அழகர்மலைக்கு திரும்பிய கள்ளழகர்....


பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்காக மதுரை சென்ற கள்ளழகர், நேற்று அழகர்மலைக்கு திரும்பி இருப்பிடம் சென்றடைந்தார். திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும், 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதுமான மதுரையை அடுத்து உள்ள அழகர்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த மே 6-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து மே8-ந்தேதி கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்று, 10-ந்தேதி சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். மறுநாள் வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலிலிருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு, கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி சாபம் தீர்த்து அருள்பாலித்தார். தொடர்ந்து 13-ந்தேதி நள்ளிரவுக்கு பின்பு பூப்பல்லக்கு விழா நடந்து, தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியாகி, கள்ளழகர் வந்த வழியாக மலைக்கு திரும்பினார். மே14 ஆம் தேதி அதிகாலை அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு காலை 10.30 மணிக்கு அழகர்கோவில் கோட்டை வாசலை சாமி வந்தடைந்தார். தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கு வையாழியாகி கோவில் உள்பிரகாரத்திற்குள் கள்ளழகர் சென்றார். தொடர்ந்து உற்சவ சாந்தியுடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.



Leave a Comment