கோரக்கரும் போகரும்


- "மாரி மைந்தன்" சிவராமன்

கோரக்கர் சித்தர் திவ்விய சரித்திரம் 
(பாகம் 4)

கோரக்கர்
வசிட்டர் 
துர்வாசர் 
காலாங்கிநாதர் இடைக்காடர் 
தன்வந்திரி 
கருவூரார் 
கமலமுனி 
சட்டைமுனி 
பிரம்மமுனி 
போன்ற 
சித்தர் பெருமான்கள்
பொதிகை மலையில் ஞானநெறியில் சிறந்திருந்த காலம்.

இதே 
காலகட்டத்தில் தான் இமயமலையும்
சித்தர்கள் இருப்பால் சிறந்திருந்தது.

அகத்தியர்
திருமூலர் 
விசுவாமித்திரர் 
போகர் 
புலிப்பாணி சித்தர் 
குதம்பைச் சித்தர் 
என்று 
சித்தர் கூட்டம் இமயமலையைப் பெருமைப்படுத்திக் கொண்டிருந்தது.

அது சமயம் அகத்தியருக்கு 
ஓர் ஆசை.

பொதிகை மலையில் இருந்த
காலாங்கி நாதரைக் கொண்டு 
வேள்வி ஒன்றைக்
கங்கை நதிக்கரையில் சந்திர புஷ்கரணி 
என்ற தீர்த்தக்கரையில் அன்னை 
ராஜராஜேஸ்வரிக்கு நடத்த 
விருப்பம் கொண்டார்.

பொதிகைமலை வாழ் காலங்கிநாதரை 
இமயமலை வாழ்
அகத்தியர் பெருமான் அன்போடு அழைத்தார்.

அகமகிழ்ந்த
காலாங்கி நாதர் 
அகம் நிறைந்த
96 சீடர்களோடு 
கங்கை கரைக்குப் பயணப்பட்டார்.

போகும் முன் 
பொதிகைமலையில் இருக்கப் போகும் 
மற்ற
சீடர்களை அழைத்து 
45 நாட்களில் 
திரும்பி வருவதாகவும் அதுவரை 
தன் உடலைப்
பாதுகாக்கச் சொல்லி ஆணையிட்டும் 
உடலை உகுத்து 
விட்டுப் புறப்பட்டார்.

சீடர்கள் 
மிகுந்த கவனத்துடன் குருநாதர் உடலைப் பாதுகாத்து வந்தனர்.

ஆனால் 
45 நாட்களில் 
குருநாதர் 
திரும்பவில்லை.

கங்கைக்கு போனவர் அகத்தியர்
போகர் முதலான சித்தர்ககளுடன் வேள்வியில் திளைத்திருந்தார்.

பின் 
அதே ஆனந்தத்தோடு அவர்களோடு இமயமலைக்குச்
சென்று விட்டார்.

காலம் நீடித்ததால் காலாங்கிநாதர் காலமாகிவிட்டார் என குருநாதர் உடலை 
எரியூட்ட முயன்றனர் சீடர்கள்.

கோரக்கர் 
தடுத்துப் பார்த்தார். அவர்களோ 
எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தனர்.

'காலாங்கி நாதர் 
காலம் கடந்தவர்.
சாகாக் கலை 
பயின்றவர்.
 இமயமலையில் 
உயிரோடு இருக்கிறார்' 
என கோரக்கர் 
தன் தவ ஆற்றலால்
 அறிந்து கூறியும் 
சீடர்கள் 
எரியூட்டுவதிலேயே அக்கறை காட்டினர்.

வந்ததே கோபம் கோரக்கருக்கு !

அத்தனை சீடர்களையும் அடிக்கத் தொடங்கினார். நையப் புடைத்தார்.

'காலாங்கி நாதரை கையோடு அழைத்து வருவேன்'
எனச் சொல்லி 
விண்ணில் பறந்தார் 
'ராஜாளி' பறவையாக.

இமயமலை.

அங்கே 
அகத்தியர் 
காலாங்கி நாதர்
போகர் 
சகிதம் 
சித்த சத்சங்கம்.

கோரக்கர் 
பொதிகையில் நடந்த அமளியைச் சொன்னார்.

