அழுகண் சித்தர்


- "மாரி மைந்தன்" சிவராமன்

அவர்
ஒரு 
சித்தர்.

தாடியும் 
முடியும் 
சித்தர் கோலமும் 
சித்தராயிருக்கும் 
எனச் சொல்லாமல் சொல்லும்.

ஓரிடத்தில் 
தங்க மாட்டார்.
ஒரு சொல்லும்
பேச மாட்டார்.

நடந்து 
கொண்டே இருப்பார். ஊர் ஊராய் போய் உலவிக்கொண்டே இருப்பார்.

யார் எதைக் கேட்டாலும் பதில் இருக்காது.

உற்றுப் பார்ப்பார். உடன் சற்று 
ஒதுங்கிப் போவார்.

கண்களில் மட்டும் கண்ணீர் எப்போதும் உதிர்ந்து 
கொண்டே இருக்கும்.

ஆம்.... அழுதுகொண்டே இருப்பார்.

அவர் 
அழுகைக்கு காரணம் ?

என்னவாயிருக்கும் ?

அவர் அழுவது யாருக்காக ?

அவர் 
ஊருக்காக அழுதார்.
உலகுக்காக அழுதார்.

தனக்காகவும் அழுதார்.

ஆனால் அதில் சுயநலம் இல்லை.

ஞான மயமான உலகத்துக்காக அழுதார்.

எல்லோருக்கும் ஞானநிலை வேண்டி மக்களுக்காக அழுதார்.

எப்போதும் 
அழுத கண்ணோடு 
அலைந்து கொண்டிருந்ததால் 'அழு கண் '
எனப் பெயர் பெற்றார்.

இருப்பினும் 
அவர் 
பெயர்க்குரிய காரணம் பலவாறாகப் பரவியுள்ளது உண்மை.

அவருக்கு குரல்வளையில் 
ஒரு நிரந்தரப் புண்.

அதனால் 
அழுகுரல் போல் இருக்கும் 
அவர் குரல்.

எனவே 
'அழு கணி '
எனப் பெயர் வந்ததாக ஒரு தகவல்.

அவர் பாடல்கள் எல்லாம் 
ஒரே அழும் 
பாவனை தான் !
ஒப்பாரி போலிருக்கும்.

அது 'அழும் கணி '
ஆகி 
' அழுகணி '
 என மருவி இருக்கலாம்.

அதனால் 
அழுகணி சித்தர் 
என்று ஆகியிருக்கலாம்.

அழு கண்ணி 
என்பது 
ஓர் அற்புத 
கற்ப மூலிகை.

இம்மூலிகை மூலம் காயசித்தி பெற்றதால் மூலிகையின் பெயரே அவருக்கு வந்ததாக சொல்கிறார்கள்.

அவரது பாடல்களுக்கு ஒரு சிறப்பு உண்டு.

அழகிய 
கண்ணிச் சிந்துக்களால் 
ஆனவை அவை.

சுவை கொண்ட அப்பாடல் தன்மையால் 'அழகிய கண்ணீர் சித்தர் '
ஆனார் என்பர் 
ஒரு சிலர்.

அழகிய கண்ணிச் சித்தரே
பின்னாளில் 
அழுகணி ஆகியிருக்கும் என்பது அவர்கள் வாதம்.

எக்காலத்திலும் மாறாத அழகை அணிந்து கொண்டிருந்ததால் அழகுகணிச் சித்தர் என்ற பெயர் பெற்று அது 
அழுகணி சித்தர் 
என்று மருவியதாக ஒரு குறிப்பும் உண்டு.

பெயரைப் பற்றி இத்தனை தகவல்கள் இருப்பினும் 
அவரைப் பற்றிய தகவல்கள் பெரிதாக ஏதுமில்லை.

ஞான சூத்திரம் அழுகண் யோகம் அழுகண் சத்தியம் அழுகண் சித்தர் பாடல் ஆகிய நூல்கள் 
அவர் அருளியன.

எளிமையான பாடல்கள் எனினும் சிலருக்கே 
உள்ளர்த்தம் புரியும்.

பாடலின் 
கண்ணிச் சிந்து எவரையும் ஈர்க்கும்.
கைத் தாளம் 
போட வைக்கும்.

சிறிதேனும் 
பொருள் உணர்த்தும். கருத்தினில் பதியும்.

பற்பல சித்தர்கள் 
பற்றி 
உலகுக்குத் தெரிவது போகர் அகத்தியர் கருணையால் தான்.

