காதற்ற ஊசி


- "மாரி மைந்தன்" சிவராமன்

பட்டினத்தார் கதை - பாகம் 3

பட்டினத்தார் அரண்மனையில் 
செல்வச் செழிப்போடு அன்போடு அருளோடு இறையாய் வந்த குழந்தை வளர்ந்து வந்தது.

'மருதவாணர் '
அக்குழந்தைக்கு 
பட்டினத்தார் பெயர் 
சூட்டினார் -

காவிரிப்பூம்பட்டினம் கண்டிராத கொண்டாட்டத்தோடு அரசனையே 
வியக்கச் செய்த விருந்து உபசாரங்களோடு.

இறையே குழந்தை 
என்றானதால் திருவிளையாடல்களுக்கு கேட்கவா வேண்டும் ?

ஒருமுறை 
மற்ற சிறுவர்கள் சகிதம் மரக்கலப் பயணம்.

பட்டினத்தாரின் 
ஒரே செல்ல மகன் மருதவாணர் தான் 
தலைமை.

நடுக்கடலில் 
திடுமென எழுந்த
திமிங்கலம் ஒன்று 
ஒரு சிறுவனை 
லபக் எனப் பிடித்து 
கபெக் என விழுங்கியது.

சிறுவர்கள் துடித்தார்கள். பயந்து நடுங்கினார்கள்.

"மருதவாணா... 
திமிங்கலம்....."
எனக் கூக்குரலிட்டார்கள்.

மருதவாணர் எழுந்தார்.

அடுத்த முறை 
அந்த திமிங்கலம் 
படகு அருகே 
வந்தபோது 
விரைந்து தாவி
எட்டி உதைத்தார்.

செத்து மிதந்தது 
திமிங்கலம்.

சிறுவர்கள் வியந்தார்கள். மருதவாணரைக் கட்டிப்பிடித்து 
நன்றி சொன்னார்கள்.

தலை மேல் தூக்கி வைத்து கூக்குரல் இட்டார்கள்.

அப்போது
செத்து மிதந்த திமிங்கலத்தில் இருந்து 
ஒரு மனிதன் வெளிப்பட்டான்.

அவன் விண்ணில் எழுந்தபடி சொல்லத் தொடங்கினான்...

"கண்கண்டதெய்வமே... 
நான் மணிக்கிரீவன் 
என்னும் கந்தர்வன்.

ஒருமுறை 
ஒரு சித்தரை 
அவமதித்து விட்டேன்.
அவர் விட்ட சாபத்தால் திமிங்கலம் ஆனேன்.

என் அழகு காரணமாக அகந்தை மிகுந்து 
ஆட்டம் போட்டதால் 
இந்த கோலம்.
திமிங்கல வேடம்.

ஒரு தெய்வமகன் 
வருவார்.... 
அவர் உன்னைத் 
தன் காலால் உதைப்பார்.

அப்போது சாபம் நீங்கும்..."

என அந்த சித்தர் சொல்லியிருந்தார்.

"தெய்வமே.... வணங்குகிறேன்.
ஆசி தாருங்கள்.
விடை கொடுங்கள்..."

வணங்கியபடி 
மறைந்து போனான் 
அந்த கந்தர்வன்.

சிறுவர்களுக்கு 
ஏக அதிர்ச்சி.

ஒரு தோழன் 
தட்டுத்தடுமாறி 
மருதவாணரிடம் 
படபடத்துச் சொன்னான்.

"ஐய்யோ...
நம்ம நண்பன் எங்கே ? 
அவன் இல்லாது திரும்பினால்
அவன் வீட்டில் 
நம்மைப் 
பின்னி 
எடுத்து விடுவார்கள்..."

நடுங்கியபடி 
இன்னொரு சிறுவன் சொன்னான்....

"அவனைத் திமிங்கலம் 
சாப்பிட்டு விட்டதே...!"

புன்னகைத்த 
மருதவாணர் 
செத்து மிதந்த 
திமிங்கலத்தை 
உற்று நோக்கினார்.

