உலகின் மிகப்பெரிய ஆலயம் - 3


அங்கோர் வாட் ஆலயத்தை மேலிருந்து பருந்துப் பார்வையில் பார்த்ததை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு நினைவிலிருந்து அகற்ற முடியாது. அதன் பரப்பளவும் கம்பீரமும் எண்ணிப் பார்க்கப் பார்க்க பிரமிப்பை ஏற்படுத்தியது. மனிதனால் என்னென்ன சாதிக்க முடியும் என்பதற்கு, இதுபோன்ற கட்டடங்கள் மௌன சாட்சியாக நிற்கின்றன. எகிப்தியப் பிரமிடுகள், கம்போடியாவின் கெமர் பேரரசு காலத்தில் எழுந்த பேராலயங்கள், பிரம்பனான் கோயில் வளாகம், போராபுதூர் பௌத்த ஆலயம், தஞ்சைப் பெரிய கோயில், வட இந்தியக் கோட்டை, கொத்தளங்கள் இவற்றையெல்லாம் உருவாக்க, எவ்வளவு மனித உழைப்பும் திட்டமிடலும் தேவை? யாரோ ஒரு தனிமனிதர் முதலில் தன் மனக் கண்ணில் கண்டு அதை உருவாக்கிவிட்ட பின்னர்தானே அவை தூல வடிவம் பெறுகின்றன? என்னதான் மன்னரின் ஆணைக்கிணங்க அவை கட்டப்பட்டாலும் வெறும் கட்டளைக்கு அடிபணிந்தா இப்படிப்பட்ட அதிசயங்கள் மண்ணில் எழ முடியும்? இதுபற்றிப் பேச்சு எழும்போதெல்லாம், “இப்ப மாதிரி அப்ப பொழுதுபோக்கு வசதியெல்லாம் இல்லை. சோறு போட்டாப் போதும், சனங்க மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சிருப்பாங்க!” என்ற வாதம் முன்வைக்கப்படும். ஆனால், சோற்றுக்காகச் செய்யப்பட்ட பணியில் இவ்வளவு திருத்தம் இருக்க முடியுமா என்ன? அங்கோர் வாட் ஆலயத்தை உருவாக்க 30 ஆண்டுகள் பிடித்ததாக இணையத்தில் படித்தேன். ஒரு தலைமுறைக் காலம்... எவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டும் இவ்வளவு பெரிய ஆலயத்தைத் திட்டமிட்டபடி கட்டி முடிக்க? எத்தனை இடையூறுகள் வந்திருக்கும் இடையிடையே? கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் கடந்த பின்னரும் நம் முன்னே பழமைப் பாசிப் பிசுக்குடன் ஒளிவிடும் அங்கோர் வாட் மானுட சாதனையின் உச்சங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தப் பயணத்திற்காகப் படித்த கட்டுரைகளும், பார்த்த ஆவணப் படங்களும் அங்கோர் மீதான ஆச்சர்யத்தை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. சென்று வந்த ஓராண்டு கழித்து இந்த அத்தியாயத்தை எழுதுகிறேன். இந்த ஓராண்டிலும் அவ்வப்போது கம்போடியா பற்றிப் படித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். எப்பேர்ப்பட்ட இடத்துக்கு நாம் சென்று வந்திருக்கிறோம் என்ற உணர்வு எங்கள் எல்லாருக்குமே எழுந்த வண்ணம் உள்ளது. நாங்கள் சந்திக்கும்போதெல்லாம், கம்போடியா எங்களுக்குள் வந்துவிடுகிறது. “ஆசை தீரத் தின்னவனும் கிடையாது, அலுப்புத் தீரக் குளிச்சவனும் கிடையாது” என்று ஒரு சொலவடை உண்டு. அந்தக் கதைதான் அங்கோர் வாட்டும். ஒவ்வொரு முறை அதைப் பற்றிப் படிக்கும்போதும் ஒழுங்காப் பார்த்தோமா நம்ம அதை? தப்புப் பண்ணிட்டோமோ? ஒரு வாரம் ஒதுக்கி இருக்கணுமோ? இன்னொரு தடவை போக வாய்ப்பு கிடைக்குமா? இப்படி சிந்தனை ஓடுகிறது. இன்னும் இளமையாக இருந்திருக்கும்போதே கம்போடியா போயிருக்க வேண்டும். இப்போது மனம் செல்லும் வேகத்தில் செல்ல உடம்பு ஒப்புவதில்லை. சரி, பரவாயில்லை. எத்தனை பேருக்கு இதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறது என்று நினைத்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.

