நாத்திகருக்கும் நல்லாசி வழங்கிய காஞ்சி மாமுனி


 

 

உலகம் தோன்றிய காலம் தொட்டே ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையே முரண்கள் நிலவி வருகிறது . கடவுள் உண்டு என்று சொல்வோரும் , இல்லை என்று சொல்வோருக்கும் இடையே பெரிய வேற்றுமை எதுவும் இல்லை .. இன்னும் சொல்ல போனால் ஆத்திகரை விட நாத்திகம் பேசும் மக்கள் தான் கடவுளைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள்  . வளர்ந்து வரும் விஞ்ஞானம் மெய் ஞானத்தை மறைக்கப் பார்க்கலாம் . ஆனால் முடிவில் அஞ்ஞானம் என்னும் மேகத்தை விலக்கிக்கொண்டு மெய்ஞான சூரியன்  வெளிப்பட்டே ஆகும் . அதற்கு ஒரு உதாரணம் தான்  கீழ் வரும் சம்பவம் .  தன்னை எட்டி உதைக்கும் சிசுவுக்கும் அமுதூட்டுபவள் தானே அன்னை . மஹா பெரியவா அவர்களும் தன்னை தூஷித்த நாத்திகரை ஆன்மீகப் பாதைக்கு வழி நடத்திய சம்பவத்தைப் பார்க்கலாம் .

 ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக சாண்டோ சின்னப்ப தேவரும், கண்ணதாசனும்  காரில் போய்க்கொண்டிருந்தார்கள் . அப்போது  ஏற்பட்ட மிகமோசமான விபத்தில்  சின்னப்பதேவர் சிறு காயங்களுடன்  தப்பித்துக் கொண்டார் .  ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப்பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டவர்  தேவர் . சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘ விபத்து நேர்ந்துவிட்டது’ என்று தான் சொன்னார் . அவர் சொல்லாமலேயே , அடுத்த நிமிடம்  ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும்பெரியவர்  கேட்க, வாயடைத்துப் போனார் தேவர்.  கண் கலங்க “அவர் படுகாயத்துடன் நினை வில்லாமல் மருத்துவ மனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்தபெரியவர், ‘சரி, கவலைப்படாதே… இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவுபோடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்துமடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரின்  பேச்சை மறுக்க துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவர் பெரியவர் சொல்லியும் அவ்வளவு  தயங்கியதற்கு காரணம், கண்ணதாசன், நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் மேடைகளில்  மிகவும்  தரைக்குறைவாகப் பேசிவந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒருவாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையிலேயே மடாதிபதிகளை இழிவு படுத்திப் பேசியிருந்தார்.

எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக்கொடுப்பது என்பது தான் தேவரின் பெரிய தயக்கமாயிருந்தது. ஆனால்  த்ரிகாலமும் உணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவர் சொல்லாமலேயே அவரின்  மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டு போய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பதுபோல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது.

இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.

வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச்சென்று  நினைவிழந்துபடுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின்கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன், நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ  என்பதைப் பற்றியே இருந்தது .

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண்விழித்திருந்தார். தேவரை பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில்  அப்படியே இருக்க, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்னவிபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப்பார்க்க, வேறு வழியின்றி கடவுள் மேல் பாரத்தைப் போட்டு ,வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளை கண்ணீர் நிறைத்தது .

 ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம் தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம், ஒருவேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட் டிற்குச் செல்லமாட்டேன். இப்பாவியிடம் கருணை வைத்த அந்த மகானிடம் முதலில் என்னை  தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மன முருகி வேண்டினார்.

அர்த்தமுள்ள இந்துமதம் உதயமான தருணம்                                                                           

சொன்னது போல் கண்ணதாசன்  காஞ்சி மாமுனிவரை சந்தித்து  அவரிடம் தனது பாவத்திற்கான மன்னிப்பையும் வேண்டிகொண்டார் . அச்சமயம் மனதில் உத்தித்த கவிதையை சமர்ப்பித் தார் . அக் கவிதை இதோ :

பார்த்த மாத்திரத்தில்                                       

பாவத்தை அலம்புகின்ற

தீர்த்தப் பெருக்கு,

திருவாசகத்தின் உட்கருத்து

கூர்த்த மதியால் மெய்ஞானக்

கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்

கலிமொய்க்கும் இவ்வுலகைக்

காக்கவந்த கண்கண்ட தெய்வம்

எம்மதத்தோரும் சம்மதத்துடன்

தம்மதத் தலைவனென தொழுதேத்தும்

தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

 

கவிதை வரிகளைக்கண்ட பெரியவர், கண்ணதாசனை கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறியதோடு ‘அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞான சூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று  ஆசீர்வதித்தார் . அக்கணமே கண்ணதாசனின் மனதில் தோன்றியது தான் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ . கண்ணதாசனின் ஆன்மீக சிந்தனையில் முளைத்த செந்தாமரை  .



Leave a Comment