கஞ்சனைக் கவிஞனாக்கிய பாண்டுரங்கன் 


- "மாரி மைந்தன்" சிவராமன்

சீனிவாசன்.

அந்த ஊரில் மிகப் பெரிய செல்வந்தர்.
சாதாரண செல்வந்தர் அல்ல. இன்றைய மதிப்பில் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதி.
செல்வச் சீமான் தான். ஆனால்  மகா கஞ்சன் கஞ்சத்தனமே' தனம்' என்று வாழ்ந்தவர்.

ஒரு நாள் 
ஒரு வயதான அந்தணர் அவர் கடைக்கு வந்தார்.  
கை பிடித்த படி ஏழு வயது பாலகன்.

சீனிவாசனுக்கு இந்த மாதிரி ஆட்களை அறவே பிடிக்காது.கேவலமாய் பார்ப்பார். படு கேவலமாய் சாடுவார்.

வந்த பிராமணர், "ஐயா... தர்மபிரபு...." என்று வறுமையை விஞ்சிய 
பசிக் குரலில் பவ்யமாக கை கூப்பினார்.

சீனிவாசன் கடைக்கு உள்ளே யாரையோ அழைக்கிறார் போலிருக்கிறது என கம்மென்று இருந்தார்.
வந்தவர் மீண்டும் அழைத்தார் "ஐயா....தர்ம பிரபுவே...சுவாமி..."

"டேய் யாருடா நீ..." அதட்டினார் சீனிவாசன்.

"ஐயா... நான் ஒரு ஏழை பிராமணன். இவன் என் ஒரே மகன். வயதாகிறது.... இவனுக்கு உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் கொஞ்சம் கருணை காட்டினால் பூணூல் போட்டு விடலாம்.."

"ஏதடா .....காலங்காத்தாலே தொந்தரவு.....  என்ன எழவு ...போ.…போ என்னிடம் பணம் இல்லை" பஞ்சப் பாட்டு பாடினார் சீனிவாசன்.

எவ்வளவோ கெஞ்சினார் வந்த அந்தணர்.
கல்நெஞ்சம் கரையவில்லை.

" போ போ....
பிச்சை எடு ....காசு தேறும்.." பிழைப்புக்கு வழி சொன்னார் செல்வ பிரபு.

மெல்ல நகர்ந்து  மீண்டும் சீனிவாசனின் முகம் பார்த்தார்.

அவர் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார். அவர் கண்களும் கைகளும் முகமும் ஏழை பிராமணரை வேகமாக அனிச்சையாக விரட்டின.

அன்று முதல்  தினமும் வருவார்.
உதவி கேட்பார்.பணக்காரர் பலமாக விரட்டுவார். பணிவோடு போய்விடுவார் ஏழை பிராமணர்.

ஒருநாள் கடை வாசலுக்கு வந்தவர் "வேறு வழியில்லை. யாசகம் வாங்காமல் நகர மாட்டேன்" என பிடிவாதம் பிடித்தார் .

"தினமும் இது ஒரு ரோதனையாப் போச்சு" என தலையில் அடித்துக்கொண்ட சீனிவாசன் 
கல்லாப் பெட்டியை திறந்து துழாவித் துழாவி ஒரு காசு எடுத்து பிராமணர் மீது வீசி எறிந்து "ஓடிப் போ... ஒழிந்து போ" என சாபமிட்டார்.

பிராமணர் முகத்தில் ஏக சந்தோஷம் . காளை மாட்டிடம் பால் கறந்த சந்தோஷத்துடன் காசை பிடித்து ஏழ்மை பூத்த கண்கள் அருகே கொண்டு சென்றார்.

அது ஒரு செல்லாத காசு.

" ஐயா... இது செல்லாது எதற்கும் உதவாது ...நல்ல காசு கொடுங்கள்.. புண்ணியமாய் போகும்"

சீனிவாசனிடமிருந்து கோபச் சொற்களே வேகமாய் வந்தன.
"ஏதேனும் பொருள் கொண்டா.... நான் அதுக்கு வேண்டுமானால் பணம் தர்றேன் ....போய்யா ..போ"

முதியவருக்கு கோபம் வரவில்லை .
வீம்புடன் வீட்டிற்கு விரைந்தார்.

அவர் வீட்டிற்கு அல்ல. சீனிவாசனின் சிங்கார வீட்டிற்கு.

சீனிவாசனின் மனைவி சரஸ்வதி நல்லவள்.உத்தமி. அதீத தெய்வ பக்தி கொண்டவள். உதவும் மனம் கொண்டவள்.

அந்த அழகிய நல்லாள் ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.

 பிச்சை கேட்டு ஒரு வயதான ஏழை அந்தணர் கைப்பிடியில் களங்கமற்ற ஒரு சின்னஞ்சிறுவனோடு வாசற் கதவருகே நிற்பதைக் கண்டு வாசலுக்கு ஓடி வந்தாள்.

