பரீட்சைக்கு போகும் முன் அவசியம் போக வேண்டிய கோயில்


ப்ளஸ் டூ தேர்வு நெருங்குகிறது. அதற்கு முன்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. மாணவ, மாணவிகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், பெற்றோரின் மனம் வேண்டுவது தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதுதான்.

மனதில் வேண்டுவதோடு நின்றுவிடாமல் அவர்கள் தேர்வுக்கு முன்பாக தரிசிக்க விரும்புவது ஹயக்ரீவரைத்தான்.

கல்விக்கு கடவுளாம் சரஸ்வதி தேவி குருவாக வழிபடுவது ஹயக்ரீவரைத்தான் எனும்போது, கல்வியும், ஞானமும் அறிவும், ஆற்றலும் சித்திக்க அவரை சாமான்யர்களான நாமும் வழிபடுவதுதானே சிறந்தது.

சென்னைக்கு பக்கத்தில் எங்கே ஹயக்ரீவர் ஆலயம் இருக்கிறதென்று தேடுகிறீர்களா? சென்னைக்கு மிக அருகில் என்று விளம்பரங்களில் கேட்டிருப்பீர்கள்.. அப்படி மிக அருகில் மகேந்திரா சிட்டி அருகே குடி கொண்டிருக்கிறார் ஹயக்ரீவர்.

மிகச்சரியாக மகேந்திர சிட்டிக்கு எதிரே இருக்கும் சாலையில் சென்றால் 3 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே நகரத்திற்கான சாயல் இருக்கும். அதன் பின்னர் சிறு குன்றுகளும், வயலும், குளமுமான பாதை. கொஞ்சம் தொலைவு பயணப்பட்டதும் செட்டிப்புண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் வந்துவிடும்.

வழக்கமாக கோயில்களுக்கு முன்பாக தேங்காய், பூ, பழங்கள் அதிகம் விற்கப்படும். இங்கோஅந்த கடைகளை விட அத்தனை விதமான நோட்டுப்புத்தகங்களும், பேனாக்களுமாக விற்கும் சிறு கடைகளை அதிகம் பார்க்கலாம். அப்படியே ஒரு நோட்டு பேனா, கொஞ்சம் துளசியை வாங்கிக்கொண்டு உள்ளே போனால் ஹயக்ரீவரை தரிசித்துவிடலாம்.

யோக நிலையில் அமர்ந்த கோலத்துடன் நான்கு கரங்களுடன் சங்கு சக்கர தாரியாக இருக்கும் இறைவனின் முகத்தில் அத்தனை கரிசனமும் அன்பும் தென்படுவது, தவிப்போடு கோயிலுக்குள் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

அவர் முன்பாக நோட்டு பேனாவையோ, புதிய வகுப்பு பாடப் புத்தகங்களையோ தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டுகளோ வைத்து வணங்கி பெற்றோரும் பிள்ளைகளும் ஆசி பெற்று செல்வார்கள். வகுப்பின் தொடக்கத்தில் செட்டிப்புண்ணியம் கோயிலுக்கு செல்வது பலருக்கும் அந்தக் கடவுளே தங்கள் பிள்ளைகளுக்கு துணையாக இருப்பது போன்ற தைரியத்தை தந்துவிடும்.

பொதுத்தேர்வு நெருக்கத்தில் கோயிலுக்கு செல்பவர்கள் அங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்த்தாலே மிரண்டு போய்விடுவார்கள். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசை நிற்கும்.

ஹயக்ரீவர் கல்விக் கடவுளாம் சரஸ்வதிக்கே மகா குருவானவர். அரக்கர்களால் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை மீட்டுக் கொடுத்தவர். மங்கிய அறிவையும், ஞானத்தையும் அவரே மீட்டுத் தருவார் என்று நம்பி இங்கு வந்து யோக ஹயக்ரீவரை தரிசித்து செல்கிறார்கள்.

ஆமாம் இங்கு ஹயக்ரீவர் எப்போது வந்தார்?

1848ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் கொள்ளை போவதை தடுக்க பல பிரயத்தனங்களை எடுக்க வேண்டி இருந்தது. அப்படி கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் இருந்து தேவநாதபெருமாளும், யோக ஹயக்ரீவரும், அப்போது அடர்ந்த காடாக இருந்த செட்டிபுண்ணியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அப்போதிருந்து இங்கேயே பிரத்யட்சமாக காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மூலவராக வரதராஜ பெருமாளும் ஹேமாப்ஜவல்லி தாயாரும் சேவை சாதிக்க, உற்சவராக தேவநாத சுவாமி அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு உள்ளே நுழைந்ததும் வலப்பக்கத்தில் ராமர் சன்னதி தென்படும். நேராக சென்றால், கருடாழ்வாரின் பார்வையில் நேர் எதிரே கருவறையில் மூலவரும், தாயாரும் உற்சவரும் காட்சியளிக்க, அவர்களை தரிசித்து திரும்பினால், ஆண்டாள் தனி சன்னதியில் காட்சியளிப்பார். அவரை வணங்கி கடந்தால், ராமானுஜர், விஷ்வக்சேனர் தரிசனம். பின்னர் வெளியே வந்தால், அழகிய நந்தவனத்துடன் காட்சியளிக்கும் கோயிலை வலம் வரலாம். கோயிலில் தென்படும் அழிஞ்சல்மரத்தில் படிக்கவும், திருமண தடைகள் நீங்கவும், வீடு கட்டவுமாக வேண்டுதல் வைத்து ஆடையின் ஈரிழைகளை கட்டி வைத்திருப்பதை காணலாம்.

இந்த ஆலயத்தில் நோட்டு புத்தகம் வைத்து அர்ச்சனை செய்து வாங்கிச்செல்லும் பக்தர்கள்,, ஆர்வமிகுதியில் தங்கள் தேர்வு எண் பள்ளி பெயர், என சுவர்களில் கிறுக்கி தள்ளியிருப்பதுதான் பார்க்க சங்கடம் தருகிறது. கோயிலை பாழ்படுத்தாமல் நம் நம்பிக்கையை இறைவன் மீது மனமார வைக்கலாமே. இந்த எண்களை எழுதி வைத்தால்தான் அவருக்கு தெரியுமா? இறைக்கு தெரியாத பக்தனா என்ன?

1869ஆம் ஆண்டு தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்ட ராமபிரானும் சீதா, லட்சுமண சமேதராக இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

ஹயக்ரீவருக்கு பிடித்தமான ஏலக்காய் மாலையை அணிவித்து வழிபடுவதும், அவருக்கு உகந்த புதன்கிழமை வணங்குவதுமாக அவரது அருளை பெறலாம்.

யோக ஹயக்ரீவரை வழிபட்டால், கல்வியும் ஞானமும் சித்திக்கும். கல்வித்தடைகள் அகலும், பேச்சில் சிரமம் உள்ளவர்கள் தேன்நிவேதனம் செய்து சாப்பிட்டுவர பேச்சுப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை

“ஞானானந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ
வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே”

 -       எழுத்தாளர் பாமா
 



Leave a Comment