ஞானக்குழந்தை


- "மாரி மைந்தன்" சிவராமன்

வள்ளலார் சரித்திரம் பாகம் - 1

உடுத்துவதற்கு கோவணம்
உண்பதற்கு காய்கனிகள்
தவத்திற்கு அடர் காடு
சத்திரத்தில் சற்று தூக்கம்

தலையில் சடை முடி
முகத்தில் நீண்ட தாடி
கழுவாத அழுக்கு உடல்
தைக்காத கந்தல் உடை

தங்குதல் வெட்டவெளி
தவமிருத்தல் இருண்ட குகை
சிந்தை எல்லாம் சிவமயம்
சித்தி ஒன்றே ஒரே நோக்கம்

இடையிடையே 
உலகம் உய்ய 
மறைபொருளாய்
ஞானப் பாக்கள்
பரிபாஷையில் 
சித்தர் மருத்துவம். 

இடைவெளியின்றி
அள்ளித்தரும் 
அருளாற்றல்.

இவையாவும் 
சித்தர்களின் இலக்கணமாய் 
மக்கள் மனத்தில் இருக்கும் நெடுங்காலப் பதிவு.

அப்பதிவில்
அதிரடி 
மாற்றம் தந்தவர் 
வள்ளல் பிரான்.

ஒளிரும் முகம்.
கனிந்துருகும் கண்கள். 
பணிந்த கால்கள்.
உடல் ஏதும் 
தெரியா வண்ணம்
தூய வெள்ளாடை.

உடுத்துவதில் மட்டுமின்றி உண்ணுவதிலும் உறங்குவதிலும் 
உறவைப் பேணுவதிலும் இறையருள் பெறுவதிலும் 
இலக்கணம் வகுத்து இலக்கணமாய் வாழ்ந்து 
நிறை ஞானியாய் திகழ்ந்தவர் 
வடலூர் வள்ளல் பெருமான்.

சிதம்பரம் இராமலிங்கம்.

அழியாச் சித்தரான
அவர்தம் வரலாறு 
உலகே வியக்கும் 
திவ்விய சரித்திரம்.

அன்று 
வானத்திற்கும் 
வனத்திற்கும் 
வயல்களுக்கும் வாழ்விடங்களுக்கும் 
திருத்தலங்களுக்கும் திருவிழா.

பஞ்சபூதங்கள் 
பரவசமாய் 
ஆனந்த நடனம் ஆடின.

இறைவன் கூட
நிறைவாய் இருந்தான்.

மேகம் தேன் மழை பொழிய 
மலர்கள் நறுமணம் வீச 
தென்றல் மெதுவாய் தவழ 
மாலை மங்கும் தருணத்தில் 
ஓர் ஞானப் பூ 
பூமியில் புதிதாய் பூத்தது.

உலகுக்கு ஒளி தரும் 
சூரியன் 
இயற்கையாய் 
விடைபெறும் தருணம் 
பிரபஞ்சத்திற்கு ஒளியூட்ட 
ஞானச் சூரியன் உதித்தது.

அந்நாள்
1823 ஆம் ஆண்டு 
அக்டோபர் மாதம் 
5ஆம் நாள்.
மாலை 5.54 மணி.

சிவபெருமான் 
நடராஜப் பெருமானாக
ஆடல்வல்லானாக நடனமாடும் 
சிதம்பரம் 
பொற்சபைக்கு 
வடமேற்கே 
சற்று தூரத்தில் இருக்கும் மருதூரில் தான் 
ஞானசபை நாயகர் அவதரித்தார்.

அவரது திருநாமம் இராமலிங்கம்.

பெற்றோர் வைத்த பெயர் இராமலிங்கம்.

உற்றார் உறவினர் 
அழைத்த பெயர் 
ராமலிங்கன்.

ஆன்றோர் சான்றோர் 
அழைத்த பெயர் 
இராமலிங்க அடிகள்.

ஆன்மீகம்
போற்றிய பெயர் 
இராமலிங்க வள்ளலார்.

அவர் 
தனக்கிட்டுக் கொண்ட பெயர்
சிதம்பரம் இராமலிங்கம்.

சன்மார்க்கம் முதலாய் 
இன்று உலகே 
வணங்கும் பெயர் 
திரு அருட்பிரகாச வள்ளலார்.