பிராமணர் தன்  நிலையை சொன்னார்.மகனைக் காட்டி பூணூல் கல்யாணத்திற்கு உதவி கேட்டார்.

"ஐயா... என் நிலைமை உங்களுக்குத் தெரியாது.

என் கணவர் எனக்கு கணக்குப் பார்த்து எண்ணியெண்ணி கணக்காய் காசு தருவார். என்னிடம் பணமும் இல்லை. அவர் பொருளை எடுத்து தர உரிமையும் இல்லை.

அவருக்குத் தெரிந்தால் அவ்வளவு தான். உங்களோடு நானும் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிடும்" கண்களிலிருந்து கண்ணீர் உருண்டது.

"கவலைப்படாதே தாயே...! அவர் உடமைகளைத் தந்தால் தானே பிரச்சனை.!

உன் நகைகள் ஏதேனும் தா.
அது அவருடைய சொத்து அல்ல.

 உன் தாய் வீட்டுச் சீதனம். உன் மகிழ்ச்சிக்காக விருப்ப செலவுகளுக்காக கொடுக்கப்பட்டவை.

அவரிடம் அனுமதி தேவையில்லை தாயே !
 உன் குலம் விளங்கும். உன் கணவருக்கும் புண்ணியம் கிட்டும். 

ஒரு கஞ்சனிடம் உதவி கேட்டு  அவமானப்பட்டே  இங்கே வந்திருக்கிறேன்".
கருணை மிக்க சரஸ்வதியின் கைகள் மூக்கின் அருகே சென்றன.

சில நொடிகளில் அவள் வைரமூக்குத்தி பிராமணரின் கைகளில் அமர்ந்தது.
"தீர்க்காயுசா இருமா...
உன் மணாளனுக்கும் நலம் கிடைக்கட்டும். அவர் ஓங்கு புகழ் பெறட்டும்" விடைபெற்றார் அந்தணர்.

அவர் பிரச்சனை அத்தோடு முடிந்தது.

ஆனால் வைர மூக்குத்தி வழங்கிய வள்ளல் பிராட்டிக்குத் தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

காரணம் மூக்குத்தியைத் தானம் பெற்ற தள்ளாத வயது பிராமணர் 
நேரே சீனிவாசன் கடைக்குச் சென்று மூக்குத்தியை கொடுத்து அதை வைத்துக்கொண்டு பணம் தாருங்கள் என கம்பீரமாக கௌரவமாக கேட்டார்.

மூக்குத்தியை வாங்கி நோட்டமிட்ட சீனிவாசனுக்கு இதை எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற ஐயம் வந்தது.

" இப்ப பணம் இல்லை ....மாலை வா.... பணம் வந்துவிடும் ...தரேன்"
என சொல்லி விட்டு, அவரின் பதில் பெறாமலேயே பெட்டியில் போட்டு பூட்டி கொண்டார்.

" மாலை கண்டிப்பாக 
பணம் வேண்டும். 
பணம் கிடைத்தால் தான் பையனின் பூணூல் கல்யாணம் நடத்த முடியும். ஆயிரம் வேலை இருக்கு. மறந்துவிடாதே" என்றபடியே நடையைக் கட்டினார் பிராமணர்.

அவரின் தலை மறைந்தவுடன் 
அவசர அவசரமாய் வீடு விரைந்தார் சீனிவாசன்.

அவரின் சந்தேகத்திற்கு வீட்டில் விடை இருந்தது.

மனைவியின் மூக்கு மூளியாக இருந்தது.
"எங்கே உன் மூக்குத்தி ? " வெடித்தார்.
"வெள்ளிக்கிழமை அதுவுமா... போ...போ மூளியா நிற்காதே..." விரட்டினார்.

"குளிக்கும்போது கழற்றி வைத்தேன்" பயந்தபடி சொல்லிவிட்டு துளசிமாடம் விரைந்தாள் சரஸ்வதி.

'இனி அவ்வளவுதான்... தொலைந்தேன்..... அவர் தொலைப்பதற்கு முன்பே.... நாமே தொலைந்து விடுவோம்' என ஒரு பாத்திரத்தைக் கையில் ஏந்தியபடி துளசி மாடத்தை வலம் வந்தாள்.

அந்த பாத்திரத்தில் நொடிப்பொழுதில் உயிரை எடுக்கும் விஷம்.
'இறைவா என்னைக் காப்பாத்து.. .. இல்லையேல் உயிரை எடுத்துக்கொள்'
என்று முணுமுணுத்தபடி மூன்றாவது சுற்று வரும்போது 
பாத்திரத்தில் ஏதோ விழும் 
மெல்லிய சப்தம்.

