ராஜகோபால சுவாமி கோவிலில் கருடசேவை


பங்குனி திருவிழாவையொட்டி பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கருட சேவை நடந்தது. பாளையங்கோட்டையில் அழகிய வேதநாராயணர், அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. இரவில் சிம்மம், ஆதிகேசவன், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது.
5-ம் திருவிழா நாளன்று சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவில் சுவாமி ராஜகோபாலன், அழகிய மன்னார் சுவாமிகள் இரட்டை கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது.
சுவாமிகள் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 10-ந் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு தவழ்ந்த கோலத்தில் கிருஷ்ணர் வீதி உலா நடக்கிறது. 11-ந் தேதி காலை தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.



Leave a Comment