திருப்பதி கோயிலில் தேங்கி கிடக்கும் தங்கம்....


திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தங்கத்தை வங்கி அதிகாரிகள் ஏற்க மறுப்பதால் 1000 கிலோ தங்கம் தேங்கி கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கத்தை காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் ஏழுமலையான் உண்டியலில் தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.


திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் இது வரை அளித்துள்ள நகைகளின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கிலோவை கடந்து விட்டது. அதில் 1000 கிலோ நகையை தங்க முதலீடு திட்டத்திக் கீழ் முதலீடு செய்ய திருப்பதி-திருமலை தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.


இதையடுத்து பொதுத்துறை வங்கிகளை கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்பதி ஆலய அதிகாரிகள் அணுகி இது குறித்து பேசினார்கள். பக்தர்கள் பயன்படுத்திய நகைகளாக உள்ள அந்த 1000 கிலோ தங்கத்தில் ஒவ்வொரு வங்கிக்கும் எத்தனை கிலோ நகைகளை கொடுப்பது என்று பேசி வந்தனர்.

இந்த நகைகளை வங்கி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் மும்பைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மும்பையில் அந்த நகைகள் உருக்கி 999 கே.டி.எம் ஆக மாற்றப்படும். இந்த பொறுப்பை ஏற்க வங்கி அதிகாரிகள் தயங்குகிறார்கள். இதனால் திருப்பதி கோவிலின் 1000 கிலோ நகைகள் கடந்த 2 மாதமாக எந்த வங்கிக்கும் செல்லாமல் உள்ளது.

இதற்கிடையே அடுத்த 2 மாதத்தில் மேலும் 400 கிலோ நகைகள் சேர்ந்து விடும் என்று தெரியவந்துள்ளது. எனவே 1000 கிலோ நகையை பெற்று கொள்ளும்படி வங்கிகளுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது.



Leave a Comment