வள்ளல் பெருமானின் வரலாறு 
ஆன்மீகச் செறிவும் அற்புதங்களின் தொடர்பும் 
இறைதேடும் வழியும் 
ஞானத் தெளிவும் கொண்டவை.

வள்ளல்பெருமான் 
தாயின் வயிற்றில் கருவானது முதல் 
உலகின் கண்
உருவானது நிகழ்ந்து, நிறைவில் 
இறையில் திருவானது வரை அனைத்தும் 
இறைவனின் கருணையே.

சிதம்பரம் நடராஜப் பெருமானும் 
கந்தகோட்டம் கந்தர் பெருமானும் 
திருத்தணிகை முருகப் பெருமானும் 
திருவொற்றியூர் தியாகராஜப் பெருமானும் 
வள்ளல் பெருமானை 
வார்த்தெடுத்த தெய்வங்கள்.

வடிவுடை அம்மனும் துலுக்கானத்தம்மனும் 
அவரை வளர்த்தெடுத்த 
தாய் தெய்வங்கள்.

பின்னாளில் 
கருங்குழியில் உறைந்து 
சன்மார்கம் நிறுவியபோது 
அவரது உபதேசங்கள் 
ஆழமாய் 
நுட்பமாய் 
தேடலாய் 
ஞானத்தைக்
கண்டடைந்ததாய் 
ஒரு புது மார்க்கம் கண்டது.

அதுவே 
சுத்த சன்மார்க்கம்.

இறையை ஒற்றி 
பல்லாயிரம் பாடல்கள் 
பாடி நின்றார்.
இறைவனைக் கண்டார்.

இறை அருளால்
ஞானம் பெற்றார்.

ஞானத்தை ஒற்றி 
பாக்கள் புனைந்தார். 
அவையே இன்றளவும் மெய்ஞானம் பகர்கின்றன.

அருட்பெருஞ்ஜோதி 
அற்புத ஆண்டவராய் 
தனிப்பெருங்கருணையாய் பேரொளியாய் 
தான் கண்டுணர்ந்ததைத்
தன் அனுபவத்தை 
பிறருக்கு உபதேசித்தார்.

எவரும் பெற முடியும் 
என கூவி அழைத்தார்.

அன்பர்கள் பலரை ஆட்கொண்டார்.

அவரது அமுதப் பாக்கள் 
ஆறு திருமுறைகள் ஆயின.

அவற்றில் குறிப்பாக 
ஆறாம் திருமுறை
ஞான அமுதாய் 
இன்றும் ஞானம் 
சொரிந்து வருகிறது.

இறையோடு இறையாய் 
ஒரு நன்னாளில் 
ஒளித்தேகம் பெற்று 
அவரே இறை ஆனார்.

அருட்பெருஞ்ஜோதி 
ஆனார்.

மருதூரில் 
ஒரு கணக்குப்பிள்ளை. 
பெயர் 
இராமையா பிள்ளை.

மனைவி சின்னம்மை. 
சின்னகாவனம் 
சொந்த ஊர்.

இராமையா பிள்ளைக்கு சின்னம்மை 
ஆறாவது மனைவி.

ஐந்து பேரும் 
மக்கட் பேறு இன்றி 
ஏதேதோ நோய்களால் மரணித்துப் போயினர்.

சிவபக்தையான 
சின்னம்மை 
ஆறாவதாய் 
மனை நிறைத்தார்.

ஒருநாள் 
சிவ அம்சத்தோடு 
சிவனடியார் ஒருவர் 
வாசலில் நிற்க 
ஓடிப்போய் 
தாள் பணிந்தார் 
சின்னம்மை.

உள் அழைத்து 
உள்ளன்போடு 
உபசரித்தார்.

உபசரித்தல் உணவிடுதல் 
புண்ணியங்களில் உயர்ந்தவை.

புறப்படும் தருணம் 
திருநீறு தந்த 
சிவனடியார்....

"உனக்கு 
ஓர் ஞான மகன் 
பிறப்பான்.

உன்னைப் போலவே 
அவன் 
பலரின் பசி தீர்ப்பான்...

ஊருக்கு மட்டுமல்ல உலகுக்கே பசி தீர்ப்பான்...

