மீசையுடன் காட்சி தரும் பெருமாள்! போர்க்கள கோலத்தில் வேங்கடகிருஷ்ணர் அருளும் திருவல்லிக்கேணி
மீசை பெருமாளும்.. முகத்தில் அம்பு வடுக்களும்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மர்மங்கள்!
சென்னை மாநகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமானது. எங்கும் காண முடியாத பல அதிசயங்களையும், வரலாற்றுப் பின்னணிகளையும் கொண்ட இந்தத் தலத்தின் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.
தேரோட்டியாக வந்த எம்பெருமான்
திருமாலின் பக்தனான சுமதிராஜன் எனும் மன்னன், பெருமாளை மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக (சாரதியாக) இருந்த கோலத்தில் தரிசிக்க விரும்பினான். பக்தனின் ஆசைக்காகப் பெருமாள் இங்கு 'வேங்கடகிருஷ்ணராக' காட்சியளித்தார். போரில் தான் ஆயுதம் ஏந்துவதில்லை என்ற சபதத்திற்கு ஏற்ப, இங்குள்ள பெருமாள் கையில் சக்கரம் இன்றி, போரை அறிவிக்கும் சங்கு மட்டுமே ஏந்தி அருள்பாலிக்கிறார்.
முகத்தில் தழும்புகள் ஏன்?
பாரதப் போரில் பீஷ்மர் அர்ச்சுனன் மீது தொடுத்த அம்புகளைத் தன் மீதே ஏற்றுக்கொண்டு அர்ச்சுனனைக் காத்தவர் கிருஷ்ணன். அந்தப் போர்க்களத்தின் வடுக்களை இன்றும் இத்தல மூலவரின் திருமுகத்தில் நாம் காணலாம். மானிட வடிவில் கிருஷ்ணனாகத் தோன்றுவதால், நான்கு கரங்களுக்குப் பதிலாக இரண்டு கரங்களுடன் மட்டுமே பெருமாள் காட்சி தருவது உலகிலேயே இங்கு மட்டும்தான் உள்ள அபூர்வக் கோலம்.
கம்பீரமான மீசை பெருமாள்!
தேரோட்டிக்கு உரிய கம்பீரத்தை உணர்த்தும் வகையில், இங்கு வேங்கடகிருஷ்ணர் மீசையுடன் காட்சியளிக்கிறார். இதனால் இவருக்கு 'மீசை பெருமாள்' என்ற செல்லப்பெயரும் உண்டு. இருப்பினும், வைகுண்ட ஏகாதசி பகல்பத்து விழாவின் 6-ஆம் நாள் முதல் 10-ஆம் நாள் வரை 5 நாட்கள் மட்டும் இவரை மீசை இல்லாமல் தரிசிக்க முடியும்.
மூன்று நிலைகளில் பெருமாள்
வியாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோவிலில் பெருமாள் மூன்று நிலைகளில் அருள்பாலிக்கிறார்:
நின்றான் திருக்கோலம்: வேங்கடகிருஷ்ணர் (வீரம்)
அமர்ந்தான் திருக்கோலம்: தெள்ளியசிங்கர் எனும் நரசிம்மர் (யோகம்)
கிடந்தான் திருக்கோலம்: மன்னாதர் எனும் ரங்கநாதர் (போகம்)
கோவிலை விட்டு வராத வேதவல்லி தாயார்
பிருகு மகரிஷியின் மகளாகப் பிறந்து வளர்ந்த வேதவல்லி தாயாரை, ரங்கநாதராக வந்து பெருமாள் மணம் முடித்தார். இக்கோவிலில் தாயார் எப்போதும் கோவிலை விட்டு வெளியேறுவதில்லை (படிதாண்டா பத்தினி). வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கோவில் வளாகத்திற்குள் ஊஞ்சல் சேவையில் தரிசிக்கலாம்.
வழிபாட்டுப் பலன்கள்:
கல்வி ஞானம்: இங்குள்ள யோக நரசிம்மரை வணங்கினால் கல்வியில் சிறந்த ஞானம் பெருகும்.
குடும்பம்: இத்தல பெருமாளை வேண்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை வரம் கிட்டும் மற்றும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.

Leave a Comment