விழுங்கப்பட்ட சிறுவன் உடலெங்கும் சூடப்பட்ட 
முத்து மாணிக்க 
தங்க ஆபரணங்களுடன் நடுக்கடலில் 
திமிங்கலத்தில் இருந்து வெளிப்பட்டு 
நடந்து வந்து 
மரக்கலம் ஏறினான்.

"வேண்டுமானால் 
நீங்களும் சென்று இன்னொரு திமிங்கலத்திடம் அகப்படுங்கள்....

மருதவாணன் 
காப்பாற்றி விடுவான்... உங்களுக்கும்
ஆபரணங்கள் கிடைக்கும்."

குழுவிலிருந்த 
குட்டிச் சிறுவன் 
கலகலப்பூட்டினான்.

தாவிக்குதித்து 
படகையே 
ஆட்டம் காண வைத்த
அத்தனை சிறுவர்களும் ஒருவழியாக 
கரை திரும்பினர்.

கடலில் நடந்தது
ஊருக்குள் வியப்பான 
செய்தியானது.

ஊர் மருதவாணரைக்
கொண்டாடத் துவங்கியது.

பட்டினத்தார் பூரித்தார். பரமனுக்கு நன்றி சொன்னார்.

மருதவாணர் 
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தார்.
வாலிபர் ஆனார்.

பதினாறு வயதிலேயே கல்வியிலும் 
வணிகத்திலும் 
அருளாற்றலிலும் 
சிறந்து விளங்கினார்.

ஒரு தடவை
ஒரு முத்துக்கு 
விலை நிர்ணயிப்பதில் வணிகர்களுக்கு இடையே குழப்பம் வந்த போது மருதவாணர் 
தந்தை பட்டினத்தாரின் கணிப்பையும் 
தவறு எனக்கூறி 
ஒரு விலை நிர்ணயித்தார்.

வாணிப உலகம் 
வணங்கிப் போற்றியது.
 
'இது.... இதுதான்... 
சரியான நேரம்...

திரைகடலோடி 
திரவியம் தேட...'
 
பட்டினத்தார் கணித்தார். மருதவாணர் புன்னகைத்தார்.

'ஆம்... 
இது.... இதுதான்..
சரியான தருணம்'

மருதவாணரது 
கணக்கு வேறாக 
இருந்தது.

அது இறை கணக்கு. தெய்வமாய் வந்த மருதவாணரின்
தெய்வீகக் கணக்கு.

கடல்கடந்த வணிகம்....
கட்டிளம் காளை 
மருதவாணர்....

ஊரே திரண்டு வந்து 
வாழ்த்த புறப்பட்டது காவிரிப்பூம்பட்டினத்து 
கடல் வணிகக்குழு.

நாட்பட்ட பயணம்.
ஆட்பட்ட வணிகம்.
மேம்பட்ட பொருளீட்டல்...
நாடு திரும்பிக் கொண்டிருந்தது கப்பல்.

வழியில் நடுக்கடலில் 
ஒரு நாள் 
கப்பல் குலுங்கியது.

பேய்மழை...
பெரும் காற்று...
கடும் குளிர்....
கப்பலில் இருந்த 
வணிகப் பெருமக்கள் நடுங்கினர்.
ஒடுங்கிப் படுத்தனர்.
நடுக்கம் பெரிதாகி 
நாடினர் மருதவாணரை.

'பயப்பட வேண்டாம்'
என தைரியம் சொல்லி அவர்களுக்கு 
காய்ந்துபோன சில வறட்டிகளைத் தந்தார்.

ஏதென
அவர்கள் வினவ 
'அவைதான் 
தன் வணிகத்தில் 
தான் சம்பாதித்தது '
என சிறிதும் 
கவலையின்றிச் சொன்னார்.

கூடவே 
தான் கொடுக்கும் வறட்டிகளை ஊர் திரும்பியதும் 
அவர்கள் தந்துவிட வேண்டும் என பத்திரத்தில் கையொப்பம் கேட்டார்.

மருதவாணருக்கு 
ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் நினைத்தாலும்...

" நீங்கள் 
என்ன சொன்னாலும் கேட்கிறோம்....
எங்களை உயிரோடு காப்பாற்றினால் போதும்...

இப்போது குளிர் போக்க வறட்டி தாருங்கள்..."