கண்விழித்து கைவிட்டு விஷத்தை துழாவிய போது கையில் பட்டது
 ஒரு சிறு பொருள். 

அது அவள்  தந்த அதே வைர மூக்குத்தி.
பிரார்த்தனையின் பலனை பூரணமாக உணர்ந்து கொண்ட திருப்தியில் மூக்குத்தியைக் கண்களில் ஒற்றிக்கொண்டு மூக்கில் மாட்டிக் கொண்டாள் மாதரசி.

"இவ்வளவு நேரமா மூக்குத்தி மாட்ட"
 உள்ளே இருந்து கோபக் குரல் ஒலிக்க..... "வந்துட்டேன்... சுவாமி" வீட்டுக்குள் நுழைந்தாள், அந்த ஆசாமியை சுவாமி என்று அழைத்தபடியே.

அவள் எதார்த்தமாக தான் சுவாமி என்று அழைத்தாள்.
ஆனால் அதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது துளசிமாடம்.

கண்கள் சிவக்க காத்திருந்த கணவர்
அவள் முகத்தை பார்த்தவுடன் 
'மனைவியின் மூக்குத்தி அல்ல' திருப்தி உற்றார்.

ஆனால் அவர் மூளை இன்னொரு சந்தேகத்தை எழுப்பியது.
எதுவும் சொல்லாமலேயே கடைக்கு விரைந்து ஓடினார்.

கடைக்கு வந்த 
கஞ்ச மகாபிரபு 
கல்லாப் பெட்டியை 
அவசர அவசரமாகத் திறந்தார். கண்விரித்து கைவிரித்து துழாவினார். வைத்த இடத்தில் தேடினார்.

கிடைக்கவில்லை.
பதற்றத்தோடு பயமும் குடிகொண்டது. வீட்டிற்கு வந்து விடிய விடிய தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தார். எதுவும் புரியாத சரஸ்வதி துளசி மாடத்தை துதித்தபடியே இரவைக் கழித்தாள்.

மறுநாள் காலை  கடைதிறக்கப் போனார் சீனிவாசன்.
"ஐயா... பிரபுவே"
அய்யரின் குரல் கேட்டு 
பயந்து நடுங்கினார்.

" இன்று பணம் தருவதாக சொன்னீர்கள். ஆயிரம் வேலைகள்.அப்படியே போட்டுவிட்டு வந்தேன். பணம் தாருங்கள் "
"பணம்... பணம் " பிதற்றினார் 
செல்வச் சீமான்.

"ஐயா...  தாமதம் ஆகும் என்றால் பரவாயில்லை.. நகையைத் தாருங்கள்.. வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்"

பதில் இன்றி தவித்தார்
பணக்காரர். 

" மன்னித்து விடுங்கள்.. மாலையில் பணம் வந்துவிடும். கண்டிப்பாகச் சாயந்திரம் தருகிறேன்." வெட்கி தலைகுனிந்து பொய் சொன்னார்.

"சரி...சரி...சாயந்தரம் ஏமாற்றி விடாதே.
ஏதும் சால்ஜாப்பு 
சொல்லி விடாதே."

கிழவர் நகர்ந்தார்.
பெருமூச்சுவிட்ட பெருந்தனக்காரர் அவரிடம் ஏதோ சூட்சுமம் இருப்பதாக உணர்ந்தார்.

கிழவர் நகர்ந்தபோது விஷமமாக புன்னகைத்தபடியே சென்றதை அவர் கவனித்து இருந்ததால் அந்த சூட்சமம் அறியத் துடித்தார்.

உடனே கடைப் பையனை அழைத்து,  "அம்பி ...அந்த கிழவன் பின்னாடியே போ. எங்கு போகிறான் ? என்ன செய்கிறான் ? கவனித்துப் பார்த்து வந்து உடனே சொல்" நிலைகொள்ளாமல் உத்தரவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் பையன் பதைபதைப்புடன் 
ஓடி வந்தான்.

"முதலாளி... அந்த கிழவர்  மூன்று தெருக்கள் தாண்டி கோயிலுக்குச் சென்றார்.
நான் அவர் 
கவனிக்காதபடி பின்னாலேயே போனேன்... ..
போனவர்....!!"
விக்கித்தான். எச்சில் விழுங்கினான். பயந்த மாதிரி கைகூப்பியபடியே திக்கினான்.

"சொல்லுடா.… பயந்தாங்கொள்ளி.... என்ன நடந்தது.? ஏதேனும் மிரட்டினானா அந்த கிழவன்?"
".... கோயிலுக்குப் போன அவர் நேராக கர்ப்பகிரகத்துக்குள் போனார். அப்படியே... மறைந்து போனார்"

அந்த சிறுவனின் கண்களில் கண்ணீரும் ஆனந்தமும் வெளிப்பட பரவசத்தில் இருந்தான்.

