ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்


திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் நிறுத்தப்பட்ட புஷ்பயாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 1980ம் ஆண்டு முதல் மீண்டும் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதத்தில் ஸ்ராவண நட்சத்திரத்தில் நடத்தி வருகிறது.
அதன்படி வருடாந்திர புஷ்ப யாகத்தையொட்டி பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆகியோர் தலைமையில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வண்ண மலர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
இதில் ரோஜா, மல்லி, முல்லை, மருதம், சாமந்தி உள்ளிட்ட 18 ரகமான சம்பிரதாய மலர்களை கொண்டு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடத்தினர்.
புஷ்ப யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment