சபரிமலையில் நடை திறப்பு....


சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைக்காக, நவம்பர் 15 ஆம்தேதி மாலை நடை திறக்கப்பட்டது.
சபரிமலையில் ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை 1-ஆம் தேதி முதல் 41 நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறப்பதையடுத்து நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தற்போதைய சபரிமலை மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி 18படிநடை, சன்னிதான நடையை திறந்து, ஐயப்பனின் தவக்கோலத்தை களைந்து மூலஸ்தானத்தில் தீபம் ஏற்றிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கு மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, மாளிகைப்புரம் மேல்சாந்தி மனுகுமார் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18படி அருகே வந்தனர். அவர்களை மேல்சாந்தி தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர்.
மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு அபிஷேகம் நடத்தி, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லி, கோயிலுக்கு அழைத்து சென்றார்.
இதையடுத்து பம்பையில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபாதை திறக்கப்பட்டதும் சபரிமலை நோக்கிச் சென்றனர். மாலையில் கோயில் நடை திறக்கப்பட்டதும் அவர்கள் 18படி ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து புதன்காலை நெய் அபிஷேகம் செய்வதற்காக சோபனத்தில் காத்திருந்தனர். இரவு 10 மணிக்கு சபரிமலை, மளிகைப்புரம் கோயில் நடை அடைக்கப்பட்டு புதிய மேல்சாந்திக்களிடம் சாவி வழங்கப்பட்டது.
மண்டல காலம் தொடக்கம்: இதையடுத்து புதன்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு, புதிய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, ஐயப்பன் சன்னதி நடைதிறந்ததும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்குகிறது.
தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயப்பனுக்கு தந்திரி,மேல்சாந்தி இருமுடியில் கொண்டுவந்த நெய்யால் முதல் அபிஷேகம் நடத்தி, பிரசாதம் வழங்கியதும், நெய் அபிஷேகம் தொடங்கும். 41 நாள்களும் அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் 3 மணிக்கே நடை திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



Leave a Comment