உறைந்து போன 
குரல்கள் ஒலித்தன.

எரிக்கப்பட்ட வறட்டி 
தந்த சூடு 
அவர்களுக்கு இதம் தந்தது. கொஞ்ச நாழிகையில்
புயல் ஓய்ந்து 
கப்பல் ஆட்டமும் நின்றது.

அதோ 
கரை தெரிகிறதே ! காக்கைகளும் கழுகுகளும்  வட்டம் இடுகின்றனவே !! 
ஓ.…காவிரிப்பூம்பட்டினம் வந்துவிட்டதோ !!!

கப்பல் வரும் நாளைக் 
கணித்திருந்த காவிரிப்பூம்பட்டினம் களைகட்டியிருந்தது.

மகன் மருதவாணர் பொருளோடும் புகழோடும் வருவதால் 
தனது கஜானாவை 
முழுவதும் திறந்து 
வாரி வழங்கினார் பட்டினத்தார்.

கப்பல் நிற்கும் இடம் 
கடலில் சற்று தொலைவில்.

மகனை அழைத்து வர 
படகில் போனார் 
பட்டினத்தார். 

எதிரில் வந்த 
பயணி ஒருவர் 
"ஐயா... 
உங்கள் மகனுக்கு 
பைத்தியம் பிடித்துவிட்டது.

அறை முழுக்க 
வறட்டி தான் வைத்திருக்கிறான். 

உடன் 
வைத்தியம் பாருங்கள்"
படகு போகிற போக்கில் சொல்லிச் சென்றார்.

இன்னொரு படகில் மருதவாணர் கரைக்கு சென்று கொண்டிருக்கும் செய்தியை இன்னொருவர் சொன்னார்.

பைத்தியம் என்று 
கேள்விப் பட்டதால் பயந்துபோன 
பட்டினத்தார்
உடனே 
சிலரை அனுப்பி 
கரையில் 
ஒரு மண்டபத்தில் வைத்து மகனைக் காவல் காக்க உத்தரவிட்டார்.

கப்பலேறி 
வணிகம் செய்து
 திரும்பிய மகனின் 
வணிக வல்லமையைப் பார்க்க நினைத்து
படகைக் கப்பல் பக்கம் 
விடச் செய்தார்.

கப்பலில் 
மருதவாணர் அறையில் 
சில மூட்டைகளும் 
பல வறட்டிகளும் 
தென்பட்டன.

மகனுக்குப் 
பைத்தியம்தான் 
பிடித்து விட்டதோ என 
மிரண்டார் பட்டினத்தார்.

"அடச்சே... 
இதையா சம்பாதித்து வந்திருக்கிறான். 
இருக்கட்டும்...

பைத்தியம் பிடித்து விட்டதாக  சகபயணி சொன்னானே உண்மையாய் இருக்குமோ ?

புத்தி பேதலித்துப் போயிருந்தாலென்ன..... பத்திரமாய் வந்து சேர்ந்தானே ...

அது போதும்...!"

ஒரு பெட்டியில் வறட்டி  ஒன்றைப் பாதுகாப்பாய்
வைத்திருந்தார் மருதவாணர்.

கோபமாய் வறட்டியை 
எடுத்து 
கப்பல் சுவற்றில் 
வீசி எறிந்தார் பட்டினத்தார்.

வறட்டி உடைந்து 
அதிலிருந்து 
மாணிக்கப் பரல்கள் சிதறின.

மூட்டை முழுவதும் 
அழுக்குத் துகள்கள் அல்ல. அத்தனையும் 
தங்கத் துகள்கள்.

'இதற்குத் தானே 
ஆசைப்பட்டீர் பட்டினத்தடிகளே ! '
எப்போதும் கேட்கும் தெய்வக் குரல்
எள்ளி நகையாடியது.

அருகில் சில தாள்கள்..
அது சக வணிகர்களின் கையொப்பம்  
கொண்ட பத்திரங்கள்.

ஊர் திரும்பியதும் இதேபோன்ற வறட்டியைத் திருப்பித் தரவேண்டும்
என்ற கண்டிப்பான வாசகங்களோடு. 

