செத்தவனைப் பிழைக்க வைத்த சித்தர்


- "மாரி மைந்தன்" சிவராமன்

பட்டினத்தார் கதை - பாகம் 4


'காதற்ற ஊசியும் 
வாராது 
காண் கடைவழிக்கே'
என்று
மருதவாணர் ஓலையில் 
உணர்த்தியிருந்த வாக்கை 
தன்வாழ்வின்
இலக்கணமாக்க
பட்டினத்தார் 
முடிவெடுத்தார்.

மகனாய்
மருதவாணராய் 
வந்து வாய்த்து
16 ஆண்டுகள் 
சொர்க்கம் தந்த 
இறைவன் திருவிடைமருதூரில் இறையானார்
என்ற தகவலை 
அக்கணம்
பட்டினத்தார் 
உணர்ந்தார்.
மெய்சிலிர்த்தார்.

என்னே....
இறை பாக்கியம் பட்டினத்தாருக்கு ?!

பட்டினத்தார் 
ஞானப் பாடல்களில் காணப்படும் 
'காதற்ற ஊசி'
என்னும்
ஞான வார்த்தைகளை
எடுத்து தந்தவர் 
மருதவாணராய் வந்த இறையனார் 
சிவபெருமான் அல்லவா !

சேக்கிழார் பெருமானுக்கு 'உலகமெலாம் '
என்ற வார்த்தையை 
முன்னெடுத்து தந்தவர்...

சுந்தரருக்கு 'பித்தா '
என்ற சொல்லை
எடுத்தாளச் சொன்னவர்...

பட்டினத்தாருக்கு 
'காதற்ற ஊசியை' காலமெல்லாம் 
வாழ்வியல் தத்துவமாக
நிலைக்கத் தந்திருக்கிறார்.

ஏற்கனவே
பார்வை
ஸ்பரிசம்
பாவனா 
உபதேசம் 
போன்ற தீட்சைகளைப் பெற்றிருந்த 
பட்டினத்தாருக்கு 
இப்போது ஒரு
புதிய தீட்சை.

ஞான தீட்சை.

'காதற்ற ஊசி....'

கற்பூர மலையில்
சிறு தீப்பொறி
சட்டெனப் பற்றியது 

எல்லாமே 
புரிய ஆரம்பித்தது.

மருதவாணர் 
சொல்லாமல் சொன்ன சிவரகசியம் புரிந்தது.

சட்டென எழுந்தார்.

ஆடைகளையும் ஆபரணங்களையும் அப்போதே களைந்தார்.

கோவணத்துடன் 
வாசல் நோக்கினார்.

மனைவி அதிர்ந்தாள்.
தாயோ தவித்தாள்.

"தம்பி...
வாழ்வின் 
கடைசி கட்டத்தில் 
நிற்கிறேன்.
எனக்கு 
ஈமச்சடங்கு 
செய்த பின் 
துறவு மேற்கொள்ளேன்"

கண்ணீர் மல்க 
தாய் கேட்டாள். 

ஏற்கவும் இல்லை.
மறுக்கவும் இல்லை. அமைதியா இருந்தார்.

அன்னையின் 
மரணம் வரை 
காத்திருந்து 
ஈமச்சடங்கு 
முடித்த கையோடு 
தேச சஞ்சாரம் 
என முடிவெடுத்தார்.

வீட்டைவிட்டு 
வெளியேறும் தருணம் மனைவி சிவகலை
காலைப் பிடித்தாள்
கண்ணீர் மல்க.

'என் கதி....?'

"கவலைப்படாதே...
சிவபக்தி 
அடியார் தொண்டு
இரண்டுமே 
உனக்குப் போதும்.
சிவகதி அடைவாய்.

என் பின்னால் வராதே.
சிவன் முன்னால் தொழு.
தொழுதபடி வாழ்...."
தத்துவம் சொன்னார்.

கணவனே கதியென 
வாழ்ந்த கற்புடை நல்லாள் கணவன் பேச்சை மீறாது கண்ணீர் துடைத்தாள்.

அடுத்து வீசினார் அணுகுண்டு ஒன்றை.

"இந்த சொத்துக்களை ஊர்மக்கள் 
விரும்பிய வரை 
எடுத்துச் செல்லலாம்..."

உத்தரவிட்டார் 
கணக்காயர் சேந்தனாரிடம்.

அடுத்து அவர் 
பாதம்பட்ட இடம் 
ஊர் எல்லையில் ஒதுங்கியிருந்த 
ஒரு பொதுச்சத்திரம்.

எது கேட்டாலும் 
தத்துவமாய் 
பாடலாய் 
பதிலாய் வந்தது.