வாசல் நிலைப்படியில் ஒருவர் நிற்பதைப் பார்த்த பிறகுதான் யாரோ ஒருவருக்குப் படங்களுக்குச் சட்டமிடும் யோசனை வந்திருக்க வேண்டுமென வண்ணதாசன் எழுதுவார். அதுபோல, அங்கோர் வாட் ஆலயத்தை வானத்திலிருந்து பார்க்கும்போது, அகழிக்குள் கட்டப்பட்டதால் அதன் அழகு மேலும் பொலிவு பெறுவதுபோல் எனக்குத் தோன்றியது. நீரால் செய்யப்பட்ட சட்டம். காலை, மாலை வெயிலுக்கேற்ப அவ்வப்போது நிறம் மாறும் வண்ணச் சட்டம். அங்கோர் வாட்டின் முழுமையான கம்பீரத்தையும் அழகையும் பருந்துப் பார்வையில்தான் நன்கு அனுபவிக்க முடியும். வேறெந்தக் கோணத்தில் பார்த்தாலும் அதை முழுமையாகப் பார்ப்பது அசாத்தியம். ஆலயத்தின் நடுவிலுள்ள மகாமேருவும் அதைச் சுற்றியுள்ள நான்கு முகடுகளும் மட்டுமே ஓரளவு கண்ணுக்குள் நிறையும். அந்தக் காட்சியைத்தான் கம்போடிய தேசியக் கொடியில் பொறித்து வைத்திருக்கிறார்கள். மற்றபடி ஆலயத்தை ஓரிடத்திலிருந்து முழுமையாகப் பார்த்துவிட முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒரு விதமாகவும், அருகே செல்லச் செல்ல வேறுவிதமாகவும் தோற்றமளிக்கின்றன ஆலய முகடுகள்.

காலம் அதன் சுவர்களை அரித்து விட்டாலும், கம்பீரம் குலையவில்லை. தென் கிழக்காசிய நாடுகளுக்கே உரித்தான பசுமைக் காடுகள். அவற்றின் நடுவே பதித்து வைக்கப்பட்ட கல் நகைகள் போலிருக்கின்றன அங்கோர் ஆலயப் பகுதிகள். பேலூர், ஹளபேடு சிற்பங்களைப் பற்றி எழுதும்போது ஜெயமோகன் இப்படித்தான் கல்லில் செய்த நகைகள் என்பார். அழகான உவமை! கம்போடியர்கள் கல் கட்டுமானத்திலும் சிற்பத் திறனிலும் மட்டுமல்ல நீர் மேலாண்மையிலும் மிகச் சிறந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் அகப்பட்டுக் கொண்டே வருகின்றன. அங்கோர் வாட்டைச் சுற்றி இருக்கும் அகழி அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஆலயம் மேற்குப் பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. மேற்கிலும் கிழக்கிலும் இரண்டு வழிகள் உட்செல்லவும் வெளிவரவும். மேற்கில் உள்ளே நுழையும் இடத்தில் இடப்பக்கத்திலிருந்து அகழியோடு சென்று ஆலயத்தைச் சுற்றித் திரும்ப நாம் நிற்கும் இடத்திற்கு வந்தால், நான்கு திசைகளையும் சுற்றிவரும் மொத்தத் தொலைவு சுமார் 5.5 கிலோ மீட்டராம். அகழியின் அகலம் சுமார் 200 மீட்டர். கற்பனைக்கும் எட்டாத துணிவு. அகழியின் ஆழம் 10 அடிக்கு மேலிருக்கும். எப்போதும் அதில் தண்ணீர் இருக்கும்வகையில் நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அகழியில் இருந்து வெட்டி எடுத்த மண்ணைத்தான் மகாமேருவுக்குக் கீழே கொட்டி உயர்த்தியிருக்கிறார்கள் சிற்பிகள் என்கின்றன ஆவணப் படங்கள். இன்றுவரை அகழியில் தண்ணீர் குறைந்ததில்லை.

உலக மரபுடைமைத் தலமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், இப்போது அகழியும் ஆலயமும் சீராகப் பராமரிக்கப்படுகின்றன. சரி, அங்கோர் வாட் கைவிடப்பட்ட காலத்தில் அகழியை யார் பராமரித்தார்கள்? எப்படி அது தூர்வாரப்பட்டிருக்கும்? தூர்வாராமற் போயிருந்தால் நாளாவட்டத்தில் அகழி தூர்ந்து போயிருக்காதா? அல்லது ஆறுகளைப் போல் தண்ணீரின் இயல்பான ஓட்டத்திலேயே வண்டல்மண் சேராமல் அடித்துச் செல்லப்படுமா? நான் பார்த்தவரை அகழித் தண்ணீர் தேங்கித்தான் நிற்கிறது, ஓடவில்லை. மேற்கு நுழைவாயிலிலும் சரி, கிழக்குப்புற வெளிவாயிலிலும் சரி, கீழே பாலம் போல் அகழி இணைக்கப்படவில்லை. இரண்டு ப வடிவங்களை ஒட்ட வைத்தாற்போல் பிரிந்துதான் இருக்கின்றன. அல்லது கண்ணுக்குத் தெரியாமல் கீழே நீரோட்டத்திற்காக இணைப்புப் பாலங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை. எங்கோ உள்ள நதியை ஆலயத்தின் பக்கம் திசைதிருப்பி அதிலிருந்து வற்றாத நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்த பொறியியல் திறனை எவ்வளவு மெச்சினாலும் தகும்.