அவர்கள்தாம் 
பிற சித்தர்கள் வாழ்க்கை 
தத்துவம் 
நூல்கள் 
பற்றி நிரம்ப பாடியுள்ளார்கள்.

அவ்விருவரும் கூட அழுகண்ணாரைப் பற்றி பெரிதாக எக்குறிப்பும் தரவில்லை.

கருவூரார் மட்டும் கருவூரார் வாதகாவியம் அழுகின்ற 
கண்ணினராய் இருந்ததாகச் சொல்கிறார்.

அழுகண் சித்தருக்கு இரண்டு மனைவிமார்கள் 
96 பிள்ளைகள் என்கிறார் 
கோரக்கர் பெருமான்.

தமிழ் சித்தரான அழுகண்ணரின் திருப்பாடல்களும் திருப்பாதங்களும் தமிழ்நாட்டின்
 பல ஊர்களில் பதிந்துள்ளன என்கிறது ஒரு செய்தி.

கால் போன போக்கில் கண் போன திசையில் பயணித்த
அழுகண் சித்தர் மருத்துவராய் திகழ்ந்தார்.

காயசித்தி முறைகளுக்கு 
அவரது படைப்புகள் ஆதாரமாய் இருக்கின்றன.
தவ ஆற்றலை ,
நெடிது வாழ்தலை விரிந்து உரைக்கின்றன.
எதார்த்த சொற்களில் தமிழ் சிந்து.

 கூடவே அழுகின்ற ஓசை இரங்கற்பா போல ஒப்பாரித்தொனி.

ஆயினும் 
உள்ளர்த்தம் ஏராளம் .
கேட்பது சுகம் சுகம்.

கேளுங்கள்.... அழுகண்ணரின் 
ஒரு பாடல்..

"புல்லரிடத்தில் போய் பொருள் தனக்கு கையேந்தி 
பல்லை மிகக் காட்டி 
பரக்க விழிக்கின்றேன்.

பல்லை மிகக் காட்டாமல் 
பரக்க விழிக்காமல் புல்லரிடம் போகாமல்

என் கண்ணம்மா பொருளெனக்குத் தாராயோ ! "

பாடலும் சந்தமும் ஒருபுறமிருக்க...

அவர் 
இப்பாடலில் 
வேண்டும் பொருள் என்ன தெரிகிறதா ?

பசியற்ற நிலையும் காற்றை உணவாகக் கொண்ட நிலையும்.

 இதுவே உட்பொருள்.
இதுவே சித்தர் இலக்கியம்.

இன்னொரு பாடல்.. உள்ளம் திறக்கும் உன்னத பாடல்.

"ஊற்றைச் சடலமடி உப்பிருக்கும் பாண்டமடி 
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை.

மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டே 
என் கண்ணம்மா
உன் பாதம் சேரேனோ !"

இப்பாடலில் 
அழுகண் சித்தர் வைத்துள்ள மறைபொருள்
எளிதில் புரியாத ஒன்று.

மாற்று மருந்து என்பது அருள் உணர்வை குறிக்கும்.

இது குரு வழிகாட்டும் 
மெய் உணர்வால் கிட்டுவது.

அம் மாற்று மருந்தை பெற்று
 நரை திரை மூப்பு இல்லாத 
வெட்டவெளி உணர்வோடு மரணமிலா பெருவாழ்வு பெற இறையடி 
சேர வேண்டும்
என்று 
நம் சித்தர் 
பாடுகிறார்.

படிக்கும்போதே
ஓர் அவலச் சுவை  அகத்தை நிரப்பும்.

அதுதான் அழுகண்ணரின் தனிச்சிறப்பு.

நாகப்பட்டினத்தில் காயா ரோகண 
சுவாமி கோயிலில் அழுகண் சித்தருக்கு சன்னதி உள்ளது.

இதுவே 
அழுகண் சித்தர் லயமான இடம்.

இக்கோயிலில் உரையும் இறையனார் இராமதேவரால் பிரதிஷ்டை கொண்டார்.

அழுகண்ணர் 
லயமான சன்னதி செல்வோர் 
அழுகை இல்லாத வாழ்க்கையைப் பெறுவது உண்மை.

'கண்ணம்மா '
என்று 
பாரதிக்கும் 
தமிழுக்கும் வழிகாட்டியவர் அழுகண்ணரே !
 



Leave a Comment