“வாழ்க்கை போதித்தது என்ன?” - காஞ்சி மஹாப்பெரியவா


மகாப்பெரியவா என்று மக்களால் பெரிதும் போற்றப்படும் காஞ்சி மகானைப் பற்றிய செய்திகள், சம்பவங்கள் படிக்க படிக்கத் திகட்டாதவை. மகாப்பெரியவா பற்றி  ஏராளமான முத்துக்கள், நவரத்தினங்கள் இணையத்தில் பரவியுள்ளன. அப்படிப்பட்ட நவரத்ன கட்டுரை ஒன்றை சக்திஆன்லைன் வாசகர்களுக்காக சமர்பிக்கின்றோம். முகமறியாத மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றியுடன்.

பாரத கலாச்சாரத்தைப் போற்றி வணங்கிய ஏராளமானவர்களில் குலபதி கே.எம்.முன்ஷி ஒருவர். போற்றியதோடு நில்லாமல் அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அப்படியே தர வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவராய் அவர் இருந்தார். ‘பாரதீய வித்யா பவன்‘ என்ற நிறுவனத்தை நிறுவியதோடு பாரம்பரியச் செல்வ ரகசியத்தை அனைவருக்கும் அள்ளித் தர ‘பவன்ஸ் ஜர்னல்‘ என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். அந்த பவன்ஸ் ஜர்னலுக்கு  காஞ்சி பரமாச்சார்யாள் (ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்) அருளிய ‘வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?‘ என்ற அற்புதமான கட்டுரையை வெளியிடும் பெரும்பேறு  கிடைத்தது. பொதுவாக, பெரும் அருளாளர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதுவும் காஞ்சிப் பெரியவர், லோக க்ஷேமம் எனப்படும் உலக நன்மைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அதைப் பற்றி மட்டுமே பேசுபவர். அவரே மிகுந்த வினயத்துடன் மிக அரிதான ஒரு கட்டுரையை அருளி, அதில் தன் வாழ்க்கையின் அர்த்தத்தை இறுதி வாக்கியத்தில் கூறியிருப்பது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

மரநாயும் பொன்னுச்சாமி எடுத்த தங்க வளையலும்

அவரது மூன்றாம் வயதிலோ அல்லது நான்காம் வயதிலோ நடந்த இரு சம்பவங்களுடன் கட்டுரை ஆரம்பிக்கிறது. மரநாய் ஒன்று, வெல்லம் இருந்த ஜாடியில் தலையை விட்டுக் கொண்டு அதை மீண்டும் எடுக்க முடியாமல் தவித்துக் கூக்குரலிட்டதைக் கேட்டுத் திருடன்தான் வந்து விட்டானோ என்று எண்ணிய அண்டை அயலார் கம்பு தடிகளுடன் வர, நாய் பிடிபட்டது. அதை ஒரு கம்பத்தில் கட்டி ஒருவாறாக ஜாடியைப் பிரித்தனர். பேராசை தந்த பெருங்கேட்டை ஆச்சார்யாள் விளங்கிக் கொண்டாராம்.

அடுத்த சம்பவம் அவரது தங்க வளையலைப் பற்றியது. தனியாக இருந்த குழந்தையைப் பார்த்த திருடன் ஒருவன் தங்க வளையலைக் குறி வைத்து வீட்டின் உள்ளே வர, அவரே அதைக் கழட்டும் விதத்தைச் சொல்லி அதை ரிப்பேர் செய்து எடுத்து வரக் கூறுகிறார். மிக்க மகிழ்ச்சியுடன் பொன்னுசாமி (அப்படித்தான் வந்தவன் தன் பெயரைக் கூறி இருந்தான் – தங்கத்திற்குச் சாமி!) தன் வளையலை ரிப்பேர் செய்து எடுத்து வரப்போகும் செய்தியைத் தன் வீட்டாருக்குக் குழந்தை கூறியது.

