முக்காலம் உணர்ந்தவரின்  மூன்று காலம்


- "மாரி மைந்தன்" சிவராமன்

வள்ளலார் சரித்திரம் பாகம் - 5

வள்ளல் பிரானின் 
திவ்விய சரித்திரத்தை 
மூன்று பாகங்களாகப் பகுக்கிறது 
ஓர் ஆய்வுக் குறிப்பு.
அது
ஒரு காலக் குறிப்பு.

திருவொற்றியூர் 
வழிபாட்டுக் காலம்.
சிதம்பரம் 
வழிபாட்டுக் காலம்.
வடலூர் 
வழிபாட்டுக் காலம்.

இவை மூன்றும் 
வள்ளல் பிரான் 
உலகுக்கு
வழிகாட்டும் காலமுமாய் அமைந்தது தான் சிறப்பு.

12 வயதில் 
அருளியல் வாழ்க்கை தொடங்கிய போது 
அவருள் 
சித்திகள் சில 
சக்தி மிக்கவையாகவே வெளிவரத் துவங்கின.

அவ்வப்போது 
இறைவனும் இறைவியும் உடனிருந்து அருளியதும் அற்புதங்கள் காட்டி 
அவரை உலகில் 
சிறக்க வைத்ததும் இறையருள் சித்தமே.

ஒருநாள் 
திருவொற்றியூர் 
தரிசனத்தை 
முடித்துவிட்டு 
நள்ளிரவில் 
வீட்டுக்கு வந்தார் 
வள்ளல் பெருமான்.

வீடு உள்பக்கமாகத்
தாழிடப்பட்டு இருந்தது. 
திண்ணையிலேயே படுத்துவிட்டார்.

பசி வந்திட்டால் 
பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பெருமானுக்கு 
அது பொருந்துவதில்லை.
எதுவும் பலிக்காது அவரிடத்தில்.

படுத்தவுடன் 
தூங்கிவிட்டார்.

பசியைப் பிணியென உலகிற்குத் தெரிவித்து எல்லா உயிர்க்கும் 
பசிப்பிணி ஆற்ற பிறப்பெடுத்து 
வந்தவருக்கு 
பசியாற்ற 
விருப்பப்பட்டது 
ஓர் உள்ளம்.

உலகின்
உச்ச தெய்வம் 
உமாபதியின் 
உள்ளம் நிறை 
வடிவுடை அம்மனே 
அவ்வுள்ளத்தின் அதிபதி.

'நம்பிள்ளை பசியோடு தூங்குகிறதே...'
என உணவோடு 
வந்தது அம்மன்.

வேடிக்கை காட்ட 
எண்ணி
வள்ளல் பிரானின் 
தமக்கை உருவில்
வந்தது.

தம்பியை எழுப்பி 
அமுதுண்ணச் செய்து மகிழ்வோடு சென்றது சகோதரி வடிவுடைய 
வடிவுடையம்மன்.

சற்று நேரத்தில் 
வீட்டினுள்
துயிலிருந்த 
தமக்கைக்குத்
திடீர் விழிப்பு.

'இவ்வளவு நேரமாய் 
தம்பியைக் காணாமே...'
வீட்டை திறந்து 
வெளியே வந்தார்.

திண்ணையில் 
உறங்கியபடி இருந்த 
தில்லை அரசனின் திருக்குமரனைப்
பார்த்தார்.

உடனே 
வீட்டிற்குள்
ஓடோடிச் சென்று 
உணவு கொண்டு வந்து தம்பியை எழுப்பினார்.

"என்னக்கா....

எத்தனை முறை உண்பது ? இப்பத் தானே தந்தீர்கள் ?

இது என்ன 
புதுப் பழக்கம் !"

கேள்வி மேல் 
கேள்வி வந்தது.

"நானா ? உனக்கா ?
என்னப்பா... விளையாடுகிறாயா "

தமக்கை 
அந்த ராத்திரியிலும் ரெளத்திரப்பட்டார்.

வள்ளல் பெருமான்,
"என்ன சோதனை இது ?"
என கண்களை மூடினார்.

மனக்கண்ணில் வடிவுடையம்மன் 
சிரித்தபடி தெரிந்தார்.

சிவனைப் போலவே அம்மனும் 
விளையாடுவார் போலிருக்கிறது...!

அது 
திருவிளையாடல்.
இது 
அம்மன் விளையாடல். 
அன்பு விளையாட்டு.

"பாருங்கள் அக்கா...
உங்கள் உருவில் 
வடிவுடை அம்மனே வந்து எனக்கு 
அமுதூட்டி இருக்கிறார். "

கொஞ்சம் பரவசமாய் சொன்னார் பெருமகனார்.

அந்த இரவிலும்
தமக்கையின் முகம் பிரகாசமாய் ஒளிர்ந்தது.

அவர் திருவாய்
'சிவ சிவ '
என ஒலித்தது.

தெய்வம் ஊட்டிய உற்சாகத்தில் 
உறங்கிப் போனார்
எல்லா உயிர்களுக்கும் உணவூட்டிய 
அன்பூட்டிய 
ஞானம் ஊட்டிய 
ஞான வள்ளல்


வராது வந்த 
மாமணியாய் திகழ்ந்த வள்ளல் பெருமான் நிகழ்த்திய 
அற்புதங்கள் 
சித்துகள் 
எண்ணிலடங்காதவை.

விவரிக்கின்
ஒரு பெரும் 
நூலாய் விரியும். 