'ஏராளமான சொத்து.. கணக்கிட முடியாத பொக்கிஷம்...
பட்டினத்தார் 
மக்களைச்
சூறையாடச்
சொல்லிவிட்டார்.' 

புகாராய்
மன்னரிடம் 
சேதி போனது.

விரைந்து வந்து சொத்துக்களைக் 
கைப்பற்றி 
உரிமையான உறவினர்களுக்குத் 
தந்தது போக 
மீதியைக் கஜானாவில் சேர்த்தார் மன்னர்.

"இதை முழுதும் 
அறப்பணிகளுக்குச் செலவிடுங்கள்" ஆணையிட்டார்.

சொத்து மதிப்பீடு 
அறிய சேந்தனாரை 
மிரட்டிப் பார்த்தார் 
மன்னர்.

சேந்தனாருக்கே 
கணக்குத் 
தெரியவில்லை.
அத்தனை சொத்து...!

சேந்தனாரை
சிறை செய்தார்.
பலனேதும் இல்லை.

'பட்டினத்தாரையே பார்த்துவிடலாம் '
மன்னர் சத்திரம் வந்தார்.

"பட்டினத்தாரே...
வணிக குலத் தலைவரே ! செல்வமெல்லாம் 
துச்சமெனக் கருதி
தூக்கி எறிந்துவிட்டு 
இப்படி பரதேசி போல் உட்கார்ந்திருக்கிறீர்களே ..."

நெஞ்சுருகிக் கேட்டார்.

ஒருகணம் மன்னரை 
உற்றுப் பார்த்த 
பட்டினத்தார் 
"மன்னா.....
நாடாளும் நீ
நிற்கிறாய்....
நான் உட்கார்ந்திருக்கிறேன் இதுவே என் நிலையின் விசேஷம்...."

விஷமமாய் சொல்லவில்லை. விஷயமாய் இருந்தது
உண்மையாய் இருந்தது பட்டினத்தார் பதில்.

அவர் தத்துவம் 
மன்னருக்குப் புரிந்தது.

வணங்கியபடி 
விடைபெற்றார்.

ஊர் முழுக்க
பட்டினத்தார் பற்றியே பரபரப்பான பேச்சு.

ஏளனம் 
எகத்தாளம் 
கேலி கிண்டல் என
எள்ளலும் 
வரைமுறையற்று வார்த்தைகளாய்
வலம் வந்தன.

பட்டினத்தாரின் 
சகோதரிக்கு தாங்க முடியவில்லை.

'குடும்பத்திற்கு அவப்பெயர்... வெளியே தலைகாட்ட முடியவில்லை..."

குடும்ப கௌரவம் 
கும்மி அடித்தது.

"ஒருமுறை 
வீட்டுப் பக்கம் வா... 
வீடு பேறு காணவிருக்கும் 
நீ எங்களை வாழ்த்து ..." பாசவலை விரித்தாள்.

பட்டினத்தார் 
ஒருநாள் அக்காள்
வீட்டிற்கு வந்தார்.

வீட்டினுள் செல்லாது வாசலில் நின்றார். வீட்டாருக்கு ஆசி தந்தார்.

தத்துவ மழை 
பொழிந்தார்.

பின் வழக்கம்போல் 
பிச்சை கேட்டார்.

"தமக்கையிடம் 
பிச்சை எடுத்து சாப்பிடுகிறாயா.."
கண்களை விரித்தபடி அப்பங்களைத் தந்தாள்
அலட்சியமாக.

அப்பத்தை வாங்கியவர் அப்பத்தில் இருக்கும் அநியாயம் உணந்தார். 

பின் உணவு 
எடுப்பதாகச் சொல்லி அக்காவிடம் விடைபெற்றார்.

"இன்றோடு ஒழியட்டும்... இவன் கதை....
குடும்ப மானமே பெரிது....
இவன் உயிரை விட "
என இனிப்பு அப்பத்தில் விஷம் கலந்திருந்தாள் வினயமான சகோதரி.

கையிலிருந்த அப்பத்தைச் சகோதரி வீட்டின் 
ஓட்டில் செருகி 
'தன்வினை தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும்...'
என தத்துவம் சொன்னார்.

என்னே அதிசயம்..!!
வீடு தீப்பிடித்தது.

பின் ஊரார் 
கால் பிடிக்க 
தீயணைக்க 
பட்டினத்தாரே 
கருணை காட்டினார்.

உறவே 
விஷம் வைக்க 
முயற்சித்தது 
ஊர் பேச்சானது.

பட்டினத்தாரின்
அடுத்த கட்டம் 
தொடங்கியது.