"யார் இவர்...?"
என்ற கேள்வி 
எழுந்தது.

'கோரக்கர்'
என்று
காலாங்கி நாதர் 
கோரக்கர் பற்றி 
பெருங் குறிப்பு 
தந்தார்.

காலாங்கியின் 
அத்யந்த சீடரான 
போகர்
உடனே 
கோரக்கரின் கைப்பிடித்தார்.

"என் குருநாதரின் உயிர்காத்த நீவீர் 
இனி என் 
உயிர் நண்பர்"
கை குலுக்களில் 
உறுதி இருந்தது. 
இறுக்கம் இருந்தது.

கோரக்கருக்கு 
அது ஒரு ராசி.

குரு மச்சேந்திரர் 
ஆகட்டும் 
தோழரான
 பிரம்மமுனி ஆகட்டும் 
இப்போது போகர்
ஆகட்டும் 
கோரக்கரின்
 நெருக்கத்தில்
வந்தனர்.
அன்பு உருக்கத்தில் திளைத்தனர்.

உயிர் நண்பர்கள்
சூழ இருப்பது 
ஒரு கொடுப்பினை!

இமய மலையை 
விட்டு 
காலாங்கி நாதர் கிளம்பினார்.

புது நண்பர்கள்
 கோரக்கரும் போகரும் புதிய பயணத் திட்டம்
 ஒன்று போட்டனர்.

காலாங்கிநாதரிடம் போகரும் 
மச்சேந்திரரிடம்
 கோரக்கரும் 
ஆசிபெற்று விடைபெற்றனர்.

அது 
விண்வெளிப் பயணம். வான்வழிப் பயணம்.

கோரக்கரும் 
போகரும் 
வானில்
பேசிப்பேசி 
மகிழ்ந்தனர்.

மண்ணுலகம் திரும்பும்போது 
போகர் வசமிருந்த
 குளிகை தவறி 
பூமியில் விழுந்தது.

விண்ணில் 
பறக்க உதவும் 
குளிகை அது.

போகர் 
இறைவி 
ராஜ ராஜேஸ்வரியைத் தியானித்தார்.

திருநாகைக் காரோணம்
அருகே 
கடம்பர் வனத்தில் 
அம்மன் சன்னதியில் குளிகை கிடப்பதாக 
காட்சி தெரிந்தது.

கோரக்கரும் 
போகரும் 
அங்கே போனார்கள்.

குளிகை இருந்தது. எடுக்கத்தான் முடியவில்லை.

அன்னையின் குரல் அசரீரியாக ஒலித்தது.

"மகா சித்தர்களே...!
 அருகே 
தென்காரோணம் 
என்ற ஊர் உள்ளது.

அங்கே 
பால்மொழி அம்மை கோயில் உள்ளது. அவளோடு உறைந்திருக்கும் 
நல்லூர் நாதர் அற்புதமானவர்.

அவரை வேண்டின்
 குளிகை எடுத்துச் செல்லும் 
வரம் கிடைக்கும்".

அசரீரி கேட்டு
 மெய்சிலிர்த்த 
சித்தர்கள் இருவரும் 
கோயிலுக்குச் 
சென்று வழிபட்டனர்.

இறைவன் 
இசைவு தர 
குளிகையை எடுத்துக்கொண்டு
 பயணம் தொடர்ந்தனர். பொதிகைமலை அடைந்தனர்.

இரு சித்தர்களையும் அழைத்து 
அருள்பாலித்த 
நல்லூர் நாதர் திருத்தலமே 
வடக்கு பொய்கைநல்லூர்.


பொதிகை மலையில் போகர் 
கோரக்கருடன் 
இருந்த காலம் 
 பொற்காலம்.

ஒரு நாள் 
போகர் 
கோரக்கரிடம் விடைபெற்றார்.

சீன தேசம் சென்றார்.

அங்கு 
600 ஆண்டுகள் 
போகர் இருந்தார்.

நீண்ட காலம்
நண்பரைக் காணாத  
நட்பின் ஏக்கத்தால் போகரைக் காண கோரக்கர் 
சீனா பயணமானார்.

வழித் துணைக்கு புலிப்பாணி சித்தரை
அழைத்துக் கொண்டார்.