சீனிவாசன் திடுக்கிட்டார். 
பயத்தோடு  வீட்டிற்கு விரைந்தார்.

கடையில் நடந்ததை மனைவியிடம் சொன்னார்.
மனைவி சரஸ்வதியும் வீட்டில் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் ஒப்பித்தார்.

சீனிவாசனுக்குப் புரிந்துவிட்டது.
'வந்தது கிழவன் அல்ல.... சோதிக்க வந்தவர் பரம்பொருள் பாண்டுரங்கன்..'என நெகிழ்ந்தார். செய்வதறியாது திக்குமுக்காடினார்.

அப்போது பூஜை அறையில் இருந்து 
ஓர் அசரீரி எழுந்தது.
"சீனிவாசா.…. 
இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு செல்வச் செருக்கோடு இருக்கிறாயே..!.  
தான தர்மம் செய்யாமல் 
வெட்டி வேதாந்தம் 
வறட்டுத் தத்துவம் பேசுகிறாயே ..? 
உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்..!

 இதுவே தருணம்.
 நல்ல தருணம்.
தான தர்மம் செய். உன் செல்வம் அனைத்தையும்  தர்மம் செய்து 
புண்ணியம் தேடு. 
அதுவே பிறவிப்பயன்.
 
நெடுஞ்சாண்கிடையாக சீனிவாசன் பூஜையறையில் பாண்டுரங்கனிடம் 
சரண் அடைந்தார்.

எழுந்த போது அசரீரி  தொடர்ந்தது ,
"இனி நீ சீனிவாசன் இல்லை. 
ஊரும் உலகும் அழைத்த சீனிவாச நாயக் என்ற பெயரைத் துறந்து விடு. 

இந்த ஊரின் பெயரே 
உன் திருநாமம்.... 
'புரந்தர கட.'

ஆமாம் பக்தனே...
இனி நீ புரந்தரதாசன்.

நீ நாரதரின் அம்சம்.
குரு வியாசராஜரை தஞ்சமடை. அவர் உபதேசம் தருவார்.
கிளம்பு. தான தர்மம் செய்துவிட்டு 
வியாசராஜரை சரணடை." அசரீரி விடைபெற்றது.

புரந்தரதாசருக்கு 
புதிய உலகம் தெரிந்தது. அது பிரபஞ்சமாய் விரிந்தது.
அத்தனை சொத்துக்களையும் 
தானம் செய்தார். 
பரம ஏழையானர்.

ஏழை அந்தணராக வந்து ஞானக் கண் திறந்த பாண்டுரங்களைப்
பாடித் தொழுதபடி இல்லாளுடன் 
ஹம்பி சென்று 
குரு வியாசராஜர்
பாதம் தொட்டார்.

செல்வம் தராத 
ஏகாந்த அனுபவங்கள்
அவரை வலம் வந்தன.

புரந்தரதாசர் 
பக்திப் பெருக்கோடு 
பாரத தேசத்தை
மூன்று முறை கால்நடையாக வலம் வந்தார்..

அவர் பாடியதெல்லாம் இறை பாடல்கள் ஆயின.  தெய்வம் மகிழும் தேவகானங்கள் ஆயின.

அவரின் பாடல்களே திருவையாறு சத்குரு 
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அவரது அன்னை கற்றுத் தந்த பாலபாடம்.

சரிகமபதநி எனும்
ஏழு ஸ்வரங்களை
சங்கீத உலகிற்கு 
தந்தவர் புரந்தரதாசர்.

சுமார் 4 லட்சம் 
பக்தி பாடல்கள்
அவர் அளித்த பொக்கிஷம்.
பக்திக் கருவூலம். 
ஞானப் புதையல்.

அவரது ஒவ்வொரு வார்த்தையும் பாண்டுரங்கனை 
அவனது உள்ளத்தை வருடும் மயிலிறகுகள்.

உங்களுக்குத் தெரியுமா ?
புரந்தரதாசர் 
சினிவாச நாயக்காக இருந்தபோது பாரதத்தின் செல்வ குடிமகன்.

அவரது சொத்து அன்றைய மதிப்பு 9 கோடி. இன்றைய மதிப்பில் பல லட்சம் கோடி.
காலம் கிபி 1480 

80 ஆண்டுகள் கழித்து புரந்தரதாசராக  புதுப்பிறவி எடுத்த போது அதாவது கிபி 1560 இல் பாரதத்தின் மிகப் பெரிய ஏழை. செல்லாக்காசு. ஓட்டாண்டி. 

ஆனால் மகான்.

புரந்தரதாசர் இறைவன் புகழ் பாடியபடியே இறையோடு கலந்தது
கிபி 1584 ஆம் ஆண்டு.

அனைத்தும் ஆண்டவனின் விளையாட்டு. பாண்டுரங்கனின் பரமபதம்.
 



Leave a Comment