சிவனடியார்களே 
சுற்றத்தார்..
எல்லா உயிர்களும் குழந்தைகள்...
அறியாமையே பகை.
அன்பே சிவம்.
அருளே சிவம். 

குழந்தைகள் அவரின் தோழர்கள் ஆயினர். அவர்களோடு விளையாடுவது 
குப்பைக் கூளங்கள்
பாராமல் கட்டிப்  புரள்வது 
கும்மாளம் அடிப்பது வழக்கமாயிற்று. 

ஒரு நாள்
திருவெண்காடு சென்று ஆலயத்தில் தியானத்தில் இருந்தபோது தான் 
தாயாரின் மரணம் நடந்தது.

தாயாருக்குக் கொடுத்திருந்த வாக்கை மெய்ப்பிப்பதற்காக மெய் தந்த தாயை 
தேடி வந்தார்.

வாழை மட்டையில் 
தாயின் சடலத்தை வைத்து தாயை நினைத்து கொந்தளித்துப் பாடியது 
தீயாகி 
வாழைமட்டையோடு தாயையும் சேர்த்து
எரித்து சாம்பலாக்கியது.

தாயின் மரணம் பட்டினத்தாருக்கு 
விடுதலை தந்தது.

தமிழுக்கு 
வாழ்வியல் உண்மையை 
வாழ்வின் நிலையாமையை வடித்து இயம்பும் பாடல்களைத் தந்தது.

ஒரு நாள் 
திருவிடைமருதூர் 
கோயில் வாசலில் இருக்கும் 
ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருந்தார் பட்டினத்தார்.

சமீப காலத்து வசிப்பிடம் அதுதான்.

நிஷ்டையிலிருந்த
பட்டினத்தாரை 
'பட்... பட் 'என்று ஒரு சப்தம் எழுப்பியது.

கண் விழித்தவர் 
கண்ணில்பட்டது ஒரு கோல்,

அது தட்டிய சத்தமே பட்.. பட்.

கோலுக்குரியவரை 
தலை உயர்த்திப் 
பார்த்தார் பட்டினத்தார்.

அவர் அரசன் 
போல் இருந்தார்.

அத்தனை கம்பீரம்.
குரலே தனி மிடுக்கு

அரசன் தான்..
அரசனே தான்...

"யார் நீ...?"
அரசன் கேட்டான்.

"நானா.....? 
நான் என்பது 
என் உடம்பா
தோலா, நரம்பா 
சதையா, ரோமமா 
எலும்பா, ரத்தமா 
மூளையா. மூச்சா
மனமா....."

பட்டினத்தார் 
பதில் 
நீண்டு கொண்டிருக்க 
மன்னர் 
திடுமென 
மறைந்து போனார்.

அட ...
வந்தது மன்னனல்ல...
மருதூர் ஈசன்.

'தெய்வமே 
நேரில் வந்து பேசியும் அறிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்து விட்டேனே...'
கண்களில் நீர் வர 
மருதூர் ஈசன் 
நின்ற இடம் சாய்ந்தார். ஒற்றினார்.
மண்ணை எடுத்து 
நெற்றியில் ஒற்றினார்.

அப்படியே திண்ணையில் சாய்ந்தார்.

தவத்தின்போது 
மன்னன் கோலத்திலேயே மகேசன் வந்தார்.

"இனி 
நான் இருக்கும் கோயில்களை 
நாடி... பாடு" 
ஆணையிட்டார்
இறைவன்.

இது அடுத்த கட்டம்.

பட்டினத்தாரின் 
தேச சஞ்சாரம் 
இப்படி 
தெய்வ வழிகாட்டலில் துவங்கியது.

முதலில் சென்றது 
திருவாரூர்.

அங்கு அவர் 
நிகழ்த்திய அற்புதம்
அதிசயம்..

திருவாரூரே 
திருவடி தொழுத 
பேரதிசயம்.

பட்டினத்தார் 
சிலகாலம் 
திருவாரூரில்
தங்கியிருந்தார். 

ஒரு சிறுவன்...
அவனுக்கு 
பட்டினத்தாரைப் 
பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போனது.

அவனது பணிவிடை பட்டினத்தாருக்குப் பிடித்திருந்தது.

இரவும் பகலும் 
அவரது 
நிழலாய் இருந்தான். அருந்தவப் பயன் 
என மகிழ்ந்தான்.

ஒருநாள் 
அவனது தாயும்
அத்தையும் 
பட்டினத்தார் 
பாதம் வணங்கினர்.

"சுவாமி...
உங்களிடம் இருப்பவன் 
என் மகன்தான்...
இவள் அவன் அத்தை.

இவளுக்கு ஓர்
அழகிய மகள்.