உலகம் போற்றும் 
இறையாய்
ஒளிர்வான்...."

என்று ஆசி தந்தார்.

விடைபெற்று 
வீதி வந்தவர் 
சில அடிகள் நடந்து 
தெரு முனைக்கு செல்வதற்குள் 
சின்னம்மை 
பார்த்திருக்க 
மாயமாய் 
மறைந்து போனார்.

அவர் வேறு யாருமல்ல...

எல்லாம்வல்ல 
ஆதிநாதன் 
சிவபெருமானே.

கடவுளின் அருளால் 
கருத்தரித்த வள்ளல்பெருமான் 
உரிய நாளில் 
உலகில் அவதரித்தார்.

ஐந்தாம் மாதம்.

குழந்தையை 
நடராஜர் தரிசனத்திற்கு சிதம்பரம் 
எடுத்துச்சென்றனர் பெற்றோர். 

அன்றைய அர்ச்சகர் 
அப்பைய தீட்சிதர், 
ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்.

அவர் சன்னதியில்
திரையைத் தூக்கினார்.

எல்லோரும் கைகளைச்
சிரம் மேல் தூக்கிப் 
பக்தி பரவசத்தில் கன்னங்களில் 
ஒற்றிக் கொண்டிருந்த போது 
தாயின் 
தோள்பட்டையையும் முந்தானையையும் 
பற்றிக் கொண்டிருந்த குழந்தை
பொக்கை வாய் விரித்து அம்பலவாணரின் 
திக்கைப் பார்த்துச்
சிரித்துக் கொண்டிருந்தது.

சிதம்பர ரகசியம் 
தரிசனம் ஆயிற்று
ஞானக் குழந்தைக்கு.

தீப ஆராதனையின் போது
அப்பைய தீட்சிதர் குழந்தையைக் கவனித்தார். 
ஓடோடி வந்தார்.

அவரது 
சிவஅனுபவம் 
பேசியது...

"பிள்ளைவாள்....!

இது ஏதோ 
சாதாரணக் குழந்தை அல்ல... 
இது தெய்வக் குழந்தை... ஞானக்குழந்தை...

இறைவனுக்குத் 
தீபம் காட்டியபோது
அங்கிருந்தபடி 
குழந்தையைப் பார்த்தேன்....

அப்படி ஒரு பேரொளி குழந்தையின் முகத்தில்....

சாட்சாத் 
அம்பலவாணரின் 
அருட்குழந்தையே இவன்.

பத்திரமாய் 
பாங்காய் வளர்ப்பது 
உங்கள் பொறுப்பு!

அம்மா....
நீயும் பாக்கியசாலி..
கவனம்..... மிக கவனம்."

சின்னகாவனம் 
சின்னம்மை 
மெய்சிலிர்த்தார்.

மகிழ்வோடு 
புறப்பட்டார்கள்
மருதூருக்கு.

அவர்கள் 
கோயில் சுற்றி வந்தபோது 
கோயிலின் வாசலில் அப்பைய தீட்சிதர் காத்திருந்தார்.

"இன்று குழந்தையோடு 
எனது இல்லத்திற்கு தயைகூர்ந்து வாருங்கள்..

எனது வீட்டில் 
உங்களுக்கு 
மதிய உணவு.

உணவு கூட
புண்ணியம்
பெறுவதற்காகக்
காத்திருக்கிறது.

உணவுப் பருக்கைகளில்
குழந்தையின் திருநாமம் 
உயிராய் பதிந்திருக்கும்
போலிருக்கிறது.

உலகுக்கே 
உணவு அளிக்கப் போகிறவனுக்கு 
அவன் 
சின்னஞ்சிறு வாயில் 
உணவு ஊட்டிய 
புண்ணியம் 
உங்கள் தயவால்
எங்கள் குலத்திற்குக் கிடைக்கட்டும்...!"

இன்னும் 
ஏதேதோ சொன்னார்.

அவை 
இறையும் மறையும் 
உணர்த்திய வார்த்தைகள்.

இறையருளால் 
அவதரித்தக் குழந்தை... 
இறை தரிசனத்தைக் கண்ட ஞானக்குழந்தை 
தவழ்ந்தது... 
நடந்தது.... 
வளர்ந்தது.

(சரித்திரம் விரியும்)....
 



Leave a Comment