ஆலயத்தின் அஸ்திவாரம் உறுதியாக இருப்பதற்கு, அகழியில் நீர் நிறைந்திருப்பது அவசியம் என்று ஓர் ஆய்வாளர் கூறுவதை யூ டியூபில் பார்த்தேன். அதுபற்றிப் படிக்க வேண்டும். மிக எளிமையான கருவிகளை வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய சாதனையைக் கம்போடியர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வளவும் ஓடியது மனத்திற்குள் ஹெலிகாப்டர் பயணத்தின்போது. எங்கள் மூவருக்கும் மூச்சு அடைத்துவிட்டது போலிருந்தது மேலிருந்து பார்க்கும்போது. ஒவ்வொருவரும் அவரவருக்குள் ஆழ்ந்து போனோம். கீழே இறங்கியதும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டபோது அதன் அர்த்தத்தை மனத்தால் விளங்கிக் கொள்ள முடிந்தது. எங்களையடுத்து ஹெலிகாப்டரில் பயணம் செல்லக் காத்திருந்த மகாதேவனும் நவீனும் எப்படி இருந்துச்சு ? எப்படி இருந்துச்சு ? என்று கேட்டபோது வாங்க பார்க்கலாம் என்றார் ராஜூ. வேறு ஒன்றும் சொல்லவில்லை. ஓரிரு வரியில் கண்டதைச் சொல்லிவிட முடியுமென அவருக்குத் தோன்றவில்லை போலும்.

சென்ற பயணத்திற்கு எதிர்த்திசையில் அமர்ந்து ராஜூ இரண்டாவது பயணம் சென்று வந்தார். ஹெலிகாப்டர் பயணத்தின் நினைவாகச் சடசடவெனப் படங்கள் கிளிக்கிக் கொண்டோம். இறங்கி வந்து காத்திருந்த ஓட்டுநர் ரா-வுடன் அடுத்த பயணம் தொடங்கியது. இன்றைய நிகழ்ச்சி நிரலில், மலைமேல் இருக்கும் புத்தர் கோயில், ஆயிரம் லிங்க ஆறு, அருவிக் குளியல், நதியில் படகுப் பயணம் போய் தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய நன்னீர் ஏரியைப் பார்ப்பது, அப்சரஸ் நடனமணிகளின் ஆடலைக் கண்டு ரசிப்பது எனத் திட்டம் வகுத்திருந்தார் ரா. வேனில் ஏறிக் கொஞ்ச தூரம் போனவுடன் மலையேறத் தொடங்கியது வண்டி. உயரமாகப் போகப் போகக் காற்றில் குளிர் கூடிவந்தது. போகிற வழியில் ஆங்காங்கே கம்போடியக் கிராமங்கள். அறியாமை என்னும் அழகு பொதித்த கிராமிய முகங்கள். ஓரிடத்தில் நிறுத்தி இளநீர் குடித்தோம். ஒரு பெரிய குடும்பம். கடை வைத்து அதில் வரும் வருமானத்தை வைத்துக் குடும்ப வண்டி ஓடுகிறது போலும். அக்கடா என்று இருக்கிறார்கள்.

அங்கோர் வாட் ஆலயத்தைப் பார்க்கவரும் அளவுக்கு இங்கே ஆயிரம் லிங்க ஆற்றைப் பார்க்க யாரும் வருவதில்லை. கூட்டம் இல்லாததால் மலையும் சுத்தமாக இருக்கிறது. அதிக நேரமாகவில்லை. புத்தர் கோயிலை அடைந்து விட்டோம். வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை விட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம். கம்போடியக் கைவினைப் பொருட்களும் தின்பண்டங்களும் விற்கும் கடைகளிருந்தன. மேலே என்ன இருக்கும்? அது எவ்வளவு பழமையானது என்ற தகவல் எதுவும் தெரியாது. ஓட்டுநரை நம்பி இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம்.

பார்ப்போம்.. மேலே என்ன இருக்கிறது என்று.. - தொடரும்....

- பொன். மகாலிங்கம், சிங்கப்பூர்
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com



Leave a Comment