ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 1-ஆம் தேதி கொடியேற்றதுத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 9-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ஸ்ரீவடபத்ரசாயி என்கிற திருநாமத்துடன் பெருமாள் எழுந்தருளியுள்ள திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இத்தலத்தில் ஸ்ரீபெரியாழ்வாரின் திருமகளாய் ஸ்ரீஆண்டாள் அவதரித்தார். திருப்பாவை என்னும் பாமாலையும், பூமாலையும் சூடிக் கொடுத்தார். ஸ்ரீஆண்டாளின் பக்தியைக் கண்ட திருவரங்கத்து எம்பெருமான் இத்தலத்திற்கு எழுந்தருளி பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீஆண்டாளை திருமணம் செய்தருளினார்.
இதையொட்டி, நிகழாண்டில் ஸ்ரீஆண்டாளின் திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 7.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 9-ஆம் திருநாளான ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. உற்சவ நாள்களில் சுவாமிகள் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்று பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளுவர்.



Leave a Comment