பட்டினத்தார் 
வியப்பில் ஆழ்ந்தார்.

'என்னே திறமை 
என் மகனுக்கு !
எவ்வளவு செல்வம்...!'

திரும்ப கரைக்கு
விரைந்து போகச்சொல்லி படகோட்டியை விரட்டினார்.

தரை தட்டியதும் 
மகனைத் தழுவ மண்டபத்திற்கு ஓடினார்.

" ஐயா... எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எப்படியோ தப்பித்து விட்டார் சின்னையா...."

வீட்டிற்கு ஓடினார் பட்டினத்தார்.

வழியில் ஓரிடம் விடாமல் கண்களால்
துழாவித் தேடினார்.

வீட்டில் தாயும் 
மனைவியும்,
"இப்பத்தான் 
வெளியே போனான். வந்துவிடுவான்..."
என்று சாதாரணமாகச் சொல்லியபடி
மருதவாணர் 
வாங்கி வந்திருந்த பொருட்களைக் காட்டினர்.

பொறுமை இழந்த பட்டினத்தார் 
மகனைத் தேடி 
வெளியே கிளம்பினார்.

ஊர் முழுக்கத் தேடியும் மகனைக் காணவில்லை.

சக வணிகர்களை வரவழைத்து விசாரித்தார்.

அவர்களுக்கு வறட்டிகளைத்
திரும்பத் தருவதில் பிரச்சினை.
வைரம் வைடூரியம் கொண்ட வறட்டிகளை அல்லவா திருப்பித் தரவேண்டும் ?

வீணாய் சிலவற்றை நெருப்புக்கு அல்லவா இரையாக்கி 
குளிர் காய்ந்தனர் அவர்கள்.

ஒரு வணிகர் சொன்னார் 
'ஊர் திரும்பியதும் திருவிடைமருதூர் போகவேண்டும் '
என்று சொல்லிக்கொண்டிருந்தார். அங்கு சென்றிருப்பார்..."

அதேநேரத்தில் 
மருதவாணர் திருவிடைமருதூரில் சிவசருமர் சுசீலை தம்பதியினர் முன் இருந்தார்.

பதினாறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் 
தெய்வ மகனை 
அடையாளம் கண்ட 
அவர்கள் 
தாய் தந்தை  
என்பதையும் மறந்து மருதவாணர் திருவடி வணங்கினர்.

அதே கணம் 
அவர்கள் இருவரும் இறையோடு இறையாய் 
சிவனடி கலந்தனர்.

சிவன் தந்த வாக்கு 
சரியாக 16 ஆண்டில் சித்தியானது
இறைவன் திருவுளம்
அன்றி வேறென்ன ?

'மருதவாணர் திருவிடைமருதூர் 
சென்று இருக்கலாம். வந்தவுடன் 
பேசிக் கொள்ளலாம் '
என்ற எண்ணத்தில் 
வீடு திரும்பினார் பட்டினத்தார்
கொஞ்சம் ஏமாற்றத்தோடு நிறையக் குழப்பத்தோடு.

"மருதவாணன் 
வீட்டை விட்டு 
அவசரமாக போகும் வேகத்தில் 
ஒரு பெட்டியை 
உங்களிடம் 
கொடுக்கச் சொன்னான்"

ஒரு சிறு பெட்டியை 
தந்தாள் 
மனைவி சிவகலை.

அவசர அவசரமாய் பெட்டியைத் திறந்தார் பட்டினத்தார்.

உள்ளே 
காதற்ற ஊசி ஒன்று.
ஓலைத் துணுக்கு ஒன்று.

திருப்பித் 
திருப்பிப் பார்த்தார்.

ஓலைத் துணுக்கில் 
சிறிய எழுத்தில் 
எழுதி 
இருந்ததைப் படித்தார்.

'காதற்ற ஊசியும் 
வாராது காணும் கடைவழிக்கே'

எங்கிருந்தோ 
ஓங்கி அடித்தது 
ஒரு பலத்த அடி.

அது பிட்டுக்கு 
மண் சுமந்த 
பரமன் கொடுத்த அடி.

(பாகம்-4 இல் தொடரும்)



Leave a Comment