அவசரம் அவசரமாக வெளியில் வந்த குழந்தையின் வீட்டாருக்குப் பொன்னுசாமி தென்படவே இல்லை. கவர்ச்சி, திருடு, பேராசை, ஏமாற்றுதல், புலம்பல் ஆகிய அனைத்தையும் இந்த இரு சம்பவங்களும் ஆச்சார்யாளுக்கு விளக்கி விட்டன! ஆனால் வயதாக ஆக, சில ஆத்மாக்கள் பிறருக்காகவே அறநெறியின் அடிப்படையில் வேரூன்றி வாழ்கின்றனர் என்ற பேருண்மையை அவர் உணர்ந்தார்.

பீடம் ஏறிய வரலாறு

அவர் 1907ஆம் ஆண்டு திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கலவை என்ற இடத்தில் அப்போதைய சங்காராச்சார்யார் சித்தி அடைந்து விட்டார். ரிக்வேதம் படித்தவரும் மடத்தில் இருந்தவருமான அவரது தாய் வழி உறவினருள் ஒருவர் அடுத்த சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்டார். தன் அம்மாவுடன் காஞ்சிபுரம் செல்கிறார் பரமாச்சார்யாள். அவருக்கு அப்போது வயது 13. அந்தச் சமயத்தில் அவருக்கு மட்டும் தனியே ஒரு வண்டியில் வருமாறு கூறப்பட்டது. சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் ஜுரத்தின் உச்சக்கட்ட நிலையில் நினைவிழந்து இருப்பதையும், ஆகையால் அவரையே அடுத்த சங்கராச்சாரியராக நியமிக்க உத்தேசம் என்பதையும் அறிந்து கொண்டார் 13 வயதான பரமாச்சார்யாள்!

இப்படியாகத்தான், சிறு வயதில் திடீரென்று நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியால் பீடமேறினார் சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி என்னும் திருநாமம் கொண்ட பரமாச்சார்யாள். அவருக்கு சாஸ்திர பாடமும் பயிற்சிகளும் ஆரம்பமாயின.

இரு நிகழ்ச்சிகள்

1923ஆம் ஆண்டு திருச்சியில் முகாம் இட்டிருந்தபோது 12 வயதுச் சிறுமி ஒருத்தி தன் சகோதரனைப் பொய் சொன்னதற்காகக் கண்டித்ததைப் பார்த்து வியந்தார் ஆச்சார்யாள். அந்தச் சம்பவத்தை அவரால் மறக்கவே முடியவில்லை.

இன்னொரு சம்பவம் கேரளாவில் நடந்தது. அவர் முகாமிட்டிருந்த இடத்தில் பக்கத்து அறையில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவரது கவனத்தைக் கவர்ந்தது. பக்கத்து அறையில் பூஜை செய்யப் போன ஒரு நம்பூதிரி அங்கிருந்தவர்களுடன் அரட்டையில் பங்கு கொண்டார். சிறிது நேரத்தில் அவர் தன் தவற்றை உணர்ந்து கொண்டார். பூஜையில் அவர் மனம் செல்லவில்லை. தன் தவற்றைப் பகிரங்கமாகக் கூறி, மனம் பூஜை செய்யும் லயத்தில் இல்லை என்று அவர் கூறியதையும் ஆச்சார்யாள் கேட்டார். அவரது குறிக்கோளில் இருந்த நேர்மை ஆச்சார்யாளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

நேசித்துப் போற்றியோர்

அடுத்து ஆசார்யாள், தன்னை மிகவும் அன்பு பாராட்டி மதித்து நேசித்தவர்கள் எப்படித் தன்னைப் போற்றினர் என்பதை எடுத்துக் கூறுகிறார், இறுதியில் கட்டுரையை “கடவுள், சிலரைப் பிறருக்காகவே வாழப் படைத்திருக்கிறார்” என்ற வரியுடன் முடிக்கிறார்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

- கோமதி சுரேஷ்



Leave a Comment