தைப்பூச திருவிழா... பழனி முருகப்பெருமான் திருக்கல்யாணம்...


பழனி தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துகுமாரசுவாமி  ,வள்ளி ,தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.  

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த ஜன.19 ல் திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.  10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார். வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  

பொற்சுண்ணம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகமும், தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. தொடர்ந்து தம்பதி சமேதர் முத்துக்குமாரசாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் ஏற்றம் செய்யப்பட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு இரத வீதிகளிலும் ஆடி அசைந்து உலா வந்தது.

நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்து அரோகரா கோஷம் எழுப்பினர். நாளை மாலை தேரடியில் 4.30 மணிக்கு தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வரும் ஜன.28 அன்று தெப்பத்தேர் உலா மற்றும் திருக்கொடி இறக்கம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Leave a Comment