மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்


விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5 மணியளவில் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து 6.30 மணியளவில் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தங்கக்கவசம் அணிவிக்கப் பட்டது. பின்னர் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது.

அதன் பிறகு தங்கக்கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள் மற்றும் வெள்ளிக்கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் மேள, தாளம் முழங்க முருகன் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதனை தொடர்ந்து சரியாக 7.45 மணியளவில் மயில் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்ட ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் ஏற்றி வைத்து பங்குனி உத்திர விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு 24 வகையான தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment