அகத்தில் சிந்தித்தால் சிரத்தில் சிவம்


- "மாரி மைந்தன்" சிவராமன்

திருமந்திரம் - எளிய உரை -10


யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரத்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

(திருமந்திரம் - திருமூலர் வரலாறு)


விளக்கம்

யான் பெற்ற பேற்றையும் அதனால் கண்ட 
இறவாப் பேரின்பத்தையும் இவ்வுலக மக்கள் அனைவரும் 
பெற வேண்டும்.

அதற்கு -
தன்னையறிந்து தன்னில் 
வானாக நின்ற 
மறைப் பொருளான மெய்ப் பொருளை - முழுமுதற் சிவத்தை உணர வேண்டும்.

அதுவே 
உடம்பைப் பற்றிய உணர்வாய் உள்ள மந்திரமாக உள்ளது.

அதைப் 
பற்றப் பற்ற 
தவம் 
தானே சித்திக்கும்.

அதன் பயனாய் தனக்குத் தானே பேரின்பம் 
தித்திக்கும்.

மறைப் பொருளை அகத்தில் இடைவிடாமல் சிந்தித்தால் 
சிரசில் 
அதிர்வு மிகுந்த உணர்வு உண்டாகும்.

அவ்வுணர்வு தான் சிவம் 
தனது வருகையையும் இருப்பையும் உணர்த்தக்கூடியது.

திருமூலர் 
இம்மந்திரத்தில் மறைபொருளாய் உணர்த்துவது யாதெனில்....

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது
என்பதை 
அறிவால் உணர்ந்து

அண்டத்தில் 
ஐம்பெரும்
பூதங்கள் ஆகவும்
பிண்டமாகிய அகத்தில்
'நமசிவாய 'எனும் ஐந்தெழுத்து மந்திரமாகவும்
இருப்பதையும் நன்குணர்ந்து

அம்மந்திரத்தை
இடைவிடாது 
அகத்தில் சிந்தித்தால் சிரத்தில் எழும் அதிர்வு சிவத்தின் இருப்பை உணர்த்தும்.



Leave a Comment