம் சனிபகவான் , காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவி உள்ளனர். கீழ்ப் பிரகாரத்தில் சூரிய, சந்திரன் உள்ளனர் . மகா மண்டபத்தின் மதில் சுவற்றில் பல தெய்வங்களின் சிறு உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டு அக்கால சிற்பக்கலை நுணுக்கங்களை நமக்கு போதிக்கிறது. இம்மதிலின் தென் பக்கம் தட்சிணா மூர்த்தி, மேல் பக்கம் நரசிம்மர், வடபக்கம் பிரம்மா உள்ளனர். இவர்களை நாம் தரிசித்துவிட்டு அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் அங்கிருந்து சிறிய உருவில் எழுந்தருளியுள்ள சங்கரலிங்கப் பெருமாளை கண்குளிர தரிசிக்கலாம்.

சங்கரலிங்கர் கோவில் போன்றே கோமதியம்மன் கோவிலிலும், கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் , அந்தராள மண்டபம் , மா மண்டபம் சுற்று மண்டபங்கள் உள்ளன. கோமதியம்மை கர்ப்பக்கிரகத்திற்கு நேர் எதிரில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் மேல் மக்கள் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கிறார்கள். இருபக்கமும் மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.வடக்குப் பிரகாரத்தில் புற்றுமண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் இம்மண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்று நோய் நீக்கம் பெறுகிறார்கள். இது தோல் நோய்களை நீக்கும் அருமையான மருந்தாகும். அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்து கோமதி அம்மையைத் தரிசிக்கிறோம் .வலது கையில் மலர்ச் செண்டுடன் இடது கையைத் தொங்கவிட்டு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கும் அழகு திருக்கோலம் நம் மனதை விட்டு என்றும் நீங்குவதில்லை .. இந்தக் கோவிலில் தினசரி 7 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

இக்கோவிலில் சங்கரனார் மற்றும் கோமதியம்மைக்கு மட்டுமே இரண்டு சந்நிதிகள் , தெருவிலிருந்து நேரே தரிசிக்குமாறு இரண்டு பெரும் வாயில்களுடன் அமைந்துள்ளது. ஆனால் நடுவில் உள்ள சங்கர நாராயணருக்கு தலைவாசல் ஒன்று இல்லாதபடி உள்ளடங்கியே உள்ளது. மேலும் அம்மையின் வேண்டுதல் படி இறைவன் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தமையால் சங்கரநாராயணர்த் திருக்கோவில் பின்னால் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. 

வைணவப் பெரியார் இராமானுசர் மற்றும் வீர வைணவர்களான விஜயநகர மன்னர்கள் காலத்திலும், .திருமாலுக்கு இக்கோவிலோடு தொடர்பினை உண்டாக்கி இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததே சங்கரநாராயணர் என்று உருவாக்கிவிட்டனர் என்கிறார்கள்.

பரமேஸ்வரன் தன்னுள் அடங்கிய நாராயணரை வெளிப்படையாகத் தனது இடது பாகத்தில் காட்டி அருளினாரா ? அல்லது சிவன், திருமால் என்ற இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததால் சங்கரநாராயணரா ? எது எப்படியிருப்பினும் , தற்காலத்திற்கு மிகவும் அவசியமான சமய ஒற்றுமைக்கு இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி மக்களை நல்வழிப்படுத்தி வருகிறது. என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை . தமிழ்நாட்டில் சங்கரநாராயணருக்கு தனிக்கோவிலாக அமைந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் ஒரே திருக்கோவிலும் இதுவேயாகும்.

இத்தலம் தென் கிழக்கு தமிழக மக்களின் ஒரு பிரார்த்தனை தலம் ஆகும். பாம்பு , தேள் போன்ற சிறு விஷ ஜந்துக்களிலிருந்து நமக்கு துன்பம் வராதிருக்க பிராணிகளின் வெள்ளியிலான உருவங்களை வாங்கி உண்டியலில் செலுத்துவர். இங்கு கிடைக்கும் புற்று மண்ணைக் கரைத்துப் பூசினால் தோல் வியாதிகள் நீங்குவது யாவரும் அறிந்ததே. இத்தலத்திற்கு வந்து நாகசுனையில் மூழ்கி முறையாக வழிபடுவோர் குட்டம் , குன்மம் முதலிய தீராத நோய்களிலிருந்து விடுபட்டு நலம் பெறுகின்றனர்.

சங்கரன்கோயில்,  திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தாலுகா தலைநகராக விளங்கி வருகிறது. திருநெல்வேலியிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும் , கழுகுமலையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும், இராசபாளையத்திலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. நல்ல போக்குவரத்து வசதியுள்ள தார் சாலைகளும்,  புகைவண்டி நிலையமும் அமைந்துள்ளன. இது சென்னை – செங்கோட்டை .இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. 

Google Maps link - https://goo.gl/maps/8zP6Kpjn5LxoCedG8



Leave a Comment