ஔவையார் ஒரு சித்தரா?


ஆத்திச்சூடி தெரியும்,  அதைப் பாடிய ஔவைப் பாட்டியையும் தெரியும். ஆனால் அவர் ஒரு சித்தர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நமது தமிழ் மூதாட்டி ஔவை ஒரு பெண் சித்தர்தான் என்கிறார்கள், சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்  அன்பர்கள். அதற்கு அவரின் பாடல்களையே ஆதாரமாக காட்டுகிறார்கள் அவர்கள். ஔவையார் பெண் சித்தர் என்பதற்கு அவரது ஔவைக் குறள், வினாயகர் அகவல் போன்றவைகளே சாட்சி என்கிறார்கள்.

நரம்பெனும் நாடி யிடைமினுக் கெல்லாம்

உரம்பெறும் நாடியொன் றுண்டு

உந்தி முதலாகி ஓங்காரத் துட்பொருளாய்

நின்றது நாடி நிலை

உந்தியு னுள்ளே ஒருங்கச் சுடர்பாய்ச்சில்

அந்தி யழலுருவ மாம்

நாபி யகத்தே நலனுற நோக்கிடில்

சாவது மில்லை யுடம்பு

ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்

ஓவிய மாகு முடம்பு

மயிர்க்கால் வழியெல்லாம் மாய்கின்ற வாயு

உயிர்ப்பின்றி யுள்ளே பதி

வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை

ஈசன்றன் வாசலி லேற்று.

                               - ஔவையார்

 

இந்த பாடலில் நாடிகளைப் பற்றி நுணுக்கமாகவும், விரிவாகவும் பேசியிருக்கிறார் ஔவைப் பாட்டி.

உடலிலுள்ள 72000 நாடிகளில் முதன்மையான நாடிகள் பத்து. இவற்றுள் முதன்மையான நாடியானது, உந்தி வழியாக சிரசு வரை கீழும் மேலுமாகப் பதிந்திருக்கிறது. நாடிகளின் இயக்கங்களைத் தெரிந்து கொண்டு, அதன் வழியாக செறிவாகி, ஒடுங்கி, நீடுகின்ற ஒளியைக் காண்பதே அறிவின் சிறப்பாகும் என்கிறார் ஔவையார். அவ்வாறு சிவத்தை அறிந்து, உணர்ந்து, அடங்கியிருப்பவர் நாடிகளில் எல்லாம் சிவம் நிறைந்திருக்கும்.

வாயுவின் வழக்கத்தை அறிந்து, செறிந்து, அடக்கினால் ஆயுள் பெருக்கம் உண்டாகும். வெளியே போகின்ற வாயுவை உள்ளே அடக்கப் பழகிக் கொண்டால் தேகம் சிவத்துக்கு ஒப்பாகும். இதில் விசேஷம் என்னவென்றால், வழக்கமான சித்தர் பாடல்களைப் போல மறைபொருளாகச் சொல்லப்படாமல், எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி எளிமையாகவே சொல்லிவிட்டார் ஔவையார்.

மேலும் ஐந்து புலன்களையும் ஒடுக்கி, மெய்யறிவான சிவத்தோடு ஒன்றி இருந்தால் சரீரம் அழியாது என்றும், வாயுவை வசப்படுத்தி, சுவாசத்தை உள்ளடக்கப் பழகியவர்களுக்கு எளிதில் சிவத்தியானம் வாய்க்கும் என்றும் சிவத்தியானம், குண்டலினி யோகம், வாசியோகம் பற்றி ஔவை எளிமையாக விளக்குகிறார்.

அட்டமகா சித்திகளை ஒரு வருடத்தில் அடைந்துவிடலாம் என்பது ஔவையின் கருத்து. ஆனால் சித்த சமாதி நிலைக்கு, சிவானந்த சிவயோக சித்திக்கு பல வருடங்கள் முயன்று உழைக்க வேண்டும் என்கிறார். வினாயகர் அகவலில் குண்டலினி யோகம் பற்றி இதுபோல் பல எளிமையான தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார் அருந்தமிழ் மூதாட்டி ஔவை.



Leave a Comment