இருவருக்கும் 
திருமணம் 
செய்துவிட்டால் 
எங்கள் இருவருக்கும் 
கடமை முடியும்.
நிம்மதி கிட்டும்.

ஆனால் என் மகனோ உங்களிடம் 
ஒட்டிக் கொண்டான். உங்களுடனேயே 
போகப் போவதாக  சொல்கிறான்.

எங்கள் குடும்பம் 
தழைக்க 
வழி செய்யுங்கள் 
சுவாமி...."

அம்மா புலம்பினாள்.
அத்தை 
கண்ணீர் சிந்தினாள்.

பட்டினத்தார் 
பையனை அழைத்தார்.

"திருமணம் செய்து கொள்... திருவருள் கிட்டும்.
அம்மா அத்தை 
அத்தை மகள் 
மனம் குளிரும் 
உன் மணம் சிறக்கும்..."

"இல்லை.... சாமி உங்களுடனேயே 
இருந்து விடுகிறேன்.. உங்களுடனேயே வந்துவிடுகிறேன்... உங்களுக்குப் 
பணி செய்வது 
என் குலம் செய்த 
பாக்கியம்"

ஏதேதோ
தர்க்கம் செய்தான்.

பட்டினத்தார் 
உறுதியாய் சொன்னார் 
"என் பேச்சைக் கேள்...
 மீறாதே...!"

அரை மனதோடு சம்மதித்தான்.

" நீங்கள் வந்து 
 ஆசீர்வதிக்க வேண்டும்" நிபந்தனை விதித்தான்.

' கண்டிப்பாய் ' கண்ணசைத்தார் பட்டினத்தார்.

திருமணம் நடந்தது. திருமனம் கொண்ட 
அருள் மயமானவர் அருகிருந்து வாழ்த்தினார்.

இறை பசி நிறைந்து 
இரை பசி குறைந்து சர்வகாலமும் 
இறைவனைச் 
சிந்தித்தவராய் இருந்த பட்டினத்தார் 
அடுத்து மதுரை 
செல்லத் திட்டமிட்டார்.

புறப்படும் நேரம் 
ஒரு பூகம்பத்
தகவல் வந்தது.

புதிய மணமகன் 
அவரது மனமகன்
மரணத்திருந்தான்.

சடலத்தைப் பார்க்க 
வீட்டில் நுழைந்து போது 
பெரிசொன்று சொன்னது..

"மோகம் முப்பது நாள்
என்று சொல்வாங்க...
இவன் வாழ்வே 
இப்படி முப்பது நாள் 
ஆகிப் போனதே ..."

உடனிருந்த பெருசு 
உருகிற்று...

"ஆமாமா...
பாவம்....!
அறியா பையன்.....

நேற்று 
எண்ணை தேய்த்து குளித்திருக்கிறான்.
இரவு மனைவியோடு 
களித்திருக்கிறான்...

ஜன்னி வந்து 
துடிதுடித்தான். 
எமன் வந்து 
பிடித்துச் சென்றான்"

பட்டினத்தாரைக் கண்டு கூட்டம் விலகியது.

தாயின் சடலத்தைக் கண்டு சஞ்சலம் காணாதவர் அப்பையனின் 
மரணம் கண்டு 
மனம் உடைந்தார்.

கண்கள் அவனைக்
கனிந்து நோக்கின. 
அவரது திருவாய்
பாடல் படித்தது.

என்ன அதிசயம்....!

ஏதும் நடக்காததுபோல் எழுந்தான் 
செத்திருந்தவன்.

"சுவாமிக்குப் பசிக்கும்.. பசியாற்ற வேண்டும்.."

விரைந்து ஓடினான் கூடியிருக்கும் கூட்டத்தை லட்சியம் செய்யாமலேயே.

ஊரே 
உணர்ச்சி பூர்வமாய் பட்டினத்தாரைக் கொண்டாடியது.

'செத்தவனைப் 
பிழைக்க வைத்த சுவாமி'
என ஒட்டுமொத்தமாக   
தாள் பணிந்தது.

சிறுநகை கூட காட்டாமல் பட்டினத்தார் புறப்பட்டார்.

"சுவாமி....
இங்கேயே 
இருந்து விடுங்கள். ஊரே உங்களுக்குத் 
தொண்டு செய்யும்..."

மறுக்காமல் ஏற்காமல் முகக்குறிப்பு காட்டாமல் பட்டினத்தார் புறப்பட்டார்.

அன்று முதல் 
அவரது பேச்சு நின்றது. மௌனமே மொழியானது.

அது ஏன் ?

அது 
சித்தர் ரகசியமாய் 
இருக்கும்.

பாகம் 5 இல் தொடரும்... 
 



Leave a Comment