பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா.....


பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முருகனின் 3-ம் படை வீடாக விளங்கும் பழனியில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த வைகாசி விசாக திருவிழா ‘வசந்த உற்சவம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. முருகன், பரமசிவனின் நெற்றி கண்ணில் இருந்து ஒளி பிளம்பாய் தோன்றிய நாள் வைகாசி விசாக திருநாளாகும்.

இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 31-ந் தேதி இரவு பெரிய நாயகி அம்மன் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜை, புனித மண்ணெடுத்தல், அஸ்தர தேவர் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

1-ந் தேதியன்று காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜைகளும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்து சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரம் சுற்றி வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
10 நாட்கள் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழாவில் தினசரி காலை தந்த பல்லக்கிலும், இரவு தங்கமயில், வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம், வெள்ளியானை, வெள்ளி காமதேனு, தங்க குதிரை, பெரிய தங்க மயில் வாகனம் போன்றவற்றில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் திருஉலா காட்சி நடைபெறுகிற்து. 6-ந் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
7-ந் தேதி தோளுக்கினியான் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி காலை 10.45 மணிக்கு மேல் 11,45 மணிக்குள் திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.



Leave a Comment