திருச்செந்தூரில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலா...


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 8ஆம் திருவிழாவான பச்சை சாத்தி வீதி உலா நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருள்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, கடந்த வெள்ளிக்கிழமை ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. ஆறாம் திருவிழாவான சனிக்கிழமை காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வந்தது.
ஞாயிற்றுக்கிழமை ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தந்து, பிள்ளையன்கட்டளை மண்டபம் சேர்ந்தார். அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் மாலை சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதனை தொடர்ந்து ஆகஸ்டு 29 ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சென்றார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பகல் 12.05 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



Leave a Comment