ஒரு சில மட்டும் 
சான்றாக இங்கு .

வள்ளல் பெருமான் நிகழ்த்திய 
சித்தாடல்கள்
இறைவன் அவர் மூலம் நிகழ்த்திய அற்புதங்கள். பெருமானின் 
சித்தர் தன்மைகளை உலகுக்கு அறிவிப்பவை.

திருவொற்றியூர் 
சென்று வந்த 
காலகட்டத்திலேயே பெருமான் 
சித்திகள் பல
கைவரப் பெற்றார்.

திருவொற்றியூரில் பட்டினத்தடிகள் 
ஆலயம் பிரசித்தம்.

அங்கு 
ஒரு மூதாட்டி.
கோயில் தொண்டே 
அவரது வாழ்வு.

ஒருநாள் 
கோயிலின் 
குளத்தைக் கடந்த
வள்ளல் பெருமானைக் 
கண்ட மூதாட்டி 
ஓடோடி வந்தார்.

"ஐயனே....
எனக்கு 
ஓர் அற்புதம் 
காட்டுங்கள்....
அருள் அற்புதம் 
செய்யுங்கள்..."
பெருமானின் 
திருப்பாதம் பணிந்தார்.

குனிந்து 
குளத்து மண் 
எடுத்தார் 
குவலயம் 
சிறக்க வந்த 
குணாளர்.

மூதாட்டியின் 
கைகளில்
எடுத்த மண் வைத்துக்
கைகளை மூடி 
சில நேரம் கழித்துத் 
திறக்கச் சொன்னார்.

பாட்டியும் 
பெருமான் 
சொன்னபடி 
கைகளைக் குவித்து
மூடி 
பின் திறந்தார்.

கை நிறைய 
சிறு சிறு 
சிவலிங்கங்கள்.

அற்புதம் கேட்டவருக்கு ஆனந்தம்... பேரானந்தம்.

சிவலிங்கங்களின் பொற்பாதங்கள் 
கைகளில் 
நிறைந்திருக்க 
வழங்கிய 
வள்ளல் பெருமானின் திருப்பாதங்களைத்
தேடினார்.

அப்பாதங்களோ 
இறைவனின் பொற்பாதங்களைக்
காண வேண்டி 
ஒற்றியூர் கோயிலுக்குப் பயணித்திருந்தது. 

பிறகென்ன,
இவ்வற்புதம் 
மூதாட்டியின் வார்த்தைகளால் 
ஒற்றியூர் முழுக்க எதிரொலித்தது.


திருவொற்றியூர்
நெல்லிக்காய் 
பண்டார சந்து
வள்ளல் பெருமான் கோயிலுக்குச் செல்லும் வழக்கமான 
சந்தடியற்ற
சின்ன சந்து.

அங்கு
ஒரு 
வீட்டுத் திண்ணையில் 
ஒரு 
நிர்வாண சந்நியாசி.

பித்தனைப் போல் 
வாய்க்கு வந்தபடி
வசை பாடிக் 
கொண்டிருப்பது 
அவரது வழக்கம்.

வருவோர் போவோரைப் பார்த்து...

"இதோ... நாய் போகிறது..!"

"அட... கழுதை போகிறது..!"

"கொழுத்த மாடே ... 
பார்த்து போ.." 
கெக்கலிப்பார்.
குதுகலிப்பார்.

அச்சந்தே
அவரால் 
அருவருப்பாய் 
இருந்தது.

ஒரு நாள் 
வள்ளல் பெருமான் 
அச்சந்து வழியாகச் 
செல்வதைப் பார்த்து....

"இதோ...
உத்தம மனிதன் 
போகிறார்...."
என உரக்கச் சொல்லி பெருமானை நோக்கி 
ஓடி வந்தார் 
அந்த பித்தர்.

பார்த்த 
தெருமக்களுக்கு 
ஆச்சரியம் !

ஓடி வந்தவர் 
முதன் முறையாக 
தன் 
நிர்வாண நிலை 
உணர்ந்து 
கூனிக்குறுகி 
முடிந்த மட்டும் 
கைகளால் 
நிர்வாணம் மறைத்து 
அருகில் நின்றார்.

வள்ளல் பெருமான் புன்னகைத்தபடி 
அப்பித்தனின் காதில்
ஏதோ உரைத்தார் 
மெல்ல நடந்தபடி.

தெருவே 
வேடிக்கை பார்த்தது.

அதற்குப் பின்னர் 
நடந்ததே 
ஆச்சரியம்...!
அதிசயம்...!! 
அற்புதம்...!!!

வள்ளல் பெருமான் 
கோயில் பக்கம்
சென்ற 
அதே வேளையில் 
அத்தனை காலம் அருவருப்பாய் 
ஆட்டம் போட்டு அனைவரையும் 
மனம் கலங்கச் 
செய்து வந்த 
நிர்வாணப் பித்தர் இன்னொருபுறம் 
மூட்டை முடிச்சுகளுடன் நடையைக் கட்டினார்.

அதன்பின் அவர் 
எப்போதும் அங்கு காணப்படவில்லை.

அந்த பித்தர்
பின்னாளில் 
ஒரு மாபெரும் 
சித்தரானார் 
என்கிறது ஒரு குறிப்பு.

இந்த அற்புதம் 
இன்றும் 
திருவொற்றியூரில் 
ஏகப் பிரசித்தம்.

(வள்ளலார் வரலாறு விரியும்)
 



Leave a Comment