கோரக்கர் 
சீன தேசத்தில் 
சித்துகள் பல புரிந்தார். போகரைக்
கண்டு மகிழ்ந்தார்.

இப்படிப் போயின பல்லாண்டுகள்.

ஒரு நல்ல நாளில் 
மூவரும் திரும்பினர் தாய்நாட்டிற்கு.

இமயமலையில் புலிப்பாணியை
இருக்கச் சொல்லி விட்டு மீண்டும் 
ஒரு சித்தர் பயணத்திற்கு ஆயத்தமாயினர்
 நண்பர்கள் இருவரும்.

காசி 
காஞ்சிபுரம்
சிதம்பரம் திருவாவினன்குடி 
என இருந்தது 
அவர்கள் சுற்றுலா.

அப்பயணத்தின் போதுதான் 
சிதம்பரத்தில் 
43 கோணத்தில் 
51 எழுத்துக்களைக் 
இட்டு நிரப்பி 
ஒரு யந்திரத்தை
 உருவாக்கி 
அதைத்
தில்லைப் பெருமான் இடப்பாகம் ஆக்கினர் வல்லப சித்தர்கள் இருவரும்.

அதுவே இன்றைய
 சிதம்பர ரகசியம்.

திருவாவினன்குடி பயணத்தின்போது
இரு சித்தர்களும் உருவாக்கித் தந்ததே 
பழனி தண்டாயுதபாணி நவபாஷாணத் திருமேனி.

போகர்
பழனியில் 
தங்க விரும்பவே
 கோரக்கர் 
விடைபெற்றார்.

கோரக்கரின் 
மனதில் 
இருவரும் சென்று வந்த வடக்கு பொய்கைநல்லூர் நிறைந்து இருந்தது.

அங்கு மூன்று 
பவுர்ணமி காலம் 
பெரும் வேள்வி நிகழ்த்த சித்தம் கொண்டார்.

வழியில் திருவாரூர்.

திருவாரூர் 
தியாகராஜப் பெருமானைத் 
தரிசிக்கப் போனார். தரிசித்தார்.

அங்கே முசுகுந்த சக்கரவர்த்தி காத்திருந்தார்.

பொய்கைநல்லூர் 
வேள்வி பற்றிச் சொல்லி சக்கரவர்த்தியை உடனிருந்து 
உதவச் சொன்னார்.

'உத்தரவு'
என்ற வார்த்தை 
முசுகுந்த சக்கரவர்த்தியிடமிருந்து பணிவுடன் வந்தது.

நந்தி நல்லூரில் 
வேள்வி தொடங்கியது.

நந்தி நல்லூர்....? 
அதுவும் 
வடக்கு பொய்கைநல்லூரின் இன்னொரு பெயரே.

வேள்வி சிறக்க இறைவனை 
வேண்டி நின்றபோது புஜண்டரைத் தரிசித்து 
 ஆசி பெற ஆணையிட்டது 
 ஓர் அசரீரி.

கோரக்கர் 
தவத்தில் அமர்ந்தார்.

கண் விழித்தபோது
எதிரே காகபுஜண்டர்.

அவரது 
ஆசி உடனே 
கிடைத்தது.

கோயில் இருக்கும் ஆசிரமத்தின் 
அதிபதி புஜண்டர்.

அசரீரியின் அர்த்தம் கோரக்கருக்குப் புரிந்தது.

காலம் கடந்த 
மூத்த சித்தர் காகபுஜண்டரின் 
அருளாசி 
கோரக்கருக்கு கிடைத்ததால் 
வேள்வி வெற்றிகண்டது.

பொதிகைமலைக்குப் புறப்பட்டார் கோரக்கர்.

அப்போது 
அவர் மனதிற்குள் 
ஓர் அசரீரி 
மானசீகமாய் ஒலித்தது.

'இந்த இடத்திற்கு 
மீண்டும் வருவாய். இங்கேயே 
நிரந்தரமாக 
தங்கி விடுவாய் !'

அப்படித்தான்...
வடக்கு 
பொய்கைநல்லூரில்
இன்றும்
கோரக்கர் பிரான்
நிரந்தரமாய் தங்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.


(தொடரும்)
 



Leave a Comment