தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்.....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 16 ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் பெரிய சேஷம், சின்ன சேஷம்,  அன்ன,  சிம்ம,  முத்துப்பந்தல்,  கற்பகவிருட்சம்,  கருட , அனுமந்த, கஜ உள்ளிட்ட 14 வாகனங்கள் வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நான்கு மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு  உற்சவ மூர்த்திகள் கோயிலை விட்டு வெளியே வராமல் கோயிலுக்கு உள்ளே  கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். 

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று ஏழுமலையான் கோவிலில் உள்ள ஐயன மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் ஜீயர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு துளசி மாலை அணிவித்து கற்பூர ஆரத்தி வழங்கப்பட்டது. 

பின்னர் ஐயன மண்டபம் வெளியே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில்  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. வழக்கமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நடைபெறும் இதில் லட்ச கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடுவர். 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய அரசு தெரிவித்த நிபந்தனைகளின்படி மத வழிபாட்டு நிகழ்ச்சிகளில் 200 க்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதால் வீதி உலா ரத்து செய்யப்பட்டதோடு தீர்த்தவாரியும் கோயிலுக்குள் பக்தர்கள் இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்றது. செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி ,  கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் , அர்ச்சகர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர். 



Leave a Comment